உடலை காக்கும் கேடயம் வெங்காயம்

ஆ… வெங்காயமா? வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். இன்று விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறதே என்று சொல்லலாம். நம் வீட்டில் தினம்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் வெங்காயத்தை, சமையலின் ருசியை கூடுதலாக்க பயன்படுத்துகிறோம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் நம் உடலுக்கு அவசியம் தேவை என்பதை அதன் மருத்துவ பயன்களை வைத்து புரிந்து கொள்ள முடியும். வெங்காய வைத்தியம் என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.

நெடுங்காலத்துக்கு முன்பே இந்தியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளில் விளைவிக்கப்பட்ட நறுமணமூட்டி இது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய கல்லறைகளில், வெங்காயம் சார்ந்த சான்றுகள் கிடைத்திருக்கின்றன. குரான், விவிலியம், இந்து புராணங்களில் வெங்காயம் பற்றி எண்ணற்ற குறிப்புகள் காணப்படுகின்றன. மெசபடோமியா நாகரிகத்தில், `சர்வரோக நிவாரணி’யாகச் செயல்பட்டது வெங்காயம். எகிப்திய, ரோமானிய, கிரேக்க, சீன இலக்கியங்களில் வெங்காயத்தின் மேன்மை குறித்துப் பேசப்பட்டுள்ளன. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். நம் பாரம்பரிய வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. இவ்வளவு ஏன்? வெங்காயத்தின் மகிமையை விஞ்ஞானிகளும் பாராட்டுகிறார்கள். 

இன்று, வெங்காய விலை ஏறியதை வைத்து, திருமண தம்பதிகளுக்கு வெங்காய செண்டு கொடுப்பது போல மீம்ஸ்களைப் பார்த்து சிரிக்கிறோம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய மக்கள்,  வெங்காயத்தை வாடகைப் பணமாகவும், திருமணப்பரிசாகவும் கொடுத்திருப்பதாக வரலாறு சொல்கிறது. வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்  என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன. ஆனியன் என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். யூனியோ என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததே ‘ஆனியன்’ என்னும் பெயர். இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். 

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தவிர்த்து, உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும், ஈருள்ளி, சுக்கிரந்தம், நிச்சயம், பலாண்டு, காயம் ஆகிய பல்வேறு பெயர்களிலும்  வெங்காயம் கிடைக்கின்றன. வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு (Allyl propyl disulphide) என்ற எண்ணெய் போன்ற பொருள் காணப்படுகின்றது. இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் (பெல்லாரி வெங்காயம்) இரண்டும் ஒரே மருத்துவ பலனைத்தான் தருகின்றன. ருசியில் வேண்டுமானால் வித்தியாசப்படலாம்.

வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 

ஆற்றல்  – 48 கலோரிகள்
புரோட்டீன் – 1.5 கிராம்
கொழுப்பு – 0.24 கிராம்
கார்போஹைட்ரேட் – 9.56 கிராம்
கரையும் நார்ச்சத்து – 0.53 கிராம்
கரையா நார்ச்சத்து 1.92 கிராம்
தையாமின் – 0.04 மிலி கிராம்
வைட்டமின் ‘சி’- 6.69 மிலி கிராம் 
தவிர, விட்டமின் பி6, ஃபோலிக் ஆசிட், குரோமியம், கால்சியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. 

வெங்காயத்தை நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும்போது, நம் உடலின் வெப்பநிலை சமநிலையில் இருக்கும். நாம் உண்ணும் கடினமான உணவு கூட எளிதில் செரிமானம் ஆகிவிடும் என்பதால், திட உணவு சாப்பிடத் தொடங்கும் குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருமே உணவில் வெங்காயத்தினை சேர்த்துக் கொள்ளலாம். பச்சை வெங்காயத்தை சிறிதளவு தினமும் சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது. வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது. பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. 

நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது. நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. இப்படி சர்வரோக நிவாரணியாக விளங்கும் வெங்காயத்தின் இலைகள், வெங்காயத்தாள் போன்றவற்றை சாலட், சூப்புகளில் சேர்த்துக் கொள்ளலாம். உறித்த வெங்காயத் தோல்களைக் கூட வீணாக்காமல் வீட்டில் வளர்க்கும் செடி, கொடிகளில் போட்டு வந்தால் அவற்றிற்கு நல்ல சத்து கிடைக்கும். 

சுவாச நோய்

குளிர், இருமல் மற்றும் காய்ச்சலுக்கான  மருந்தாக வெங்காயம் பயன்படுத்தப்படுகிறது. சமமான அளவு வெங்காய சாறு மற்றும் தேன் கலந்து, இந்த கலவையில் மூன்று முதல் நான்கு டீஸ்பூன் சாப்பிட கடுமையான இருமல், காய்ச்சல் சரியாகிவிடும். மேலும், வெங்காயத்தில் உள்ள குர்செடின் (Quercetin) சுவாசப்பாதை தசைகளை தளர்த்துவதாகவும் ஆஸ்துமா அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிப்பதாகவும் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிசியாலஜியில் 2013 ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல் வலி 

பொருக்கும் சூட்டில், வெந்நீருடன், வெங்காயச் சாற்றை கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும். வெங்காய சாற்றை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி ஈறுவலி சரியாகிவிடும். பச்சை வெங்காயத்தை சொத்தைப்பற்கள் உள்ள இடத்தில் வைத்தால் அங்குள்ள கிருமிகளை அழித்துவிடும்.

ரத்தசோகை

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ரத்த சோகை நோயை தவிர்க்கலாம்.

இதய நோய்

இதய நோய்க்கு நன்மை தரக்கூடிய அலிப்ரோபில் டிஸுல்பைட் (Aliypropyl disulphide) எனப்படும் அத்தியாவசிய எண்ணெய், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் வெங்காயத்தில் இருக்கின்றன. ஒரு நாளைக்கு 100 கிராம் வெங்காயத்தை உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதோடு, ரத்தக் கொழுப்பைக் குறைக்கவும் முடிவதால், இதய நோயாளிகளுக்கு வெங்காயம் ஒரு நல்ல நண்பன். 

ஆண்மை குறைவு 

வெங்காயம் மிக முக்கியமான பாலுணர்வு பெருக்கும் உணவுகளில் ஒன்றாகும், இது பாலுணர்வை அதிகரித்து, இனப்பெருக்க உறுப்புகளை பலப்படுத்துகிறது. வெள்ளை வெங்காயத்தை உரித்து நசுக்கவேண்டும், நசுக்கப்பட்டு தூய வெண்ணெயில் வறுத்தெடுக்கப்பட வேண்டும், இந்த கலவை வெற்று வயிற்றில் ஒரு ஸ்பூன் தேனுடன் தவறாமல் எடுத்துக் கொண்டால், இந்த கலவையானது ஒரு சிறந்த பாலுணர்வான டானிக்காக செயல்படுகிறது.வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.

ஆசனக் கடுப்பு, மூலநோய் 

நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும். இதனால் பைல்ஸ் கட்டியிலிருந்து ரத்தம் கசிவது நின்றுவிடும்.

புற்றுநோய்


2015ல் மேற்கொள்ளப்பட்ட மெட்டா பகுப்பாய்வில், வெங்காயம் உட்பட அல்லியம் காய்கறிகளை உட்கொள்வது குறைக்கப்பட்ட இரைப்பை புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது. ஜார்ஜ் மாடெல்ஜன் அறக்கட்டளை வெளியிட்ட, உலகின் ஆரோக்கியமான உணவுகளின் பட்டியல்படி, வாரத்திற்கு ஒன்று முதல் ஏழு வெங்காயம் சாப்பிடுவது பெருங்குடல், குரல்வளை மற்றும் கருப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். ஒரு நாளைக்கு பல விதங்களில் வெங்காயத்தை உணவில் எடுத்துக் கொள்வது வாய்வழி மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவும் என கூறப்பட்டுள்ளது.

வெங்காயத்தில் உள்ள முக்கிய மூலப்பொருளான குர்செடின் ஒரு சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு காரணியாக இருக்கலாம் என்று ஜார்சப்கோவ்ஸ்கி கூறுகிறார். மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையம், குர்செடின் குறிப்பாக “மார்பக, பெருங்குடல், புரோஸ்டேட், கருப்பை, எண்டோமெட்ரியல் மற்றும் நுரையீரல் கட்டிகளில் உள்ள புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளது.

சர்க்கரை நோய் 

ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க வெங்காயத்தில் இருக்கும் குரோமியம் உதவுகிறது. மேலும், இதிலிருக்கும் சல்ஃபர் இன்சுலினை இயற்கையாக சுரக்கச் செய்வதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தலாம் சுற்றுச்சூழல் சுகாதார நுண்ணறிவு இதழில் 2010ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பாக உதவியாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொண்டவர்களில், சிவப்பு வெங்காயத்தை சாப்பிட்ட டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள் நான்கு மணி நேரம் வரை குறைந்த குளுக்கோஸ் அளவைக் கொண்டிருந்தனர். மேலும், 2014-ல் நியூட்ரிஷன் இதழில் வெளியான, மெட்டா பகுப்பாய்வறிக்கையில், வெங்காயத்தை உட்கொண்ட டைப்-2 நீரிழிவு நோயாளிகளிடத்தில் கல்லீரல் நொதிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் அளவுகளை கொண்டிருந்ததை கண்டறிந்தனர்.

மூட்டுவலி 

மூட்டு வலியின் காரணமாக நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் வெங்காய சாற்றுடன் கடுகு எண்ணெய் சிறிது கலந்து வலி வரும் நேரத்தில் அந்த சாற்றினை மூட்டின் மீது தடவிவர வலி குணமாகும். 2009 ஆம் ஆண்டு மெனோபாஸ் இதழில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், தினசரி வெங்காயத்தை உட்கொள்ளும் மெனோபாஸ் நிலையில் உள்ள அல்லது மெனோபாஸ் முடிந்த பெண்களிடத்தில் எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்ட பெண்களுக்கு வெங்காயம் சாப்பிடாதவர்களை விட இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் குறைவாக இருப்பதும் தெரியவந்தது. 

மயக்கம் அடைந்தால்… 

சிலர் திடீரென்று மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் ஆகிவிடுவார்கள். அந்த சமயத்தில் வெங்காயத்தை கசக்கி அந்த சாற்றினை முகரவைத்தால் மயக்கம் தெளிந்து விடும்.

சீதபேதி 

நாம் உண்ணும் உணவு பொருளில் காரம் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நமக்கு சீதபேதி வருவதற்கான வாய்ப்பு உண்டு. அந்த சமயத்தில் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உடனே நிற்கும். 

உடல் பலம் பெற 

உடலில் வலிமை இல்லாதவர்கள் சிறிது வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். 

நரம்புத் தளர்ச்சி 

நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். 

தூக்கமின்மை 

பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிட்டாலோ அல்லது வெங்காயச் சாற்றை நீரில் கலந்து குடித்தாலோ, அதன்பின்பு நல்ல தூக்கம் வரும். 

எடையை குறைக்க 


வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவாக உள்ளது. இதனால் உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் பருமனையும் கரைத்து, ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கிறது. 

நுரையீரலை சுத்தப்படுத்தும் 


வெங்காயச் சாற்றினை ஒரு நாளைக்கு ஒரு மூடி வீதம், மூன்று வேளைகள் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து புகை பிடிப்பவர்களின் நுரையீரல் சுத்தப்படுத்தப்படும். 

கண்வலி 

கண் வலி உள்ளவர்கள் வெங்காயத்துடன் தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி தீரும். கண்ணில் சோர்வு இருந்தால் அதுவும் மறைந்து விடும். 

மாலைக்கண் 

மாலைக்கண் நோய் உள்ளவர்கள் வெங்காய சாற்றில், சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர மாலைக்கண் நோய் நாளடைவில் குணமாகும். 

முடி வளர்ச்சிக்கு 

தலையில் முடி உதிர்ந்து வழுக்கை உள்ள இடத்தில் சிறிதாக வெட்டிய வெங்காயத்தை அந்த வழுக்கையின் மீது தேய்த்துவர முடிவளரும். 

நக சுத்தி 

ஒரு பிடி சாதத்துடன் இரண்டு வெங்காயம் சேர்த்து நன்றாக அரைத்து, வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள இடத்தில் கட்டி வந்தால் நகச்சுத்தி சரியாகிவிடும். 

கட்டிகள் 

வெங்காயத்தை நெருப்பில் சுட்டு அதனுடன் மஞ்சள், நெய் சேர்த்து நசுக்கி பிசைந்து, மீண்டும் லேசாக சூடுபடுத்தி அந்த கலவையை கட்டிகள் மேல் வைத்து கட்டினால் நம் உடம்பில் உள்ள கட்டி பழுத்து உடைந்து விடும். வெங்காயச் சாற்றை தடவி வர படை, தேமல் மறைந்து விடும். 

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் 


வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும். 

விஷக்கடி 

வெங்காயத்தை நசுக்கி அதை எடுத்து தேள் கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க விஷம் இறங்கும். தேன் மட்டுமல்ல குளவி போன்ற வண்டுகள் கடித்தால் கூட இதை பயன்படுத்தலாம். 

இருமல் 

இருமல் உள்ளவர்கள் வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க வேண்டும். வயதானவர்களுக்கு ஏற்படும் கடுமையான இருமலை நீக்க வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட்டால் குணமடையும். 

மூளை 

நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது. எனவே வெங்காயத்தை தினமும் சூப் வைத்து குடித்து வரலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் குடித்து வந்தால் அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

சினைப்பை கட்டி (PCOS) உள்ள பெண்களின் கொழுப்பை குறைக்க உணவில் வெங்காயத்தை பச்சையாக சேர்த்துக் கொள்ளலாம். இது அந்த கட்டிகளை கரைக்க உதவும். இப்படி சர்வரோக நிவாரணியாக செயல்புரியும் ‘வெங்காயத்தை சாலட், சூப், குருமா, வெங்காயத் தொக்கு என எந்த வடிவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெங்காயத்தை எப்படி சாப்பிடக்கூடாது?

நெஞ்செரிச்சல் (Acid Reflux) பிரச்னை உள்ளவர்கள் பச்சை வெங்காயம் சாப்பிடுவதால், மேலும் தீவிரமடையலாம். இவர்கள் சமைத்து சாப்பிடலாம். வெங்காயத்தை உரித்து அரை மணி நேரத்திற்குள் உபயோகப்படுத்திவிடவேண்டும்.  வெங்காயத்திற்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும் தன்மை இருப்பதால், அரிந்த வெங்காயம் அந்த அறையில் இருக்கும் அத்தனை பாக்டீரியாக்களையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டு நச்சுத்தன்மையாகிவிடும். அம்மை நோய் வந்தவர்கள் படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை வைப்பதைப் பார்த்திருப்போம். பாதி வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் சுற்றி, ஃபிரிட்ஜில் வைத்து மறு உபயோகப்படுத்தக் கூடாது.

%d bloggers like this: