நினைவாற்றலுக்கு அடிப்படை மறதி!

ஞாபக மறதி இல்லாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியோர் வரை மறதி இல்லாத மனிதர் இல்லை. மறதிகள் பலவிதமாக உள்ளன. சிலர் பழகிய மனிதர்களின் பெயர்கள்

அல்லது முகங்களைக் கூட அடிக்கடி மறந்து விடுகின்றனர். சிலர் பொருள்களின் பெயர்களை மறந்து விடுகின்றனர். சிலர் தம் உடைமைகளை, பொருள்களை எங்கே வைத்தோம் என்பதை மறந்து விடுகின்றனர். சிலர் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைக் கூட மறந்து விடுகின்றனர்.
பெயர்கள், திறன்கள், நிகழ்வுகள் தகவல்களை ஆகியவற்றை மறந்துவிடுவதை பெரும்பாலானோர் மனிதர்களின் குறையாகக் கருதுகின்றனர். நினைவாற்றலை அதிகரிக்க வேண்டும் என்று யோகாசனம், உடற்பயிற்சி செய்வதோடு, ஊட்டச்சத்து உணவுகளையும் சேர்த்துக் கொள்கின்றனர்.
இவை உடலுக்கு நன்மைதான் என்றாலும், ஒரு சிலர் மறதியை ஒரு நோயாகக் கருதி அதற்காக மருத்துவர்களை அணுகுகின்றனர்.
ஆனால், உண்மையில் ஞாபக மறதி, மூளையின் செயல்பாட்டில் ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. மூளையில் நீண்டகாலம் நிகழ்வுகளைத் தக்க வைப்பதற்கு, தகவல்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்கு மற்றும் மூளையின் செயல்திறனை அதிகரிப்பதற்கும் ஞாபக மறதி உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நினைவாற்றலின் தகுதி
நம் வாழ்க்கையில் நிகழும் பெரும்பாலான விஷயங்கள், நாம் இப்போது அனுபவிக்கும் விஷயங்கள் ஆகியவற்றை நாம் வயதாகும்போது மறந்து விடுவோம் என பலர் வருத்தப்படுகின்றனர். வயதான சிலருக்கு மறதி என்ற விஷயம் ஒருவித வெறுப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், நமது மூளை அதிகம் மறப்பது, ஆரோக்கியமான நினைவாற்றலின் ஒரு தகுதியாகும்.
ஏனெனில், முக்கியமானவற்றை விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வருவதற்கும், தேவையில்லாதவற்றைப் புறக்கணிக்கவும் நமக்கு மூளை உதவுகிறது. நினைவுகளைச் சேமிப்பது மற்றும் இழப்பது ஆகிய இரண்டும்தான், நமக்கு தேவையான நேரத்தில் நினைவில் இருக்கும் மிகவும் பொருத்தமான தகவல்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு, நமக்கு தொடர்புடைய தகவல்களை நினைவில் இருந்து மீட்டெடுப்பதற்காக, மூளை தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொள்கிறது.
கற்றலைப் பலப்படுத்த
மறப்பது, கற்றல் மற்றும் மனப்பாடம் செய்யும் செயல்முறையின் ஒரு பகுதி என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. நாம் நிறைய கற்கும்போது, புதிய தகவல்களை மூளை அனுமதிக்கிறது. புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டவுடன், நமது மூளை அதற்கு செயல்வடிவம் அளிக்கிறது. அந்த தகவலின் முக்கியத்துவத்தைக் கொண்டு அதை வரிசைப்படுத்த மூளை வேலை செய்கிறது.
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அதே விஷயத்தை நாம் கற்கும்போது, மீண்டும் நமது மூளை அதே செயல்களைச் செய்யும். இவ்வாறு செய்யும்போது, தேவையற்ற சில தகவல்களை மூளை மறக்கிறது. அந்த மறதியே கற்றலை மேலும் பலப்படுத்துகிறது.
எதிர்காலத்துக்கான திறவுகோல்
மூளையில் ஒரு சிறிய குப்பை சேகரிப்பவர் போல மறதி உள்ளது. அடிக்கடி பயன்படுத்தப்படாத விஷயங்களை அது மறக்கச் செய்கிறது. தேவையற்ற நிகழ்வுகளை நமது நினைவில் இருந்து கத்தரித்து, முக்கிய நிகழ்வுகளை நினைவில் வைத்துக் கொள்ள இது உதவுகிறது. உலகத்தை முழுமையாகவும் உடனடியாகவும் அனுபவிக்க இந்த மறதி அனுமதிக்கிறது. நம் வாழ்க்கையில் வேதனையான நிகழ்வுகளை மறக்க உதவுகிறது.
மறதி, நம்மை கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி முன்னேற உதவுகிறது. கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நினைவில் வைத்துக் கொண்டேயிருந்தால், நிகழ்காலம் வீணாகிவிடும். இதனால் நமது மூளையில் மறதியை நாம் அனுமதிக்க வேண்டும்.
மறதியின்மையே நோய்
ஆரோக்கியமான மூளைக்கு மறதி அவசியம். நம் மூளைகளில் மறதி எனும் செயல்பாடு நிகழவில்லையெனில், அதன் செயல்பாடு குறைந்து விடும். மறதி இல்லையென்றால் நாம் எப்போதும் தேவையற்ற மற்றும் வேதனையான நினைவுகளால் வருத்தப்பட்டுக் கொண்டிருப்போம்.
அனைத்தையும் நினைவில் வைத்திருப்பவர்கள், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். விஷயங்களை மறப்பதில் சிரமங்கள் உள்ளவர்கள் உளவியல் பிரச்னைக்கு ஆளாகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும், அதிக விஷயங்களை நினைவில் வைத்திருப்பது நினைவாற்றலை மந்தமடையவே செய்யும். அதனால், பொருத்தமற்ற விஷயங்களை மறந்துவிடுவது நமது நினைவாற்றலை அதிகரிப்பதற்கான ஒரு செயல்முறையாகும். இதையுணர்ந்து மறதி குறித்து வருத்தமடைவதை தவிர்ப்போம்.

%d bloggers like this: