ஆண்களின் தாம்பத்ய ஆரோக்கியத்துக்கு… அவசியமான/தவிர்க்க வேண்டிய உணவுகள்!

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், மோசமான உணவுப்பழக்கம் நேரடியாக ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. டென்மார்க்கில் நடைபெற்ற இந்த ஆய்வில் அந்நாட்டைச் சேர்ந்த 3,000 இளம் ஆண்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

பீட்ஸா, பர்கர், ஃப்ரைடு உணவுகள் மற்றும் இனிப்பு அதிகமுள்ள பொருள்களை வழக்கமாகச் சாப்பிடும் ஆண்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை, காய்கறிகள், பழங்கள், மீன் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுபவர்களைக் காட்டிலும் 25% குறைவாக இருப்பது, அதில் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்க மருத்துவர்கள் சங்கத்தின் இதழான JAMA-வில் வெளியிடப்பட்டுள்ளது.அந்த ஆய்வின்படி ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுகிறவர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையின் சராசரி 16.7 கோடியாகவும், ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுகிறவர்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையின் சராசரி 12.2 கோடியாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மதுப்பழக்கம், போதைப்பழக்கம், புகைப்பழக்கம் உடையவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், தசைகளின் அடர்த்தியை அதிகரிக்கும் சப்ளிமென்ட்களை உட்கொள்பவர்கள் ஆகியோர் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.

அசைவ உணவாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, எண்ணெயில் பொரித்துவிட்டால் அது கொழுப்புள்ள உணவுதான். எண்ணெயில் பொரிக்கும்போது உணவில் காணப்படும் ஊட்டச்சத்துகள் நீங்கிவிடும்.

உணவியல் நிபுணர்

அப்படியென்றால் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களுக்கு பாலியல் நலத்துடன் நேரடித் தொடர்பு உள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது.

உணவுக்கும் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்திக்கும் நேரடியான தொடர்பு உள்ளதா என்று குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் அருண் முத்துவேலிடம் கேட்டோம்.

“துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது ஆர்.ஓ.எஸ் (ROS – Reactive Oxidative Species) என்ற வேதிப்பொருள் உடலில் உற்பத்தியாகும். அந்த வேதிப்பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையை நேரடியாக பாதிக்கும். பொதுவாக, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளில் இது அதிகமாகக் காணப்படும். சோயா போன்ற சில உணவுப் பொருள்களில் அதிகம் புரதச்சத்துள்ளது என்று பலர் அவற்றை அதிகம் எடுத்துக்கொள்வார்கள்.

சோயாவில் புரதச்சத்து உள்ளது என்பது உண்மைதான். ஆனால், பதப்படுத்தப்பட்ட சோயாவில் அவை காணப்படாது. பொதுவாக சோயா உணவுகள் பதப்படுத்தப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவை நேரடியாக விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கும்.

உணவைப் போன்று உணவு உண்ணும் முறைக்கும் தாம்பத்யத்துக்கும் நேரடித் தொடர்பு உண்டு. பொதுவாகக் காலையில் அதிகமாகவும் இரவு குறைவாகவும் சாப்பிட வேண்டும். காரணம், காலையில் எவ்வளவு அதிகக் கலோரிகள் உள்ள உணவை எடுத்தாலும் அது ஜீரணமாகிவிடும். ஆனால், இப்போது காலையில் அவசர அவசரமாகச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் போகும் நிலை அதிகரித்துள்ளது. காலைக்கும் சேர்த்து இரவு வேளையில் உணவை பிடிபிடியெனப் பிடித்துவிடுகிறார்கள்.

இதுபோன்ற உணவுமுறை தாம்பத்ய வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். இரவு அதிக அளவில் சாப்பிடுவதால் ஜீரணத்தில் பிரச்னை ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் சேர ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்பு சேரும்போது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் உற்பத்தி குறையும். ஹார்மோன் உற்பத்தி குறைவதால், தாம்பத்தியத்தின் மீது நாட்டமில்லாமல் போகும். அதன் பிறகு விறைப்புத்தன்மை குறைந்து, பாலியல் வாழ்க்கையை பாதித்துவிடும்” என்கிறார்.

ஓர் ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கும் என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று விளக்குகிறார் உணவியல் நிபுணர் நிஷா.

“உணவுக்கும் விந்தணுக்கள் உற்பத்திக்கும் நேரடித் தொடர்பு உள்ளது என்று ஏற்கெனவே பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது புழக்கத்திலுள்ள அதிகமான அசைவ துரித உணவுகளில் பிராய்லர் கோழி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பிராய்லர் கோழிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புண்டு என்று ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், உதாரணமாக காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடுபவர்கள் என்றால் அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், அவை நல்ல தரத்துடனும் காணப்படும்.

அசைவ உணவாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, எண்ணெயில் பொரித்துவிட்டால் அது கொழுப்புள்ள உணவுதான். எண்ணெயில் பொரிக்கும்போது உணவில் காணப்படும் ஊட்டச்சத்துகள் நீங்கிவிடும். எனவே, கொழுப்புச்சத்துள்ள உணவுகளையும், பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதன் தரத்தை மேம்படுத்தவும் ஆரோக்கிய உணவுகள் நிச்சயம் உதவும். கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்து புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது தாம்பத்ய வாழ்க்கைக்கு நலம் பயக்கும். பால் பொருள்கள், பருப்பு வகைகள், முளைகட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவை புரதச்சத்துகளை அதிகமாக அளிக்கும். அசைவ உணவில் மீன், நாட்டுக்கோழி, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படும்.

துரித உணவுகள் ஆண்களின் பாலியல் நலத்தை மட்டுமன்றி பெண்களின் உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் அனைவருமே அந்த உணவுகளை ஒதுக்கிவிடுவது நல்லது. ஒரு தம்பதி குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள் என்றால் உணவியல் நிபுணர் ஒருவரைச் சந்தித்து உணவுமுறை குறித்தும் திட்டமிட்டுக்கொள்வது நல்லது” என்கிறார்.

துரித உணவுகள் என்பவை நமது வாழ்க்கையையும் அதன் தரத்தையும் துரிதமாக அழித்துவிடும். இந்த விஷயத்தில் மனதைக் கட்டுப்படுத்திவிட்டோம் என்றால் தாம்பத்ய வாழ்க்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த வாழ்க்கையுமே ஆரோக்கியமாக மாறிவிடும்.

%d bloggers like this: