சட்டமன்றத் தேர்தலுக்கு 3000 கோடி டார்கெட்… அமைச்சர்களை நெருக்கும் எடப்பாடி?!

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே மீதமிருக்கும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் இப்போதிருந்தே ஜரூராகத் தேர்தல் பணியாற்ற ஆரம்பித்துவிட்டன. நேற்று முன்தினம், ஜனவரி 31-ம் தேதி

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க ஊராட்சி உறுப்பினர்கள் மாநாட்டிலும் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.

அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திண்டுக்கல் ஐ.பெரியசாமி பேசும்போது, “உள்ளாட்சித் தேர்தலில் என்னென்ன வியூகங்களை வகுத்து வெற்றி பெற்றீர்களோ, அதே வியூகங்களை வரும் சட்டமன்றத் தேர்தலிலும் செயல்படுத்திட வேண்டும். ஒருவருடத்துக்கு விரதமிருங்கள். எந்தப் புகாரிலும் சிக்காமல், மக்களுக்குத் தொண்டாற்றினால்தான் சட்டமன்றத் தேர்தலை நாம் திறம்பட எதிர்கொள்ள முடியும். தலைவர் ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால்தான், உள்ளாட்சிகளுக்கான அதிகாரங்களைக் கூட மீட்டெடுக்க முடியும். இப்போதிருந்தே தேர்தல் வேலையை ஆரம்பித்துவிடுங்கள்” என்றார்.

ஒன்பது வருடங்கள் ஆட்சி அதிகாரத்தைச் சுவைக்க முடியாமல் இருக்கும் தி.மு.க, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்தே தீருவது எனத் தீவிரமாக இருக்கிறது.

அ.தி.மு.க முகாமில் என்ன செய்கிறார்கள்..? கேள்வியுடன் அக்கட்சியின் சீனியர்களிடம் பேசினோம். `நிதியில்லாமல் தேர்தலில்லை. முதலில் நிதி திரட்டுவதற்கான வேலையை ஆரம்பித்துள்ளோம்’ எனப் பேச ஆரம்பித்தார்கள்.

“அம்மா இருந்தபோது ஒவ்வொரு அமைச்சரும் குறிப்பிட்ட தொகையைக் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக மாதம்தோறும் அளித்தனர். கட்சிக் கூட்டங்களின்போதும், பொதுமக்கள், நிறுவனங்களிடம் இருந்தும் வசூலிக்கப்படும் இந்த நிதியை முறையாக அ.தி.மு.க-வின் வங்கிக் கணக்குகளில் வரவு வைத்து, தேர்தல் காலத்தில் பயன்படுத்தி வந்தோம். அம்மா இறந்த பிறகு, மாதம்தோறும் அளிக்கப்பட்ட இந்தக் கட்சி வளர்ச்சி நிதி `கட்’டாகிவிட்டது.

சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை தனித்தனியாகச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்துதான் விவாதித்துள்ளார். ஆலோசனையில் முதல் ஆளாக பங்கேற்ற துணை முதல்வரும் அ.தி.மு.க-வின் பொருளாளருமான ஓ.பி.எஸ், `தேர்தலைச் சந்திக்க தொகுதிக்கு சுமார் 10 கோடி வீதம் மொத்தம் 2,000 கோடி ரூபாயை இறக்கவும் தி.மு.க-காரங்க தயாரா இருக்காங்க. நாமளும் பணத்தை ரெடி பண்ணோம்னா மட்டும்தான் தெம்பா தேர்தலைச் சந்திக்க முடியும். அமைச்சர்களிடமிருந்து மாதம்தோறும் வரக்கூடிய நிதியும் நின்னு போச்சு. நீங்க பேசுனா மட்டும்தான் சரிப்படும்’ என்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஒவ்வோர் அமைச்சரையும் தனித்தனியாகச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `நிதி இல்லாம தேர்தலை சந்திக்கிறது பைத்தியக்காரத்தனம். மூணு வருஷமா யாரும் கட்சி நிதியே கொடுக்கிறது இல்ல. நானும் கட்டாயப்படுத்துறத விட்டுட்டேன். இனிமேலும் அந்த அசட்டுத்தனம் இருக்கக் கூடாது. அடுத்த ஆறு மாசத்துக்குள்ள 3,000 கோடி தேர்தல் நிதி வசூலிச்சாகணும். நான் உட்பட பெரிய துறையை வைச்சிருக்கிற அமைச்சர்கள் கூடுதலான பங்களிப்பைக் கொடுக்கணும். அடுத்த தேர்தல்ல ஜெயிக்கணும்னு நினைச்சீங்கன்னா தேர்தல் நிதி வசூலிச்சு கொடுங்க’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார்.

`எங்ககிட்ட எங்கண்ணே அவ்வளவு பணமிருக்கு’ என முனகிய சில அமைச்சர்களிடம், `அம்மா இருந்தப்போ உங்களுக்கு இருந்த கட்டுப்பாடு, இப்ப இருக்கிற சுதந்திரம் என்னன்னு உங்களுக்குத் தெரியும். தெரிஞ்சுக்கிட்டே பணம் இல்லைனு சொன்னா எப்படி? நீங்க யாரும் பணமூட்டையைத் திறக்காததாலதான், ஊராட்சி தேர்தல்ல நாம ஜெயிக்கக்கூடிய இடங்களிலும் தோல்வியடைய வேண்டியதா போச்சு.

வர்ற மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல்ல உங்க மாவட்ட வேட்பாளர்களுக்குத் தாராளமா செலவு செய்யுங்க. சந்தையில் ஆடு வாங்குற மாதிரி கடைசி நேரத்துல கவுன்சிலர்களை வாங்கிக்கலாம்னு இருந்துறாதீங்க. தி.மு.க-காரங்க ரொம்ப உஷாரா இருக்காங்க. மாநகராட்சி, பேரூராட்சிகளைப் பிடிச்சா மட்டும்தான், சட்டமன்றத் தேர்தலை தெம்பா எதிர்கொள்ள முடியும். கட்சிக்காரங்களும் உற்சாகமா வேலை செய்வாங்க” என முதல்வர் எச்சரித்து அனுப்பியுள்ளார்” என்றனர்.

முதல்வரின் எச்சரிக்கையால் அமைச்சர்கள் தேர்தல் நிதி வசூலிக்கும் வேலையில் கனஜோராக இறங்கிவிட்டார்களாம். 3,000 கோடி ரூபாய் டார்க்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆறுமாதத்துக்குள் என்னென்ன டெண்டர்கள் புதிதாக முளைக்கப்போகிறதோ எனப் பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது தலைமைச் செயலகம்.

%d bloggers like this: