ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கு 3 நிபந்தனைகள்!’ – சீனியர்களுக்கு சுட்டிக் காட்டிய அ.தி.மு.க தலைமை

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி.க்களுக்கான தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க சார்பில் போட்டியிடவுள்ள 3

வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் கூட்டணி தர்மத்தின்படி தங்களுக்கு ஒரு சீட்டை அ.தி.மு.க ஒதுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தே.மு.தி.க உள்ளது. ஆனால், இருக்கும் 3 சீட்களை யாருக்குக் கொடுக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை உள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி

எம்.பி சீட் கேட்டு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்துவருகின்றனர். சீனியர்கள் தொடங்கி ஜூனியர்கள் வரை, சீட் கொடுங்கள் என்ற ஃபைலோடு அ.தி.மு.க தலைமைக் கழகத்தை வலம் வருகின்றனர். சீட் கேட்டு வருவோர்களிடம் ஃபைல்களை வாங்கிக்கொண்டு இருவரும் சிரித்த முகத்தோடு அனுப்பி வைத்துவருகின்றனர். என்னுடைய ஆதரவாளர் ஒருவருக்கு இந்தமுறை எம்.பி சீட் வேண்டும் என்ற நிபந்தனையைக் கொங்கு டீமிடம் ஓ.பி.எஸ் தரப்பு முன்வைத்துள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக நடந்த விவாதத்தில், `இந்தத் தேர்தல் ரொம்பவே முக்கியமானது. ஏனெனில் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க உள்ளதால் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி போராட்டத்தால் கட்சியின் ஓட்டு வங்கி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அடுத்து சந்திக்கவுள்ள தேர்தலை முன்னிறுத்தி வேட்பாளர்கள் தேர்வு இருக்க வேண்டும்’ என்று முதல்வர் தரப்பிடம் கொங்கு மண்டல நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், உளவுத்துறை கொடுத்த அறிக்கையில் சிஏஏ, என்ஆர்சி போராட்டங்கள் மூலம் தி.மு.க நன்றாக ஸ்கோர் செய்துவருகிறது. அதை முறியடிக்கும் வகையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தமுறை எம்.பி சீட் கொடுக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உளவுத்துறை கொடுக்கும் அறிக்கையின்படிதான் வேட்பாளரை ஜெயலலிதா தேர்வு செய்வார். அதே ஸ்டைலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுப்பது தொடர்பாகக் கட்சியின் சீனியர்களிடம் ஆலோசித்துள்ளார். அப்போது, ஏற்கெனவே முகமதுஜானுக்கு சீட் கொடுத்துவிட்டோம். அதனால் மீண்டும் சிறுபான்மைப் பிரிவினருக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்ற கருத்தைக் கட்சியின் சீனியர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான ஒருவர், `சி.ஏ.ஏ, என்.ஆர்.சி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளலாம். நமக்கு கடைசி வரை விசுவாசியாக இருப்பவர்களுக்கு சீட் கொடுக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

இதனால் ராஜ்ய சபா எம்.பி சீட் யாருக்கு என்ற விவாதம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் நேற்றிரவு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்திக்கக் கட்சியின் சீனியர்களான பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், காஞ்சி பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜே.சி.டி.பிரபாகர், ஐ.டி விங்க் ராமசந்திரன், ஜெ.எம்.பஷீர் என 200-க்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர். அவர்களிடம், `கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுங்கள்’ என்ற ஒற்றைவரியில் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

அந்தப் பதிலைக் கேட்ட பலர், அதிருப்தியடைந்துள்ளனர். இதற்காகவா, ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவில் ஏற்பட்ட விரிசலின்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்கு ஆதரவளித்தோம் என்ற மனக்குமுறல்களோடு அங்கிருந்து சென்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் எந்த பிளானில் இருக்கிறார் என்றே தெரியவில்லை என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள். அதே நேரத்தில் 2 எம்.பி. சீட்களில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சீட் என்பதை கொங்கு மண்டல சீனியர்கள் உறுதி செய்துள்ளனர்.

ராஜ்ய சபா எம்.பி சீட் குறித்துப் பேசும் அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகி ஒருவர், “கடந்தமுறை சந்திரசேகர், முகமது ஜானுக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வழங்கப்பட்டது. இந்தமுறை சீட் கேட்டவர்களிடம் ஓப்பனாகவே, 3 நிபந்தனைகள் சொல்லப்பட்டுள்ளன. அதில், ஏற்கெனவே எம்.பியாக இருந்தவர்கள், தேர்தலில் சீட் வாங்கித் தோல்வியடைந்தவர்கள், வாரிசுகள் ஆகியோருக்கு சீட் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனாலும், கட்சியின் சீனியர்கள் சீட் கேட்டு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நீண்ட காலமாக அதிருப்தியில் உள்ளது. அதனால்தான் ஒரு எம்.பி சீட் ஓ.பி.எஸ் டீமுக்குக் கொடுப்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. இன்னும் 2 தினங்களில் வேட்பாளர் பட்டியல் ரெடியாகிவிடும்

ராஜ்யசபா போட்டியில் 10 பேர் கொண்ட ஒரு பட்டியலை கட்சித் தலைமையில் உள்ளவர்கள் தயாரித்துள்ளனர். அந்தப் பட்டியலிருந்து 3 பேர் டிக் செய்யப்படுவார்கள். அந்தப் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியிருக்கிறதா என்பது வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு தெரியவரும்” என்றார்.

%d bloggers like this: