ஒரே ஒரு பேட்டி… டோட்டல் க்ளோஸ்! ரஜினி உடைத்த ஃபர்னிச்சர்கள் என்னென்ன?

ரஜினியின் சமீபத்திய பிரஸ் மீட், ஒவ்வொரு கட்சிக்குள்ளும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் அரசியல் என்ட்ரியை வைத்து வியூகம் வகுத்திருந்த கட்சிகள் திக்கு தெரியாமல் முழிக்கின்றன. ஒரே ஒரு பேட்டி, மொத்த பர்னிச்சரையும் உடைத்து பணால் ஆக்கிவிட்டது. எந்தெந்தக் கட்சியின் வியூகங்களைத் தனது பேட்டியின் மூலமாகத் தகர்த்தெறிந்துள்ளார் ரஜினிகாந்த். ஒவ்வொன்றாக பார்ப்போம்…

பர்னிச்சர் 1: அ.தி.மு.க

ரஜினி கட்சி ஆரம்பித்துவிட்டால் அதிகமாக அடிவாங்கப்போவது அ.தி.மு.க தான் என அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். `ரஜினிக்காகத்தான் வெயிட்டிங். அவர் சிக்னல் கொடுத்துவிட்டால், அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, கட்சியை இரண்டாக உடைத்து, ஒன்றை ரஜினி பக்கம் அணிசாய்க்க பி.ஜே.பி தயாராகிவிட்டது’ என்றும் வியூகம் கூறினர். ஒருசில அமைச்சர்கள் ரஜினி பக்கம் தாவுவதற்கு நேரடியாகவே தங்கள் பேட்டிகள் மூலம் சிக்னல் கொடுத்து வந்தார்கள். அத்தனையையும் தனது பேட்டி மூலம் உடைத்தெறிந்துவிட்டார் சூப்பர் ஸ்டார்.

அலை ஏற்படாதவரை தான் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என ரஜினி தெளிவுபடுத்தியிருப்பதன் மூலம், ரஜினியால் அ.தி.மு.க-வின் கட்டமைப்புக்கு இப்போதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது தெளிவாகிவிட்டது. இந்த ஆட்சியைக் கவிழ்த்து, அ.தி.மு.க-வை இரண்டாக உடைக்க பி.ஜே.பி திட்டமிட்டிருந்தாலும், அது ரஜினி எதிர்பார்த்த அலையை உருவாக்குமா என்பது சந்தேகம்.

அ.தி.மு.க-வின் இந்துத்துவ வாக்குகளை ரஜினி பிரிப்பார் என சிலர் ஆரூடம் கூறிவந்தனர். இப்போது, அதுவும் `புஸ்’ என ஆகிவிட்டது. தனது பேச்சின் ஊடே, அ.தி.மு.க, தி.மு.க இருவரையும் இருபெரும் ஜாம்பவான்களாக ரஜினி குறிப்பிடுகிறார். இது அடிமை அரசு என இதுநாள் வரை விமர்சிக்கப்படும் எடப்பாடி – ஓ.பி.எஸ் தலைமைக்கு கிடைத்த வெகுமதியாகத்தான் பார்க்க வேண்டும். அணி தாவும் ஐடியாவில் இருந்த சில அமைச்சர்களும், இப்போது இருப்பதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாததால் பம்மத் தொடங்கிவிட்டனர். ஆக மொத்தத்தில், ரஜினி பேட்டியால் எடப்பாடி பழனிசாமி டபுள் ஹாப்பி.

பர்னிச்சர் 2: பா.ம.க

2021 தேர்தலில் பா.ம.க எந்தப் பக்கம் சாய்கிறதோ, அதுதான் வெற்றிக் கூட்டணி எனச் சில வாரங்களுக்கு முன்பு வரை அரசியல் கணிப்புகள் பறைசாற்றின. இதற்கேற்ப மருத்துவரும் தனது அரசியல் காயைக் கவனமாக நகர்த்திவந்தார். அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க, எங்கே ரஜினிபக்கம் சென்றுவிடுமோ என அ.தி.மு.க தலைவர்கள் கவலைப்பட்டு வந்தனர். ரஜினியின் பக்கம் ராமதாஸ் சென்றுவிட்டால், வடமாவட்டங்களில் தி.மு.க அடிவாங்க வேண்டியதிருக்குமே என அறிவாலயத்திலும் கவலை எதிரொலித்தது.

இப்போது, ரஜினி தனது அரசியல் ஐடியாவை தெளிவுபடுத்திவிட்டதால், பா.ம.க-வின் மார்க்கெட் சரிவைக் கண்டுவிட்டது. இனி இஷ்டம்போல டிமாண்ட் செய்து அ.தி.மு.க தலைமையை மருத்துவரால் மிரட்ட முடியாது. தி.மு.க பக்கமும் தைலாபுரத்துக்காரரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால், பா.ம.க-வின் டிமாண்ட் அரசியல் பர்னிச்சர் உடைந்துவிட்டது.

பர்னிச்சர் 3: அ.ம.மு.க

தனது சமீபகால பேட்டிகளில், “அ.ம.மு.க ஒரு வலுவான கூட்டணியுடன்தான் தேர்தலைச் சந்திக்கும்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறிவந்தார். இந்தவலுவான கூட்டணி என்பது ரஜினியை மனதில் வைத்து தான். கடந்த ஒருவருடத்தில் ரஜினியும் தினகரனும் இரண்டு முறை சந்தித்துப் பேசிக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கல்வித் தந்தையின் ஏற்பாட்டின் பெயரில் கேளம்பாக்கத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து இச்சந்திப்பு அரங்கேறியதாகக் கூறப்படுகிறது

ரஜினியும் தினகரனும் சித்தர்கள் வழிபாட்டில் ஊறித் திளைப்பவர்கள் என்பதால், இருவருக்குமான பேச்சுவார்த்தை அரசியலையும் தாண்டி பரிணமித்துள்ளது. மக்களிடம் புரட்சிக்கான மனநிலை ஏற்படாமல் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என ரஜினி இப்போது கூறிவிட்டதால், அவருடன் கூட்டணி அமைக்கக் காத்திருந்த டி.டி.வி.தினகரனின் கனவில் மண் விழுந்துவிட்டது.

ரஜினி அரசியல் என்ட்ரி கொடுத்துவிட்டால் அ.தி.மு.க இரண்டாக உடையும், ஒருபகுதியை நாம் இணைத்துக்கொள்ளலாம் என அ.ம.மு.க-வினர் ஐடியா செய்திருந்தனர். அந்தத் திட்டமும் இப்போது பணால். அ.தி.மு.க, தி.மு.க பக்கம் தினகரால் செல்ல முடியாது. இவ்விரு கட்சிகளும் இணைத்துக்கொள்ளாத கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்க வேண்டுமானால் முடியும். அதுவும் எதிர்பார்த்த ரிசல்டை தினகரனுக்கு தருமா என்பது தேர்தலின்போதுதான் தெரியும்

பர்னிச்சர் 4: கமல்ஹாசன்

“தேவைப்பட்டால் ரஜினியுடன் கரம் கோக்கவும் தயார்” எனச் சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். ரஜினியின் அரசியல் என்ட்ரி மூலமாக, தான் கூட்டணி அமைப்பதற்கும் ஒரு வாய்ப்பு உருவாகியிருப்பதாகக் கருதியிருந்தார். அந்த பர்னிச்சரை ஒரே பேட்டியில் போட்டு உடைத்துவிட்டார் சூப்பர் ஸ்டார். இனி கமல்ஹாசனுக்கு கூட்டணி கதவுகள் வேறெங்கும் திறக்கப்படுமா என்பது சந்தேகம்.

பர்னிச்சர் 6: தி.மு.க

ரஜினி தீவிர அரசியலில் களமிறங்கிவிட்டால், அதனால் ஏற்படப் போகும் அரசியல் மாற்றங்கள், கூட்டணி மாற்றங்கள், பிரியும் வாக்குகள் எங்கே தங்களது வெற்றி வாய்ப்பை பறித்துவிடுமோ எனத் தி.மு.க தலைமை கவலையில் ஆழ்ந்திருந்தது. அந்தக் கவலையைப் போக்கி, தி.மு.க-வுக்கு ரூட் க்ளியர் கொடுத்துவிட்டார் ரஜினி. ரஜினியின் பேட்டியால், அ.தி.மு.க தப்பித்ததுபோல, தி.மு.க-வும் ஒருவகையில் பாதிப்பிலிருந்து தப்பித்துள்ளது. `இனி இந்த ஆட்சிக்கு எதிராக பிரசாரத்தை முழுவீச்சுல செய்யணும். தலைமைக்கான வெற்றிடம் காலியாக இல்லைங்கறத நாம நிரூபிச்சுட்டே இருந்தாதான், அ.தி.மு.க, ரஜினி இருதரப்பும் நம்மை நெருங்கக்கூட யோசிப்பாங்க’ என சீனியர்களுக்கு அட்வைஸ் அளித்துள்ளாராம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தனது ஒரே ஒரு பேட்டியின் மூலமாக ஆறு பர்னிச்சர்களை உடைத்து துவம்சம் செய்துவிட்டார் ரஜினி. இதன் பிரதிபலிப்பு அடுத்தடுத்து வரும் அரசியல் ஆட்டத்தில் எதிரொலிக்கும்.

%d bloggers like this: