கொரோனா வைரஸ்: ‘பாதிக்கப்பட்டவர் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு’

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படாத சூழலில், இந்த காய்ச்சலில் இருந்து தப்பிக்க, கைகளை எப்போதும் தூய்மையாய் வைத்திருப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பில் இருந்து விலகி இருப்பது இரண்டும் முக்கியம் என்று தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநர் மகிழ்மாறன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணத்தைத் தழுவியுள்ள நிலையில், சீனாவில் இருந்து இந்தியா திரும்பும் பலருக்கும் விமான நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு சீனாவில் இருந்து திரும்புபவர்கள், ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் கொரோனா வைரஸ் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்புக்கு யாராவது ஆளானால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற வைரஸ் காய்ச்சலில் இருந்து வேறுபட்டதா, இந்த காய்ச்சலின் அறிகுறிகள் என்ன, சிகிச்சை முறைகள் என்ன என தமிழக அரசின் நெஞ்சக மருத்துவ நிலைய இயக்குநரிடம் பேசினோம். அந்தப் பேட்டியில் இருந்து…

கேள்வி: பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என பல்வேறு காய்ச்சல்களைக் கடந்த சில ஆண்டுகளில் நாம் கண்டிருக்கிறோம். இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் எந்த விதத்தில் வித்தியாசமானது?

காய்ச்சலுக்கு மூலக் காரணம் ஒரு நுண்கிருமி. பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சலுக்கு காரணமான நுண்கிருமி எது என்றும் எந்த விலங்கில் இருந்து நோய்த்தொற்று ஏற்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால்,கொரோனா வைரஸ் நுண்கிருமி எந்த விலங்கில் இருந்து பரவுகிறது என தற்போதுவரை தெரியவில்லை.

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் உள்ள அசைவ உணவு சந்தையில், பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவி இருப்பதாக சீனா அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் இன்றுவரை நுண்கிருமி தொற்று எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை.

மற்றபடி, இந்த காய்ச்சல் பிற வைரஸ் காய்ச்சல் போன்றதுதான். பெரிய வித்தியாசங்கள் இல்லை. இதுவரை மூலம் தெரியாததால், தடுப்பு மருந்து உருவாக்கமுடியவில்லை.

இது பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு, அந்த நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்த நிலையில் இருந்தால், உயிர்பிழைக்கும் வாய்ப்பு குறைவுதான்.

கேள்வி: கொரோனா வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்ன?

சாதாரண காய்ச்சல் போலதான் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடங்கும். சளி, தொடர் இருமல், உடல்வலி என தொடங்கி, மூச்சுத்திணறல் அதிகரிக்கும்.

இந்த காய்ச்சலின் தாக்குதல் இந்தியாவில் இதுவரை பரவவில்லை. சீனாவில் கூட, வுஹான் மாகாணத்தில் உள்ளவர்களுக்குத்தான் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பீதியடைய வேண்டாம். உடலில் எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்தவிதமான கிருமியாக இருந்தாலும், அது பாதிப்பதை நம் உடலே கட்டுப்படுத்திவிடும்.

கேள்வி: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்படும்?

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர் முகமூடி அணியவேண்டும்.

அவருக்கு ஐவி ஃப்லூய்ட்ஸ் (IV fluids) என்று சொல்லப்படும் நரம்பு மூலமாக உடலுக்கு வலுசேர்க்க மருந்து செலுத்தப்படும். ஆனால் மூச்சுத்திணறல் அதிகரித்து, காய்ச்சல் தொடர்ந்து நீடித்தால், செயற்கை சுவாசக் கருவியைப் பொருத்த வேண்டும்.

உறுப்புக்கள் செயல்படுவது குறைந்துகொண்டே வந்தால், அவர் உயிர்பிழைப்பது சிரமமாக இருக்கும். நோயாளியின் நோய் எதிர்ப்புத் திறனைப் பொறுத்துதான் அவரை காப்பாற்றமுடியுமா என தெரியும்.

கேள்வி: இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதா என எவ்வாறு கண்டறிவீர்கள்?

கொரோனா காய்ச்சல் இருப்பதாக ஒருவர் அனுமதிக்கப்பட்டால், முதலில் அவரது சளி துகளை சோதனைக்கு அனுப்புவோம். அவர் சீனாவுக்கு சமீபத்தில் பயணம் செய்தவரா என்றும் சீனாவில் வுஹான் மாகாணத்தில் வசித்தவரா என கேட்டறிவோம்.

அவர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தாரா என்றும் தெரியவேண்டும். சளி துகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை அறிவியல் ரீதியாககண்டறியமுடியும்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவுவதை எவ்வாறு தடுக்கமுடியும்?

பாதிக்கப்பட்டவர்களோடு மற்றவர்கள் தொடர்பில் இருக்க கூடாது. பாதிக்கப்பட்டவர் இருமல், தும்மல் ஏற்படும்போது கைகளை வைத்து மூடி சளி வெளியில் படாதவாறு செய்யலாம்.

அவரின் சளியின் துளி ஏதாவது உங்களுக்குதெரியாமல் உங்கள் மீது பட்டால், நோய் தொற்று ஏற்படவாய்ப்புண்டு. இதுவரை நோயின் மூலக் காரணம் தெரியவில்லை என்பதால், இதன் பரவலைத் தடுக்க, கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதை பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பொருட்களை நீங்கள் தொடக்கூடாது.

கைகளை எப்போதும் தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். பாதிக்கப்பட்டவரோடு நேரடியாக தொடுவதோ, அவருடைய எச்சில் படும்படி அருகில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் இருந்தால் முகமூடி அணிந்துகொள்ளவேண்டும்.

%d bloggers like this: