வாசனுக்கு சீட் கொடுத்ததைதானே பார்த்தீங்க.. இன்னொரு மேட்டரை கவனிச்சீங்களா? எடப்பாடியாரின் ராஜதந்திரம்

ஒரு பக்கம் ராஜ்யசபா சீட்டை வாசனுக்கு கொடுத்து அவரையும், பாஜக தரப்பையும் கூல் செய்த கையோடு, ஓ.பன்னீர்செல்வம் அணியினரை குஷிப்படுத்தி, ஒரு ராஜதந்திரியாக மாறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இதன் மூலம், ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்து அசத்தியுள்ளார் அவர். ராஜ்யசபாவுக்கு அதிமுக சார்பில் 3 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகிய அதிமுகவினரோடு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கும், போட்டியிட சீட் கொடுத்துள்ளது அதிமுக.

இந்த காய் நகர்த்தலில், பல சாதுர்யங்களை கையாண்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. எப்படி என்கிறீர்களா? இதோ பாருங்க:

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக இயங்கியபோது, தம்பிதுரை, எடப்பாடி பழனிச்சாமி அணியிலும், முனுசாமி, ஓபிஎஸ் அணியிலும் இருந்தனர். அதனால் இரு அணியைச் சேர்ந்தவர்களுக்கும் தலா ஒரு பதவி என கொடுத்தாயிற்று. அரசு விழாக்களில் முதல்வர் படங்கள்தான் இடம் பெறுகிறது, முதல்வரைத்தான் எல்லோரும் பாராட்டி பேசுகிறார்கள். இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில்தான், முனுசாமிக்கு எம்.பி.பதவி தேடி வந்துள்ளது.

பொன்னையன்

அதே நேரம் சத்தமில்லாமல் இன்னொரு விஷயமும் நடந்தது. மாநில திட்டக் குழு துணை தலைவர் பதவியை, பொன்னையனுக்கு கொடுத்துள்ளார் எடப்பாடியார். பொன்னையன் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர். திட்டக் குழு துணை தலைவர் பதவி என்பது மாநில அமைச்சர் பதவி போன்ற அந்தஸ்து கொண்டது. அந்த வகையில், நேற்று மட்டும், ஓபிஎஸ் அணியை குஷிப்படுத்தும் 2 முடிவுகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலின்போது, அதிமுக கட்சிக்குள் எந்த பிளவும் ஏற்படாமல் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

பாஜக, பாமக குஷி

ஜி.கே.வாசனுக்கு சீட் தரச் சொல்லி பாஜக மேலிடமே அதிமுக தலைமையிடம் சொன்னதாக தகவல் உள்ளது. தமிழகம் வந்தபோது வாசனுடன் மோடி காட்டிய நெருக்கம், பின்னர் டெல்லியில், வாசனை மோடி வரவேற்ற விதம் போன்றவை ஏற்கனவே, வாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் பார்சல் என்பதை உறுதி செய்தன. இதன் மூலம் கூட்டணி கட்சியான பாஜகவை திருப்திச் செய்துவிட்டார் எடப்பாடி. ஏற்கனவே அன்புமணி ராமதாசுக்கு ஒரு எம்.பி. சீட் கொடுத்தாச்சு. பாமக கூட்டணியும் உறுதி.

திமுக கூட்டணியில் முனுமுனுப்பு

இப்படியாக, கட்சிக்குள்ளும், கூட்டணிக்குள்ளும், சிறப்பாக செயல்பட்டு, அவற்றை பலப்படுத்த ராஜ்யசபா தேர்தலை ஆயுதமாக பயன்படுத்தி அசத்திவிட்டார் எடப்பாடியார். மற்றொரு பக்கம், தமிழ் மாநில காங்கிரசுக்கே சீட் கொடுக்குறாங்க, அதிமுகவில், ஆனால், திமுகவில், காங்கிரசுக்கு ஒரு சீட் கூட தரவில்லை என்ற அதிருப்தி முனகல்கள் எழுந்துள்ளன. இது தேர்தலின்போது திமுக கூட்டணிக்குத்தான் குடைச்சலாக மாறும். இது ஒரு வகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் கொளுத்திப்போடும் செயலாகவும் அமைந்துவிட்டது. அப்படி பார்த்தாலும், அதிமுகவுக்கே லாபம்.

%d bloggers like this: