யாருக்கு எத்தனை கோடி?

புது கூலிங்கிளாஸ் அணிந்தபடி ஸ்டைலாக அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு இளநீரும் நுங்கும் கலந்த பானத்தைக் கொடுத்து உபசரித்தோம். ரசனையுடன் ருசித்தவர், ‘‘அ.தி.மு.க தலைவர்கள், சுற்றுப்பயணம் கிளம்பப் போகிறார்கள். செய்திகளைச் சேகரிக்க வெயிலில் செல்லும்போது கூலிங்கிளாஸ் போட்டுக் கொண்டால்தானே குளுகுளுவென இருக்கும்’’ என்றபடியே செய்திக்குள் தாவினார்.

‘‘ஓராண்டு கழித்துதான் தேர்தல் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதற்கு இந்த ஆண்டிலேயே தயாரானால்தான் உண்டு என எல்லா கட்சிகளும் களமிறங்கி விட்டன. ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை கட்சிக்கான ஒற்றைத் தலைமை, முதல்வர் வேட்பாளர், தேர்தல் செலவு என இந்த ஆண்டுக்குள் பல விஷயங்களை முடிவுசெய்ய வேண்டியிருக்கிறது.’’

‘‘அதற்குத்தான் சுற்றுப்பயணம் கிளம்பப்போகிறார்களா?’’

‘‘ஆமாம்… ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு மாவட்டவாரியாக அ.தி.மு.க நிர்வாகிகளை தலைமைக் கழகத்துக்கு அழைத்த ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும், ‘கட்சி ஏன் பின்னடைவைச் சந்தித்தது?’ என இரண்டு கட்டங்களாக ஆய்வுக்கூட்டம் நடத்தினர். கட்சிக்காரர்கள் ஒருவருக்கொருவர் குழி பறித்துக்கொண்டதையும், அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடமிருந்து பணம் வராததையும் குமுறித் தீர்த்து விட்டார்கள். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழகத்தின் வாசலுக்கே வந்து மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு எழுந்தது. இந்த ஆய்வுக்கூட்டத்தின் வாயிலாக, மாவட்ட அளவில் உட்கட்சிப்பூசல் கொழுந்துவிட்டு எரிவதை தலைமை தெரிந்துகொண்டது. இதைப் பேசித் தீர்ப்பதற்காகத்தான், தமிழ்நாடு முழுவதும் மாவட்டவாரியாகச் சுற்றுப்பயணம் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தயாராகிறார்கள்.’’

‘‘ஓ… எப்போது கிளம்புகிறார்களாம்?’’

‘‘மார்ச் 9-ம் தேதி மானியக் கோரிக்கைமீதான விவாதத்துக்காக சட்டமன்றம் கூடவிருக்கிறதாம். இந்தக் கூட்டத்தொடருக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்கள். மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து, குறைகளைக் கேட்கப்போகிறார்கள். உளவுத்துறையிடமிருந்து ஏற்கெனவே சில தகவல்களுடன் ஒரு பட்டியலை வாங்கி வைத்திருக்கிறார்களாம். எந்தெந்த மாவட்டங் களில் யாரெல்லாம் அதிருப்தியில் இருக்கிறார்கள், செயல்படாத நிர்வாகிகள் யார், யாருக்கு செல்வாக்கு இருக்கிறது, யாரை கட்சியில் இணைத்தால் கட்சி வலுப்பெறும் என நான்கு பகுதிகளாக தகவல்கள் திரட்டப்பட்டு எடப்பாடியிடம் தரப்பட்டிருக் கின்றனவாம். இதை வைத்துக்கொண்டு தான் இருவரும் அதிரடி காட்டப்போகிறார்கள்.’’

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம்

‘‘தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே மீதமிருக்கும் நிலையில், இப்போது நிர்வாகிகள்மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படாதா?’’

‘‘கட்சிக்குள் வைத்திருந்தால் அதைவிட பாதிப்பு இருக்கும் எனக் கருதுகிறார்கள். ‘உள்ளாட்சித் தேர்தலில் பணப்பட்டுவாடா சரிவர நடக்காததால்தான் பல இடங்களில் தோல்வியடைந்தோம்’ என, தலைமைக் கழகத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் பலரும் கூறியிருந்தனர். இந்த விஷயத்தை சீரியஸாக விசாரிக்கப்போகிறார்களாம்.’’

“விசாரித்து என்ன செய்யப்போகிறார்களாம்?’’

‘‘பொறுப்பிலிருந்து நீக்குவார்கள்; புதியவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் பணப்பட்டுவாடா செய்யும் பொறுப்பு இவர்களிடம்தான் ஒப்படைக்கப்படும்.’’

‘‘ஓஹோ!’’

‘‘அதுமட்டுமல்ல… அடுத்த ஆண்டில் தேர்தலை எப்படி எதிர் கொள்வது, எவ்வளவு செலவழிப்பது போன்ற விஷயங்களையெல்லாம்கூட இப்போதே தீர்மானித்து விட்டார் களாம். அடுத்த ஆண்டுக்குள் கூட்டணி எப்படியெல்லாம் மாறும் எனத் தெரியவில்லை. ஆனாலும், 150 தொகுதிகளை மட்டும் குறிவைத்து, அந்தத் தொகுதிகளில் இப்போதிருந்தே களப்பணிகளைத் தொடக்கிவிடலாம்; மற்ற தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்குத் தந்துவிடலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.’’

‘‘அடேங்கப்பா… செம ஐடியாவாக இருக்கிறதே…’’

‘‘அ.தி.மு.க–வுக்கு இருக்கும் வாக்குவங்கியில் சற்று சரிவு ஏற்பட்டிருக்கிறதே தவிர, பெரும் சேதாரம் ஏற்படவில்லை என்று எடப்பாடி நம்புகிறார். அதனால், இந்த 150 தொகுதிகளில் வைட்டமின் ‘ப’வை வலுவாக இறக்கினால் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றி விடலாம். ஆட்சியைப் பிடிக்க முடியா விட்டாலும் பலமான எதிர்க்கட்சியாக உட்கார்ந்துவிடலாம் என எண்ணு கிறார்களாம் எடப்பாடியும் பன்னீரும்.’’

‘‘அதுசரி… இதற்கு பெரிய அளவில் பட்ஜெட் வேண்டுமே!’’

‘‘தேர்தல் நெருங்கும் நேரத்தில் பட்ஜெட் போட்டால் சரிப்பட்டுவராது என்றுதான், இப்போதே எலெக்‌ஷன் பட்ஜெட் போட்டுவிட்டார் எடப்பாடி. இந்த ஆண்டு இறுதிக்குள் பெரும்தொகையைத் தயார்செய்ய வேண்டும் என டார்கெட் நிர்ணயித்துள்ள எடப்பாடி, கடந்த ஜனவரி 27 அன்று அமைச்சர்களைச் சந்தித்துப் பேசியபோதே இதற்கான ‘ஹின்ட்’ கொடுத்துவிட்டார். அதற்குப் பிறகும் இதுதொடர்பாக சில அறிவுறுத்தல்கள் அமைச்சர்களுக்குப் போயிருக்கின்றன. ஜெயலலிதா இருக்கும் வரை எல்லா அமைச்சர்களும் கட்சி நிதி கொடுத்ததைக் குறிப்பிட்டுச் சொன்ன எடப்பாடி தரப்பு, ‘இப்போ நீங்க யாருமே கட்சி நிதி கொடுக்கிற தில்லை. இருக்கிற பணத்தைவெச்சுதான் ஓட்டுறோம். தேர்தலைச் சந்திக்க பெரிய தொகை வேணும். பெரிய டிபார்ட்மென்ட்டை கையில் வெச்சிருக்கிறவங்க பெரிய தொகையைப் போடுவோம். மத்தவங்க கணிசமான தொகையை ஏற்பாடு பண்ணணும்’ என்று அறிவுறுத்தியிருக்கிறாராம். அதைக் கேட்டுதான் அமைச்சர்கள் பலரும் அலறிக்கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘ஏற்கெனவே பஞ்சப்பாட்டு பாடியவர்களாயிற்றே?’’

‘‘சரியாகச் சொன்னீர். எடப்பாடியின் பட்ஜெட் 4,500 வாலா பட்டாசாம். இதை வசூலிப்பது தொடர்பாக, முதல்கட்டமாக கட்சியில் இரட்டைக்குழலாக இருக்கிற இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. முதலாமவர், ‘நான் ஆயிரம் போடுறேன். நீங்க ஆயிரம் போடுங்க’ என்று சொன்னதும், இரண்டாமாவர் கொந்தளித்து விட்டாராம். ‘வெல்லம் தின்னது நீங்க… வேடிக்கை பார்க்கிறது நான். நீங்க ஆயிரம், நானும் ஆயிரமா?’ என்று தன்னுடைய தர்மயுத்த முகத்தைக் காட்டிவிட்டாராம்.’’

‘‘சபாஷ்… சரியான போட்டி!’’

‘‘அவர் மட்டுமல்ல… பலரும் அதேபோல்தான் கொதித்துப் போயிருக்கிறார்களாம். எடப்பாடி முதல்வர் ஆனதில் இருந்தே, பசையுள்ள துறைகளை அவருடைய வகையறாக்களே வைத்துக்கொண்டு மானாவாரியாகச் சம்பாதித்திருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலிலும் அவரவர் ஏரியாவை மட்டும் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் தாராளமாகச் செலவழித்திருந்தால் இன்னும் நிறைய இடங்களில் ஜெயித்திருக்கலாம் என்கிறார்களாம். தேர்தலில் மறுபடியும் ஜெயிப்பது ரொம்பவும் கஷ்டம் என நினைக்கும் அமைச்சர்கள் பலரும் கஜானாவைத் திறக்கவே யோசிக்கிறார்களாம்.’’

‘‘இதையெல்லாம் பேசித் தீர்க்கத்தான் சுற்றுப்பயணம் கிளம்பப்போகிறார்களா?’’

‘‘அப்படித்தான். தனுஷின் ‘படிக்காதவன்’ படத்தில் ‘குண்டூர் உன்து, நெல்லூர் என்து’ என்று விவேக் பங்கு பிரிப்பதுபோல், ‘கொங்கு பெல்ட்டை நான் பாத்துக்கிறேன். பாண்டிய நாட்டுப் பக்கம் உங்க பொறுப்பு’ என்று பன்னீருக்கு அசைன்மென்ட் பிரித்திருக்கிறார்கள். இதேபோல் ஒவ்வொரு வருக்கும் ஏரியா பிரிக்கப்படவுள்ளது. எடப்பாடியும் பன்னீரும் எல்லா ஏரியாக்களுக்கும் தனித்தனியாகப் போவார்களா, சேர்ந்து போவார்களா என்பதெல்லாம் இன்னும் முடிவாகவில்லை.’’

‘‘தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் ஏதோ சுற்றுப்பயணம் கிளம்புகிறாராமே?’’

‘‘ஆமாம். மார்ச் இறுதியிலிருந்து அவரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்ப உள்ளார் எனத் தகவல். ஏற்கெனவே ‘நமக்கு நாமே’ திட்டத்தில் ஊர் ஊராகச் சென்றதுபோல் இப்போது பத்து அம்சத் திட்டங்களுடன் களமிறங்கப்போகிறாராம்.’’

‘‘சரி… தி.மு.க-வில் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்பது தெரியும். ஆளுங்கட்சியில் ஊர் ஊராகச் சுற்றுப்பயணம் போகும்போது `அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற கேள்வி எழுமே!’’

‘‘இதென்ன கேள்வி… முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான். அதை ஓ.பி.எஸ் வாயாலேயே அறிவிப்பதற்கான வேலைகள் ஆரம்பமாகி விட்டன’’ என்ற கழுகார், ‘‘சமீபத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தார்கள் அல்லவா… அதுதொடர்பான வழக்கில் கமல், ஷங்கர், இ.வி.பி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன் அனுப்பப்போகிறதாம்’’ என்ற தகவலைச் சொல்லிவிட்டு, சட்டென சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: