அடி தூள்.. தமிழகத்தில் மாறும் பாலிடிக்ஸ்.. உருவாகும் மும்முனை போட்டி.. எந்த கட்சி எந்த கூட்டணியில்?

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. எனவே, கூட்டணிகளை அமைப்பது, உடைப்பது, தக்க வைப்பது என அரசியல் கட்சிகள் ரொம்ப சீரியசாக யோசிக்க ஆரம்பிச்சாச்சு.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பார்கள். அதனால், ஒரு கூட்டணியில் இருந்தவர்கள், அடுத்து எந்த கூட்டணிக்கும் போவார்கள். காங்கிரசும், பாஜகவும், திமுகவும், அதிமுகவும் ஒரே கூட்டணியில் இருக்காது என்பதை தவிர வேறு எந்த கட்சியையும் யார் கூட இருப்பார்கள் என்று கண்டிப்பாக யாரும் சொல்லி விட முடியாது.

சரி.. இப்போதைய நிலையில், தற்போதைய நாடித்துடிப்பை வைத்து யார் எப்படி கூட்டணி அமைப்பார்கள் என்று ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு வருவோம் வாங்க.

அதிமுக கூட்டணி

முதலில், அதிமுக பக்கம் போவோம். அவர்கள் இப்போது பாஜக, பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைத்துள்ளனர். on the paper இது ஸ்ட்ராங்கான கூட்டணிதான், மறுக்க முடியாது. ஆனா பாருங்க, அங்கே இப்போது குடைச்சல் ஆரம்பிச்சிருக்கு. ராஜ்யசபாவுக்கு சீட் கேட்டு அடம்பிடிக்குது தேமுதிக. ஆனால் ஏற்கனவே ஒரு ராஜ்யசபா சீட்டை, பாமகவின் அன்புணி ராமதாசுக்கு கொடுத்து கூட்டணி தர்மம் காத்த, அதிமுக, இன்னொரு சீட்டை இழக்க ரெடியாக இல்லையாம். எடப்பாடி பழனிச்சாமி. இதை ஓபனாகவே சொல்லிவிட்டார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுக கூட்டணியில் உள்ள யார் வேண்டுமானாலும் ராஜ்யசபா சீட் கேட்பதற்கு உரிமை உள்ளது, ஆனால் அதிமுகவில் உள்ள மூத்த உறுப்பினர்களை நாங்கள் பார்க்க வேண்டுமல்லவா என வெளிப்படையாகவே, போட்டு உடைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தேமுதிக நிலை

இதற்கு காரணம் உள்ளது. பாமக போல விஜயகாந்த் கட்சி இப்போது வட தமிழகத்தில் வலுவாக இல்லை. பிரேமலதாவின் மறைமுக தலைமையை தொண்டர்கள் ஏற்கவில்லை. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்த(தால்) பிறகு, தேமுதிகவில் எஞ்சியுள்ள தொண்டர் படை அந்த கட்சிக்கு ஷிப்ட்டானாலும் ஆச்சரியப்பட முடியாது. விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும், அதிமுக பெற்ற அபார வெற்றியில், தேமுதிகவின் பங்கு சொற்பம். பாமகவின் உழைப்பு விக்கிரவாண்டியில் அபாரம். 9 தொகுதிகளில் இடைத் தேர்தலில் முன்னதாக வென்றபோதும், பாமக ஓட்டு வங்கியே கை கொடுத்தது. எனவே, அதிமுக, பாஜக, பாமக கூட்டணி 2021 சட்டசபை தேர்தலை இணைந்து சந்திப்பதற்கான வாய்ப்புதான் தெளிவாக இருக்கிறது.

காங்கிரஸ் நிலை

ஆனால், கூட்டணி சவாரியில் தொடர்ந்து பயணித்த காங்கிரசுக்கு அந்த சொகுசு போகுமா? போகவே போகாது. நாங்க எவ்ளோ பெரிய கட்சி, இந்தியாவிலேயே பழமையான கட்சி என்று பழங்கதை பேசி, வம்பிழுத்து கூட்டணியை விட்டு போனாலும் போவார்களே தவிர, குறைந்த சீட்டுக்கு ஓகே சொல்ல மாட்டார்கள். ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் பதவிகளில் காங்கிரசுக்கு கல்தா கொடுத்தது திமுக. அதனால், கே.எஸ்.அழகிரி போன்ற முக்கிய தலைவர்களே பகிரங்கமாக உறுமினர். அப்புறம், வேறு வழியில்லை என தெரிந்து அமைதி காத்தனர். எனவே கூட்டணியில் ஒதுக்கப்படும், சீட்டை பொறுத்துதான், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என உறுதியாக தெரியும்.

கட்சிகள்

திமுக கூட்டணியில், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிறுபான்மையினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில சிறு கட்சிகள் கேரண்டியாக தொடரும். இப்போ மேட்டருக்கு வருவோம். அதிமுகவிலிருந்து, அத்துவிடப்பட்டால், தேமுதிகவும், திமுகவிலிருந்து திடீரென வெளியேறினால் காங்கிரசும் என்ன செய்யும்? அங்குதான் வருகிறது புதிய ஃபேக்டர்.

ரஜினிகாந்த்

ஆமா.. இந்த இரு கட்சிகளும் ரஜினிகாந்த் கட்சியோடு கூட்டணி வைக்க தயங்காது என்கிறார்கள். ஏற்கனவே காங்கிரசில் பல தலைகள், ‘தலைவர்’ ஃபேன்தானாம். ரஜினிகாந்த் தர்பாருக்கு, ஏற்கனவே அவர்கள், தாளம் போட்டு வருகிறார்கள். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இந்த கூட்டணிக்கு வந்தால் ஆச்சரியப்பட முடியாது. நேற்றே, டெல்லி கலவரம் பற்றிய ரஜினிகாந்த் பேட்டிக்கு, பலே சொல்லி, கூட்டணிக்கு அச்சாரம் போட்டுவிட்டார், ஆழ்வார்பேட்டை ஆண்டவர். அப்போ, முதல்வர் பதவி யாருக்கு என்கிறீர்களா? பதவி ஆசை எனக்கில்லையப்பா, நல்லாட்சிதான் எனது லட்சியம் என சொல்ல தயங்காதவர்தான் ‘நம்மவர்’. எனவே அது ஒரு பெரிய பிரச்சினை இல்லை. விஜயகாந்த் உடல்நிலை ரொம்ப ஆக்டிவாக இல்லை என்பதால், அவர் தரப்பும் முதல்வர் பதவிக்கு பங்கு கேட்காது. அப்புறம் என்ன.. ‘அண்ணாத்த’ ஆட்சிதான் என்று ரஜினி தரப்பு குதூகலத்தோடு, இந்த கூட்டணிக்கு டிக் அடிக்கும்.

மும்முனை போட்டி

இதெல்லாம், இப்போதுள்ள ‘பல்ஸ்’ பார்த்து சொல்லப்பட்ட யூகங்கள்தான். இப்படியே ஒருவேளை கூட்டணி அமைந்தால், தமிழகத்தில் முதல் முறையாக மிக வலுவான மும்முனை போட்டி உருவாகும். எந்த கட்சிக்கு உண்மையான பலம் இருக்கிறது என்பது இப்படியான மும்முனை போட்டிகளில்தான் தெளிவாக தெரியும். ஆனால், நாம் ஏற்கனவே சொன்னபடி, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை.. எதிரியும் இல்லை. எனவே, வெயிட் அன்டு சீ!

%d bloggers like this: