உடலில் உள்ள பிரச்னைகளை கண்கள் காட்டிக் கொடுக்கும்!

கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலே, ஐயோ, கண்ணில் மருந்து ஊற்றி, பரிசோதனை முடித்து வெளியில் வருவதற்கு, ஒரு நாள் முழுக்க ஆகி விடுமே என்ற அயர்ச்சி, பலரிடம் இருக்கிறது.

கண்களில் சொட்டு மருந்து ஊற்றி, ‘டைலடேஷன்’ எனப்படும் விரிவாக்கம் செய்து பார்ப்பது என்பது, கண்களில் இருக்கும் கோளாறை மட்டும் தெரிந்து கொள்வதற்கான வழி இல்லை.ஒரு மனிதனின் உடலுக்குள், என்னென்ன நோய்கள், கோளாறுகள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளும் ஜன்னலாகவே, கண்கள் இருக்கின்றன. உதாரணமாக, உடலின் எந்த பாகத்தில் உள்ள திசுவிலும், நரம்புகளின் முழுமையான செயல்பாடு மற்றும் ரத்த நாளங்களின் செயல்பாட்டை, சில சொட்டுகள் மருந்து விடும் எளிமையான பரிசோதனை மூலம், நேரடியாகப் பார்க்க முடியாது.உடலின் குறிப்பிட்ட ஒரு பாகத்தில் கோளாறு இருக்கிறதா என்பதை பார்க்க, ‘ஸ்கேன்’ பரிசோதனை உட்பட, பல நவீன கருவிகளின் உதவியுடன் தான் செய்ய வேண்டும். அதிகப்படியான செலவு எதுவும் இல்லாமல், சில சொட்டுகள் சொட்டு மருந்தை ஊற்றி, விரிவாக்கம் செய்வதன் வழியே, கண்களில் உள்ள நரம்புகளை முழுமையாக பார்க்க முடியும். கண்களில் என்ன கோளாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதோடு, ஆழ்ந்த மருத்துவ அறிவு, அனுபவம் மிக்க கண் டாக்டரால், கண்களில் தெரியும் மாறுபாடுகளை வைத்து, உடலின் பல்வேறு கோளாறுகளையும், எளிதாக சொல்லி விட முடியும்.

தைராய்டு

சாதாரணமாக கண்களை பரிசோதிக்கும் போது, ஒரு கண் மட்டும், மற்ற கண்ணை விடவும் சற்று பெரியதாக தெரிந்தால், தைராய்டு கோளாறு இருப்பதற்கான, முதல் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு கோளாறு, ஆரம்ப நிலையில் இருந்தால், நோயாளிக்கு வேறு எந்த அறிகுறியும் தெரியாது. ஒரு கண், மற்ற கண்ணை விட, தோற்றத்தில் சற்று பெரிதாக தெரியும். இந்த அறிகுறியை வைத்து, தைராய்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கலாம்.இது, முதலில் ஒரு கண்ணில் லேசாக ஆரம்பிக்கும்; பார்வையில் வேறுபாடு இருக்காது; கண்களின் தோற்றத்தில் மட்டும், இந்த வேறுபாடு தெரியும். தைராய்டு கோளாறு இருப்பதே தெரியாமல் இருந்த பல நோயாளிகளுக்கு, கண் பரிசோதனைக்கு வரும் போது கண்டுபிடித்திருக்கிறோம். இது போன்ற ஆரம்ப அறிகுறி தெரிந்த நபருக்கு, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்தும், தைராய்டு கோளாறு வரலாம்.ஒரு கண், தோற்றத்தில் மற்றதை விடவும் லேசாக சிறுத்து காணப்பட்டால், ‘நியூரோ மஸ்குலார்’ எனப்படும், நரம்பு கோளாறாகவும் இருக்கும். இதனால், கண் இமைகளில் உள்ள நரம்புகள், திறனை இழந்து, இமைகளை அசைப்பதில் சிரமம் ஏற்படும். ஒரு கண் சிறுத்து இருப்பதை வைத்து, ஆரம்பத்திலேயே இதை கண்டறிய முடியும்.கண்களில் மருந்து ஊற்றி பரிசோதனை செய்வது, கண்களின் பார்வை நரம்புகள், பார்க்கும் திறனை பரிசோதனை செய்வதற்கு மட்டும் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.கண்களில் மருந்து போட்டு, கண்களில் உள்ள நரம்புகள் தெளிவாக விரிவான பின், ‘ஆப்தல்மஸ்கோப்’ என்ற கருவி மூலம் கண்களை பரிசோதிப்பது என்பது, ஒரு அறையில் திருடன் ஒளிந்திருக்கிறானா என்பதை, கதவை திறந்து பார்ப்பதற்கும், சாவி துவாரத்தின் வழியே பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் போன்றது.மருந்து ஊற்றி விரிவான கண்களில், நரம்புகளில் உள்ள ரத்த நாளங்களில், ரத்த ஓட்டம் செல்வதை துல்லியமாக பார்க்க முடியும். ரத்த நாளங்கள், பொதுவாக ரப்பர் குழாய் போன்று மென்மையாக இருக்கும். இதையும் துல்லியமாக பார்க்க முடியும். ரத்த அழுத்தம் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், ரத்த நாளங்கள், இரும்பு கம்பி போல ஆகிவிடும்.பாம்பு மாதிரி நெளிவு, சுளிவுடன் இருப்பதற்கும், எந்த அசைவும் இல்லாமல் விரைப்பாக நிற்பதற்கும், நிறைய வித்தியாசம் இருக்கிறது. இப்படி இருந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு ரத்த நாளங்களின் வெளியே, ரத்தக் கசிவும் இருக்கும். இந்த ரத்தம், பார்வை நரம்பின் மையப் பகுதியில் விழாத வரையிலும், பார்வை நன்றாகவே தெரியும். ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறியும் போது, ‘கிளக்கோமா’ எனப்படும் கண் அழுத்த நோயை, மேலும் மோசமாகாமல் தவிர்த்து, பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.

சர்க்கரை கோளாறு

ரத்த குழாய்களின் உள் பக்கம் ரத்தம் செல்வது இயல்பான ஒன்று. ஆனால், பல ஆண்டுகள் சர்க்கரை கோளாறு இருப்பவர்களுக்கு, ரத்த குழாயினுள் ரத்தம் செல்லாமல், வெளியில் கசியும். இதனால், வெளியில் ரத்தம் தெறித்து, பார்வையை மறைக்கும். இதனால், செல்ல வேண்டிய இடத்திற்கு ரத்தம் செல்லாது; கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தும் முழுமையாக கிடைக்காது.இப்படி தெறிக்கும் ரத்தம், 50 மைக்ரான் அளவுள்ள கண்களின் மையப் பகுதியில் விழாத வரை, பார்வை முழுமையாகவே தெரியும். எந்தப் பிரச்னையும் வராது. ‘கண்ணாடி உடைந்து விட்டது… மாற்றலாம் என்று வந்தேன்’ என, சாதாரணமாக வரும் சர்க்கரை நோயாளிகளின் கண்களில், சொட்டு மருந்து விட்டு பரிசோதிக்கும் போது, ரத்தக் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவு தெரியும். இதைச் சொன்னால், நம்பவே மாட்டார்கள்; எனக்கு பார்வை தெளிவாக இருக்குதே சார் என்பர். போட்டோ எடுத்து காட்டும் போது தான் நம்புவர். இதற்கு, ‘டயாபடிக் ரெடினோபதி’ என்று பெயர்.கண்களில் உள்ள ரத்தக் குழாய்களில், கசிவு இருப்பது தெரிந்தால், உடனடியாக சிறுநீரகங்கள், இதயம் என்று, பிரதான அனைத்து உறுப்புகளையும், அந்தந்த மருத்துவ வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்று, பரிசோதிக்க சொல்கிறோம். கண்களின் ரத்தக் குழாயில் கசிவு இருப்பது என்பது, உடலின் எந்த பாகத்திலும் இது போன்று இருக்கலாம் என்பதற்கான அறிகுறி தான்.அதே நேரம், 20 ஆண்டுகளாக சர்க்கரை கோளாறு இருக்கும் அனைவருக்கும், ‘ரெடினோபதி’ வரும் என்பதில்லை; வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.ஆப்டிக் நரம்பு எனப்படும் பார்வை நரம்பை, கண்களின் பகுதி என்று சொல்வதை விட, மூளையின் ஒரு பகுதி என்று தான் சொல்வோம். பார்வை நரம்பை பரிசோதிப்பதன் வாயிலாக, அது வரையிலும் கண் அழுத்த நோயை கண்டுபிடிக்காமல் இருந்தாலும், தெரிந்து கொள்ள முடியும். இந்த நரம்பு, சற்று மெல்லிய நீள் வட்டமாக இருக்கும். வெளிப்புற அடுக்கு துல்லியமாக தெரியும். பரிசோதனையில் தெளிவாக இது தெரியாவிட்டால், மூளையில் கோளாறு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.இது, மூளையின் பிரதிநிதியாக செயல்படுகிறது. இந்நிலையிலும், பார்வை முழுமையாக இருக்கும். பார்வை, 100 சதவீதம் இருப்பதால், எல்லாமே நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இளஞ்சிவப்பு

கண்களில் மருந்து ஊற்றி செய்யப்படும் பரிசோதனையை, 40 வயதிற்கு மேல், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உட்பட, வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் உடல் கோளாறு இருப்பவர்கள், ஆண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டியது கட்டாயம். எந்த பிரச்னையும் இல்லை என்றால், குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தால் நல்லது.ஆரோக்கியமாக இருக்கும் பார்வை நரம்பின் நிறம், இளஞ்சிவப்பாக இருக்கும். இதற்கு பதிலாக, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்வை நரம்புக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று அர்த்தம். சிகரெட், மது பழக்கம் இருந்தாலும், ரத்தம் சீராக செல்லாமல், பார்வை நரம்பின் நிறம் மாறலாம். இதை வைத்தே, உடம்பின் மற்ற இடங்களுக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை புரிந்து கொள்ள முடியும்.அதே போல, கண்களை, இடது, வலமாக இயல்பாக அசைக்க முடியாமல் போனால், மூளையில் கோளாறு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 100 பேரில், இரண்டு பேருக்கு, மூளையில் கோளாறு இருக்கப் போகிறது… எதற்காக அனைவரையும் பரிசோதிக்க வேண்டும்… நிறைய நேரம் எடுக்கிறது… என்று அலுத்துக் கொள்கின்றனர். என்னைப் பொருத்தவரை, இரண்டு என்பதே பெரிய விஷயம். அந்த இரண்டில் ஒருவராக நாம் இருந்தால் தான், அதன் முக்கியத்துவம் தெரியும். நவீன மருத்துவ கருவிகள் எதுவும் இல்லாமல், கண்களில் இரண்டு சொட்டு மருந்து விட்டு, பொறுமையாக, நிதானமாக பரிசோதித்தால், உடல் முழுவதிலும் என்ன கோளாறு இருக்கிறது என்பதை அறிய முடியும். இது, உடம்பை சர்வீஸ் செய்து கொள்வதைப் போன்றது. ஒருநாள் முழுவதும், காரை சர்வீசிற்கு அனுப்புவதற்கு, நாம் யாரும் அலுத்துக் கொள்வதில்லை. கண் பரிசோதனைக்கு மட்டும், ஏன் இவ்வளவு தயக்கம்?

டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா,
கண் மருத்துவர்,
அரவிந்த் கண் மருத்துவமனை,
மதுரை.
0452 – 4356500d

%d bloggers like this: