நான் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன்!’- பதவி பறிப்பால் கொதித்த டி.ஆர்.பாலு

தி.மு.க-வின் முதன்மைச் செயலராக இருந்து வந்தவர் டி.ஆர் பாலு. அவரிடமிருந்த பதவியை, கட்சித் தலைமை பறித்து கே.என்.நேருவுக்கு வழங்கியிருக்கிறது. இந்த

விவகாரத்தில், “எல்லாவற்றையும் நீங்களே முடிவெடுத்துவிட்டு எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்” என ஸ்டாலின் முன்னிலையே டி.ஆர்.பாலு கொந்தளித்திருக்கிறார். அதோடு கே.என்.நேரும், `ஒருவரை முன்னிலைப்படுத்த என்னை பலிகடா ஆக்குகிறார்கள்’ என மேலிடப் பொறுப்பாளரிடம் வேதனைகளைப் பரிமாறியிருக்கிறார் என்கிறார்கள். `இருவருக்கும் மனவருத்தம் ஏற்பட என்ன காரணம்? யாரைக் கொண்டு வருவதற்காக இவ்வளவு நெருக்கடி கொடுக்கிறது தி.மு.க தலைமை?’ என்பது குறித்து விசாரித்தோம்.

ஸ்டாலின் – கே.என்.நேரு

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தி.மு.க செயற்குழு கூட்டத்தில் ஆளும் கட்சியினர் மீது இவ்வளவு வெறுப்புகள் இருந்தும் எதிர்பார்த்த வெற்றிகள் பெறமுடியவில்லை என்பதை ஸ்டாலினின் செயற்குழு பேச்சின் மூலமாகக் கண்கூடாகப் பார்க்கமுடிந்தது.

இதனிடையே, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, கூடுதலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவிக்கான வேலைகளையும் பார்த்து வந்தார். இரு பதவிகள் வகிப்பதால் அவருக்கு கூடுதல் சுமையாக இருந்தது. அதனால் கே.என்.நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. முதலில், தி.மு.க தலைமையின் இந்த முடிவை கே.என்.நேருவும் ஆட்சேபித்ததாகவும் ஸ்டாலின் சமாதானம் செய்த நிலையில் அவர் அமைதியானதாகவும் சொல்கிறார்கள்.


டி.ஆர்.பாலு, ஸ்டாலின்

இந்த நிலையில், முதன்மைச் செயலாளர் மாற்றம் குறித்த ஆலோசனையின்போது பல்வேறு விவாதங்கள் தனி அறையில் நடந்திருக்கிறது. முதன்மைச் செயலாளர் பதவியில் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு என இருவருமே இருக்கும் வகையில், இரண்டு முதன்மைச் செயலாளர்கள் பதவியை உருவாக்கலாம் என முதலில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். அதற்கு டி.ஆர்.பாலு, `ஏன் இப்படி பண்றீங்க… என்னோட சீனியாரிட்டி என்ன? அவரோட சீனியாரிட்டி என்ன? ரெண்டு முதன்மைச் செயலாளர்கள் எல்லாம் சரிப்பட்டு வராது. நான் வெறும் எம்.பி-யாகவே இருந்து கொள்கிறேன். என்னை விட்டுடுங்க’ என்று ஸ்டாலினிடம் வருத்தம் கலந்த கோபத்தில் பேசியிருக்கிறார்.


மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஐ.பெரியசாமி

அப்போது ஸ்டாலின் டி.ஆர்.பாலுவிடம், `நேருவும் தீவிரமாகக் கட்சிப் பணி செய்யக் கூடியவர்தானே. அவரும் சீனியர்தானே” என்று சொல்லி முடிப்பதற்குள் அவர் மறுத்துப் பேசியிருக்கிறார். அதன்பின்னர், `நீங்கள் நாடாளுமன்றப் பணிகளைப் பாருங்கள்’ என்று சொல்ல, பதில் எதும் சொல்லாமல் வெளியே சென்றுவிட்டாராம் டி.ஆர்.பாலு. இப்படிப்பட்ட பின்னணியில்தான் கே.என்.நேரு முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் தி.மு.க வட்டாரத்தில்.

“திருச்சி மாவட்டத்தில் முடிசூடா மன்னாக வலம் வந்தவர் கே.என்.நேரு. சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக மாவட்டச்செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த இடத்துக்கு அன்பில் மகேஷைக் கொண்டு வரத் திட்டமிட்டிருக்கிறார், ஸ்டாலின்.


அன்பில் மகேஷ் – உதயநிதி

உதயநிதிக்கு வலதுகரமாக இருப்பவர்தான் அன்பில் மகேஷ். இவர் திருவெறும்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் கே.என்.நேருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வந்திருக்கிறது. மேலும், நேருவைத் தாண்டி அவரால் திருச்சி மாவட்டத்தில் அரசியல் செய்யமுடியவில்லை.

`என்னதான் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்தாலும் மாவட்டத்தில் ராஜாவாக இருக்கத்தான் ஆசைப்படுவார்கள். அந்த வகையில் நேருவை மாநிலப் பதவிக்கு தள்ளிவிட்டு மகேஷை மாவட்டச் செயலாளர் ஆக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்” என ஆதங்கப்படுகின்றனர் திருச்சி தி.மு.க நிர்வாகிகள்.

%d bloggers like this: