இண்டர்நெட்டில் என்னதான் தேடுகிறார்கள்?!

பொதுமக்களிடம் மருத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இணையதளம் பயன்பாடு அதிகரித்த பிறகு எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுதான் மருத்துவமனைக்கே வருகிறார்கள். இது ஒருவிதத்தில் எங்களுக்கு உதவிகரமாகவும் இருக்கிறது. ஆனால்…’ – சமீபகாலமாக டாக்டர்கள் அதிகம் சொல்கிற விஷயம் இது.

இணையதள தேடல் பற்றி டாக்டர்கள் சொல்வதை கடைசியில் பார்ப்போம். அப்படி என்னதான் பொதுமக்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று 2019-ம் ஆண்டின் அடிப்படையில் கூகுள் ஓர் அறிக்கையினை வெளியிட்டிருக்கிறது. முதலில் பருவகால ேநாய்கள் பற்றி மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். சாதாரண சளி, இருமலிலிருந்து அவ்வப்போது அச்சுறுத்தி வரும் டெங்கு வரை தேடுவது அடிப்படையாக இருக்கிறது. பலர் பிரபலங்களைத் தாக்கியிருக்கும் நோய்கள் பற்றியும் ஆர்வமாகப் படிக்கிறார்கள்.
தீபிகா படுகோனேவுக்கு வந்த மன அழுத்தமாக இருந்தாலும் சரி… சல்மான்கானுக்கு ஏற்பட்டிருக்கும் டிரைஜெமினல் நியூரால்ஜியாவாக இருந்தாலும் சரி… பிரபலங்களுக்கு ஏற்படும் நோயும் இதனால் சமூகத்தில் பிரபலமாகிவிடுகிறது. இதேபோல் சமகால நாட்டு நடப்புகளை அதிகம் தேடுகிறார்கள். கடந்த ஆண்டு லிச்சி பழத்தால் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டது, உயிரிழப்புகள் நடக்கின்றன என்ற தகவல்கள் வெளியாகி எல்லோரையும் உலுக்கியது. இதன் தொடர்ச்சியாக மூளைக்காய்ச்சல் பற்றியும், லிச்சி பழம் பற்றியும் அதிகம் தேடியிருக்கிறார்கள். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் என்பதைப் போலவே, நீரிழிவு நோயும் பெருகிவிட்டது என்பது தெரிந்ததுதான். இதனால், நீரிழிவு நோய் குறித்த தேடல்களும் லட்சக்கணக்கில் நீள்கின்றன.
இந்த தேடல் குறித்து மருத்துவ உலகம் சொல்வது என்ன?‘ஒரு நோய் பற்றிய அறிகுறிகளைப் படிக்கும்போது, இல்லாத நோயும் நமக்கு ஏற்பட்டிருப்பது போன்ற மாயையை உண்டாக்கும். இதனால் இணையதள தரவுகள் அடிப்படையில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நோயினைத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம். மருத்துவம் அதிவேகமாக வளர்ந்து வருவதால், Update ஆகாத பழமையான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் சாத்தியம் உண்டு. சில தனியார் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்துக்கு சாதகமான அறிக்கைகளையும் வெளியிடுகின்றன.
அவற்றை நீங்கள் நம்பிவிடக் கூடும். நோய் குறித்த அதீத கவலையும் தவறான வழியில் உங்களை திசை திருப்பலாம். எனவே, இணையதள தேடுதலில் எச்சரிக்கை அவசியம்’ என்பதே மருத்துவர்கள் கூற விரும்பும் முக்கிய ஆலோசனை!‘ஒரு மருத்துவர் உங்களை நேரடியாக ரத்தமும், சதையுமாக பரிசோதிக்கும்போது மட்டுமே நோயின் தன்மை முழுமையாகப் புரிய வரும். நீங்கள் ஒரு ‘க்ளிக்’கில் தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு நோய் பற்றி, மருத்துவர்கள் வருடக்கணக்கில் கல்லூரியில் படிக்கிறார்கள். எத்தனையோ நோயாளிகளை தங்கள் அனுபவங்களிலும் பார்க்கிறார்கள். அதனால் உங்களுடைய சந்தேகங்களையும், மருத்துவ அறிவையும் விவாதிக்கப் பயன்படுத்துங்கள். அது மருத்துவரின் நேரத்தை வீணாக்குவதாகவோ, விதண்டாவாதம் பேசுவதாகவோ மாறிவிடக் கூடாது என்பதையும் மனதில் கொள்ளுங்கள்’ என்பதும் மருத்துவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

%d bloggers like this: