`ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு..?!’- தேர்தலை முன்வைத்து உச்சக்கட்ட மோதலில் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்

வருமானம் வரும் துறைகளை நீங்களும், உங்களது ஆதரவாளருக்கும் எடுத்துக்கொண்டீர்கள். பட்ஜெட்டில் இதே வேலையைத்தான் அரங்கேற்றியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, எவ்வளவு கொடுக்கிறீர்கள் எனக் கேட்டால் நான் எப்படி கொடுக்க முடியும்” என ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் மோதல்

உச்சத்தைத் தொட்டிருப்பதாக கோட்டைக்குள்ளே நடக்கும் பிரச்னைகளை வாசிக்கத் தொடங்குகிறார்கள், கோட்டை வட்டாரத்தினர்.

கடந்த 10-ம் தேதி முதல் நடந்த அ.தி.மு.க-வின் ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வாரியாக மாவட்டச் செயலாளர் முதல் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வரையிலான முக்கிய நிர்வாகிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் சந்தித்துப் பேசினார்கள். இதில் தஞ்சை, திருச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த அரசியல் உள்ளடி வேலைகளைப் புகார்களாகக் கொட்டியதாகப் பேசப்பட்டது. திருவண்ணாமலை நிர்வாகிகள் ஒரு படி மேலே போய், எம்.எல்.ஏ தூசி மோகனை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து மாற்றுங்கள்.

அவரால்தான் கட்சி அழிந்துகொண்டிருக்கிறது என்று கோஷமிட்டனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் குறைகளைக் கேட்ட ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ், `கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்டத்திற்கும் சேர்த்து வருகிற ஏப்ரல் மாதம் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்குத் தயாராகுங்கள்’ என்று இருவரும் கூட்டாகப் பேசியிருக்கிறார்கள்.

அப்போதே முக்கிய நிர்வாகிகள் சிலர், “அம்மா இருக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வைட்டமின் `ப’ கொடுத்து வேலை தொடங்கச் சொல்வார்கள். இந்த முறையும் தலைமையிலிருந்து கவனித்தால் தொண்டர்கள் வேலையைத் தொடங்குவார்கள் என மறைமுகமாகப் பேசியிருக்கிறார்கள். அதற்கு வரவேண்டிய நேரத்தில் சரியாக வரும்” என்று ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவரும் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருக்கும் இடையே பிரச்னை வெடித்துள்ளது என்று பேசத் தொடங்கியுள்ளனர் ரத்தத்தின் ரத்தங்கள்.

இருவருக்குள் என்ன பிரச்னை நடக்கிறது என்று சிலரிடம் பேசினோம். “தற்போது நடக்கவிருக்கும் தேர்தலுக்கு யார் செலவு செய்வது என்ற போட்டிதான் பூதாகரமாக வெடித்துக்கொண்டிருக்கிறது” என்று பேசத் தொடங்கியவர்கள், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சிலர் எடப்பாடிக்கு எதிராக நடந்துகொண்டார்கள். அதோடு, அவருக்கு எதிரான பல வேலைகளிலும் இறங்கினார்கள். இதைத் தெரிந்துகொண்ட எடப்பாடி, ஆட்சிக்கு எந்தவித பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஓ.பி.எஸ் அணியினரை வளைக்கும் வேலைகளில் மறைமுகமமாக இறங்கினார்.

இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு டெண்டர்கள் முதல் கான்ட்ராக்ட் வரை கொடுத்து தம் பக்கம் இழுத்ததோடு, ஓ.பி.எஸ்ஸை நம்பி வந்தோம். எதுவும் செய்யவில்லை என்ற தோற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவரை நம்பி வந்த சிலரும் மறைமுகமாக பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், மாநிலங்களவை பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைகிறது. மூன்று சீட் இருக்கும் நிலையில், இவற்றை யார் யாருக்கு கொடுப்பது என்பதுதான் அடுத்த சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருபுறம் பா.ம.க, தே.மு.தி.க போன்ற கூட்டணிக் கட்சிகள் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. மறுபுறம், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எப்படியாவது எம்.பி பதவி வாங்கிக்கொடுங்கள் என நச்சரித்துவருகிறார்களாம். ஆனால், இந்தப் பதவிகளைக் கொடுக்க எடப்பாடி சம்மதம் தெரிவிக்கவில்லை. அப்படி கொடுத்தால், தேர்தல் செலவை நீங்கள் பாதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வைத்திருக்கிறாராம்.

அதற்கு ஓ.பி.எஸ், வருமானம் வரக்கூடிய துறைகள் எல்லாவற்றையும் நீங்களும் உங்களது ஆதரவு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். பட்ஜெட்டிலும் அதிகமான பணத்தை ஒதுக்கியிருக்கிறீர்கள். இப்படி இருந்துகொண்டு, வருமானம் வரும் துறைகளை நீங்கள் வைத்துக்கொண்டு எங்களிடம் எவ்வளவு பணம் தருகிறீர்கள் எனக் கேட்டால் என்ன அர்த்தம்” என்று எடப்பாடியைச் சீறியதாகச் சொல்கிறார்கள். தற்போது நகர்ப்புற தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் யார் செலவு செய்வது என்பதில் உண்டான போட்டி கடுமையாக ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

%d bloggers like this: