எதிர்க்கட்சியினர் கேள்வியைக் கேட்டு முடிக்கும் முன்பே எழுந்து பதில் சொல்வது முதல், அமைச்சர்கள் அளிக்க வேண்டிய பதிலுக்கு முந்திக்கொண்டு முதல்வராகப் பதில் சொல்வது வரை சட்டசபையில் எனர்ஜி காட்டிவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பினால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர்கள் பதில் சொல்கிறார்களோ இல்லையோ தக்க பதிலளித்து பலநேரங்களில் எதிர்க்கட்சியினருக்கு நெருக்கடி கொடுத்தார். அதேபோல் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாக ஒன்றுக்கு இரண்டு முறை அதை சரி செய்துகொண்டே கேள்விகளை எழுப்பினார்கள். இல்லையென்றால் அதற்கு கருணாநிதியிடமிருந்து வரும் பதில் எப்படி இருக்கும் என்று இருதரப்புக்கும் நன்றாகத் தெரியும். இப்படி அ.தி.மு.க, தி.மு.க இரண்டு கட்சிகளிலும் அந்தக் கட்சிகளின் தலைமைகள் ஆல்ரவுண்டர் போன்று சட்டசபையில் கலக்கி வந்தனர்.
எடப்பாடி முதல்வராகி மூன்றாண்டுகள் முடிந்துவிட்டன. ஆட்சியின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது போல தனது ஆளுமை அனைத்திலும் வெளிப்பட வேண்டும் என்று எடப்பாடி முடிவு செய்துவிட்டது, இப்போது நன்றாகத் தெரிகிறது. முதல்வராக அவர் பொறுப்பேற்ற காலங்களில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அவருடைய பதிலைத் தாண்டி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் எழுந்து பதில் அளிப்பார்கள். அடுத்தடுத்த காலங்களில், முதல்வருடன் பக்கபலமாக வேலுமணி, தங்கமணி உள்ளிட்டவர்களும் அவை முன்னவர் பன்னீர்செல்வமும் பதில் அளித்துவந்தனர். ஆனால், இப்போது சட்டசபையிலும் தானே கதாநாயகராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார் போலும். எதிர்க்கட்சித் தலைவர் முதல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வரை எழுப்பும் அனைத்துக் கேள்விகளுக்கும் அமைச்சர்களோடு சேர்ந்து எடப்பாடியும் பதிலடி கொடுத்துவருவதைப் பார்த்து ஆளுங்கட்சியினர் ஆச்சர்யப்படுகின்றனர்.
ஏற்கெனவே, பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க போர்க்கொடி தூக்கியது. அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடியாக “குடியுரிமை திருத்தச் சட்டத்தால், யாராவது ஒருத்தருக்காவது பாதிப்பு ஏற்பட்டதா எனச் சொல்லுங்கள்,” என்று தி.மு.க-வுக்குச் சவால்விட்டவர், “இந்த விவகாரத்தில், உங்களைப்போல நாங்கள் நடிக்கவில்லை; நாடகமாடவில்லை,” என்று காரசாரமாக பேசிய வீடியோ சமூகவளைதளங்களிலும் வைரலானது. அதேபோல்தான் என்.பி.ஆர் விவகாரத்திலும் முதல்வரின் பதிலுரை அமைந்திருந்தது.
நடப்புக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், “படிப்படியாக மது விலக்கு என்று தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க குறிப்பிட்டதே அதன் நிலை என்ன?” எனக் கேள்வி எழுப்பியதற்கு, முதல்வரிமிருந்தே பதில் வந்தது. “தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றபோது படிப்படியாகத்தான் எல்லாமே செய்யமுடியும். குறிப்பிட்ட காலத்திலேயே எல்லாவற்றையும் செய்திட முடியாது. உங்களுடைய தலைவர் எப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று எல்லா குறிப்புகளும் எங்களிடம் இருக்கிறது. எல்லோரும் ஒரு கருத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இன்றைக்கு பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று சொல்கிறீர்கள். படிப்படியாகத்தான் அதைச் செயல்படுத்த முடியும். கள்ளச்சாராயம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அரசு கவனமாக இருக்கிறது. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்ற செய்தியைச் சொல்லி இருக்கிறது” என்றார்.
அதோடு தி.மு.க-வுக்கு செக் வைக்கும் விதத்தில் “நீங்கள் ஆட்சியமைத்த காலத்தில் தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன்” என்று சொன்னீர்கள். ‘எத்தனை விவசாயிகளுக்கு கொடுத்திருக்கிறீர்கள்?, எங்கே கொடுத்தீர்கள்? எத்தனை விவசாயிகள் பயன்பெற்றிருக்கிறார்கள்?” என்று கேள்விகளை முன்வைத்து தி.மு.க-வை திணறடித்ததைப் பார்த்து அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆச்சர்யப்பட்டார்கள்.
ஒருபுறம் கண்டிப்பான பேச்சு இருந்தாலும், எதிர்க்கட்சிகளும் சிரிக்கும் அளவுக்கு சில காமெடிகளையும் அவ்வப்போது சொல்லிவருகிறார். வியாழக்கிழமை அன்று கொரோனோ குறித்த சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் அவையில் கொண்டுவரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் “கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. தொலைபேசியை எடுத்தால் இருமலுடன் கொரோனா என்கிறார்கள். சட்டமன்றத்தின் வெளியே, பொது இடங்களில் கொரோனா நடவடிக்கை என எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் இருக்கிறது. நீங்கள் அதற்குப் பயப்பட வேண்டாம் என்கிறீர்களே?” என்று கேட்டார்.
முதல்வரின் இந்த ஆல்ரவுண்டிங் பேச்சை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன், ஒருமுறை சட்டமன்றத்திலே “பேரவைகளில் எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விக்கு பதிலளிப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்கு தேறிவிட்டார். முதலமைச்சர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பதைப் பார்த்து பலமுறை நானே அசந்துபோய் இருக்கிறேன்” என்றார். அந்த அளவுக்கு முதல்வரின் பேச்சு முன்னேற்றம் அடைந்துள்ளது.
தன்னை ஒரு ஆளுமைமிக்க தலைவராக அனைத்திலும் நிரூபணம் செய்ய வேண்டும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். அதை பல நேரங்களில் நிருபித்தும் வருகிறார்…!