சசிகலாவைச் சந்தித்த பா.ஜ.க பிரமுகர்…

கழுகார்
அலுவலகத்துக்குள் நுழைந்ததும், தயாராகிக்கொண்டிருந்த கட்டுரைகளைப்
புரட்டிப் பார்த்தார். ‘‘நீட் ஆள்மாறாட்ட விவகாரம், மருத்துவர் சுப்பையா
கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்று இந்த இதழ் ஃபாலோ-அப்

ஸ்பெஷலாக வெளிவந்திருக்கிறதே!’’ என்றவரிடம், “சி.ஏ.ஏ விவகாரத்தில் தி.மு.க
இவ்வளவு தீவிரம்காட்டியும், கடைசிவரை சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர
முடியவில்லையே!’’ என்ற கேள்வியை வீசினோம். விவரிக்க ஆரம்பித்தார்
கழுகார்…

‘‘அப்படி தீர்மானம் கொண்டுவந்திருந்தால், அது
தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றியாகப் பேசப்பட்டிருக்கும். எடப்பாடிக்கும்
இந்த எண்ணம் இருந்ததாகவும், அமைச்சர்கள் சிலர் எச்சரித்ததால்தான் அது
முடியாமல்போய்விட்டது என்றும் சொல்கிறார்கள். இதை மனதில்வைத்தே ‘சிறைக்கு
பயந்துதான் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தீர்மானம்போட அரசு தயங்குகிறது’ என்று
ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.’’

‘‘இதற்கு எடப்பாடியின் ரியாக்‌ஷன்?’’

‘‘சி.ஏ.ஏ-வுக்கு
எதிரான போராட்டங்கள் உச்சம்பெற்ற நிலையில் உள்துறைச் செயலாளர் மற்றும்
அரசு தலைமை வழக்கறிஞர் இருவரையும் அழைத்த முதல்வர், ‘இஸ்லாமியர்களுக்கு
எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்’ என்று சொல்லியிருக்கிறார்.
இதையே நீதிமன்றத்திலும் அரசின் வாதமாகக் கூறச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘நிஜமாகவா?’’

‘‘ஆமாம்.
பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் சிலர்
இதை ஆட்சேபித்து ‘எப்படியும் முஸ்லிம்கள் நமக்கு ஓட்டுபோடப்போவதில்லை.
பிறகு எதற்காக நாம் பா.ஜ.க-வைப் பகைத்துக்கொள்ள வேண்டும்?’ என்று
கேட்டிருக்கிறார்கள். அதற்கு ‘நாம, நம்மள நம்பித்தான் இருக்குறோம்…
யாரையும் நம்பி இல்லை’ என்று சொல்லி ஆஃப் செய்துவிட்டாராம்.’’

‘‘தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?’’

‘‘விவாதங்கள் எதுவும் பெரிதாக நடக்க

வில்லையாம்.
இதுவரை மாவட்டச் செயலாளர் என்ற பதவியில் கீழே அமர்ந்திருந்த நேரு,
முதன்முறையாக மேடையில் அமர்ந்திருந்தார். அவர் பேசுவதற்கும் வாய்ப்பு
அளிக்கப்பட்டிருக்கிறது.’’

‘‘ஆர்.எஸ்.பாரதியின் ஊடகங்களுக்கு எதிரான சர்ச்சைப் பேச்சு விவகாரம் அமுங்கிவிட்டதா?’’

‘‘அன்பகத்தில் அவர்
பேசி இரண்டு நாள்கள் கழித்துதான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
ஸ்டாலின் கவனத்துக்குப் போனதும், ஆர்.எஸ்.பாரதியை அழைத்து ‘நீங்கள்
வருத்தம் தெரிவிக்க வேண்டும்’ என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியிருக்கிறார்.
அதற்குப் பிறகுதான் வருத்தம் தெரிவித்திருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி. இந்த
விவகாரத்தில் திருமாவளவன் கருத்து என்னவாக இருக்கும் என்று அனைத்துத்
தரப்பிலும் எதிர்பார்த்தனர். அவர் எந்த ரியாக்‌ஷனும் கொடுக்கவில்லை.
அதைத்தான் ‘செஞ்சோற்றுக்கடன் தீர்க்க அமைதியாக இருக்கிறாரா திருமாவளவன்?’
என மக்கள் நீதி மய்யம் கமென்ட் அடித்திருக்கிறது.’’

‘‘பிப்ரவரி முதல் வாரத்தில் பெங்களூரு சிறையில் சசிகலாவை டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர் வந்து பார்த்தார் என்கிறார்களே… நிஜமா?’’

‘‘அவர்
யாரென்று தெரியவில்லை. ஆனால், ஒருவர் வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்.
ஏற்கெனவே சுப்பிரமணியன் சுவாமி மூலம் சில மூவ்களை மத்திய உள்துறை அமைச்சகம்
வரை நகர்த்திவிட்டனர். இன்னும் மத்திய அரசுத் தரப்பிலிருந்து கிரீன்
சிக்னல் வரவில்லையாம். அடுத்த சட்டமன்றத் தேர்தல் அஜெண்டாவை முன்வைத்து
இவரின் விடுதலைக்கு நாள் குறிக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் பா.ஜ.க. இது
தெரிந்து அதிர்ந்துபோயிருக்கும் அ.தி.மு.க-வினர், அந்தப் பிரமுகர் யாரென
விசாரிக்கிறார்கள்.’’

‘‘அ.தி.மு.க-வில் தேர்தல் ரேஸ் ஆரம்பித்துவிட்டதாமே?’’

‘‘ஓ…
ராஜ்யசபா தேர்தல் ரேஸ் பற்றிச் சொல்கிறீரா? ஏப்ரல் மாதம் காலியாகவுள்ள
மூன்று இடங்களுக்குத்தான் கடும்போட்டி. `அ.தி.மு.க சார்பில்
நாடாளுமன்றத்தில் வலிமையுடன் பேசுவதற்கு ஆள் இல்லை’ என முதல்வர் எடப்பாடி
பழனிசாமி நினைக்கிறார். அதனால், நல்ல பேச்சாளர் இருவரையாவது அனுப்ப
வேண்டும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சொல்லியிருக்கிறார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அல்லது முன்னாள் எம்.பி-யான
மனோஜ் பாண்டியன் இருவரில் ஒருவருக்கு பன்னீர் வாய்ப்பு கேட்டிருக்கிறார்.

கே.பி.முனுசாமி ஒரு சீட்டை உறுதிசெய்துகொண்டுவிட்டார். தம்பிதுரை மீண்டும் இந்த லிஸ்டில் இடம் பெறலாம் என்கிறார்கள்.’’

‘‘பா.ஜ.க தலைவர் அறிவிப்பு இன்னும் தள்ளிப் போகிறதே?’’

‘‘முரளிதர்
ராவால் காலதாமதம் என்றார்கள். ஆனால், நட்டா இதுவரை தமிழகத் தலைவர் தேர்வு
குறித்து இறுதி முடிவை எடுக்கவில்லையாம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்று
போன வாரம் செய்தி கசிந்தது. இப்போது நயினார் நாகேந்திரன் பெயரே
முன்னிலையில் இருக்கிறது என்கிறார்கள்.’’

‘‘ஆனால், கட்சிக் குள்ளேயே அவருக்கு கடும் எதிர்ப்பு இருக்கிறதாமே?’’

‘‘கட்சிக்குள்
புதிதாக வந்தவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்று
புகார்க்கணைகள் டெல்லி அலுவலத்தை நிரப்பியிருக்கின்றன. தமிழக
பா.ஜ.க-வுக்குத் தலைவரை நியமிக்கும் விஷயத்தில் டெல்லி தலைமை பெரிதாக
அக்கறை காட்டவில்லையாம். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரை டெல்லி தலைமை
ஒரு வில்லங்க வேலைக்கு அமைத்துள்ள குழுவில் சேர்த்திருக்கிறது.’’

‘‘அதென்ன வில்லங்கம்… யார் அவர்?’’

‘‘நாடு
முழுவதும் சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்தாலும், எதற்கும்
பின்வாங்கப்போவதில்லை என்கிறார் மோடி. சில தினங்களுக்கு முன்பு
நாக்பூரிலிருந்து வந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுடன் பா.ஜ.க-வின் மூத்த
தலைவர்கள் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். சி.ஏ.ஏ-வுக்கு
எதிராக நடக்கும் போராட்டம் பற்றியும் அடுத்து என்.பி.ஆர் (தேசிய
மக்கள்தொகை பதிவேடு), என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) ஆகியவற்றின்
முன்மாதிரிகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.’’

‘‘ம்!’’

‘‘உத்தரப்பிரதேசத்
தேர்தலுக்கு முன்பு அரசியல் சாசனத்திலும் சட்டங்களிலும் நாம் கொண்டுவர
வேண்டிய மாற்றங்களைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள்
அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். மதச்சார்ப்பின்மை என்ற வார்த்தையை
சட்டத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்கிற தங்களின் முடிவை அப்போது தெளிவாக
எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சட்டத்திட்டங்களை மாற்றுவதற்கு
முன்பு அதிலுள்ள சிக்கல்களை முழுமையாக ஆராய்வதற்காக ஒரு குழுவையும்
ஏற்படுத்தியிருக்கின்றனர். அந்தக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம்
ஆச்சாரியும் இருக்கிறார்.’’

‘‘அடுத்த அதிரடி என்று சொல்லும்!’’

‘‘ஆமாம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகரான தமிழகத்தைச் சேர்ந்த ஆச்சாரி, பா.ஜ.க
தலைமையின் ஆவணப் பிரிவுத் தலைவராக இருக்கிறார். எனவே, அவரை இந்தக் குழுவில்
சேர்த்து முதல்கட்ட ஆவணங்களைத் தயார் செய்யும் பணிகளைக்
கொடுத்திருக்கின்றனர். அடுத்த ஆண்டுக்குள் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள்
செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் போன்றவற்றை இந்தக் குழு தயார்
செய்து,ஆர்.எஸ்.எஸ் தலைமைக்கும் பா.ஜ.க தலைமைக்கும் வழங்க இருக்கிறது.
அதற்குப் பிறகு சட்டத்துறையுடன் இதுபற்றி ஆலோசித்து முடிவு செய்து
அடுத்தகட்ட வேலைகளில் மத்திய அரசு ஈடுபடப்போகிறது. மோடி சொன்னதுபோல்
இனிதான் பா.ஜ.க அரசின் உண்மையான அதிரடி ஆரம்பிக்கப்போகிறது’’ என்று சொல்லி
விட்டு சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: