வீட்டுக்குள்ளயே இருக்கறது கடுப்பா இருக்கா? இத பண்ணுங்க… டைம் போறதே தெரியாது…

உலகம் முழுவதும் கொரோனாவை தடுக்க சுய தனிமை என்பது அவசியமாகிறது. ஆனால் சுய தனிமை அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஓவ்வொரு நாளும் தனி அறையில் பேசக் கூட ஆள் இல்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்த தனிமை

சூழ்நிலையை கையாளுவது கொஞ்சம் கஷ்டமான ஒன்று தான் என்கிறார்கள் மருத்துவர்கள் . கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காண்பிக்கும் எவரும் குறைந்தது இரண்டு வாரங்களாவது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆலோசனைகள் கூறப்பட்டு வருகிறது. COVID-19 பாதிப்பிற்கு ஆளாக நேரிடலாம் என்பவரும் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுவது அவசியமாகிறது.

இந்த சுய தனிமைப்படுத்துதல் நாம் கொரோனாவால் பாதிப்படைந்து இருக்கோமா அல்லது நம்மால் தொற்று மற்றவர்க்கு பரவுமா என்பதை தெரிந்து கொள்ளும் காலத்தை இது வழங்குகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இருப்பினும் இப்படி சமுதாயத்தில் இருந்து விலகி தனிமையில் இருப்பது உங்க மன ஆரோக்கியத்தை பாதிப்படைய செய்யலாம். பெரும்பாலான பேர்கள் தனி அறையில் இருக்கும் போது மனச்சோர்வையும் சோம்பலையும் உணருகின்றனர்.

லண்டனின் கிங்ஸ் கல்லூரி நடத்திய ஆய்வில், தனிமைப்படுத்தல் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (பி.டி.எஸ்.டி) என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் கோபம் மற்றும் குழப்பம் போன்ற பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் என்கிறது இந்த ஆய்வு.

எனவே நீங்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ள நேர்ந்தால் எப்படி உங்களை பிஸியாகவும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பதற்கு மருத்துவர்கள் சில டிப்ஸ்களை வழங்குகின்றனர். அதன்படி உங்க மன நிலையை சீராக்கி கொள்ள முடியும்.

முதலில் நீங்கள் 4 சுவற்றுக்குள் தனியாக இருப்பதை நினைத்து பீல் பண்ணிக் கொண்டே இருக்க கூடாது. இதனால் உங்க சுய பராமரிப்பு பாதிப்படையலாம். முதலில் நீங்கள் நன்றாக சாப்பிட வேண்டும். சரியான ஓய்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். தனி அறையில் இருந்தாலும் உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சும்மா உட்கார்ந்தே இருப்பது உங்களுக்கு பதட்டத்தையும், வீணான யோசனையையும் கவலையையும், தான் கொடுக்கும். எனவே உங்களை எப்படி சந்தோஷமாக வைத்துக் கொள்ளலாம் என்ற சுய பராமரிப்பில் ஈடுபடுங்கள்.

வீட்டிலேயே தனியாக இருப்பது மற்றவர்களை அணுக முடியாது என்று அர்த்தமல்ல. இப்பொழுது தான் சோஷியல் மீடியா, பொழுது போக்கு அம்சங்கள், வாட்ஸ்அப், பேஸ் புக், மொபைல் போன் என்று உங்க அன்பானவர்களுடன் பேச, தகவல்களை பரிமாறிக் கொள்ள ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கிறது. எனவே உங்களுக்கு ஏதேனும் கவலைகளோ அச்சங்களோ இருந்தால் உங்க நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். இந்த பேச்சு உங்க மன அழுத்தத்தை போக்கி விரைவாக நோயிலிருந்து மீள உதவி செய்யும்.

மனதை அமைதியாக ரிலாக்ஸாக வைக்கும் வேலைகளை செய்யுங்கள். பெரும்பாலான பேர்களுக்கு சுய தனிமை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மன அழுத்தத்தை குறைக்க அவர்கள் பிடித்த புத்தகங்களை வாசிப்பது, மியூசிக் கேட்பது, பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, ஓவியம் தீட்டுவது, ஒரு கப் சூடாக தேநீர் பருகுவது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வரலாம். வேண்டுமென்றால் தியானம் யோகா போன்ற பயிற்சிகளைக் கூட நீங்கள் செய்யலாம்.

சிலருக்கு ஓவியம் வரைவது, பெயிண்டிங் என ஆர்வம் இருக்கும். அவர்கள் அப்படி ஏதாவது தங்களுடைய பொழுதைக் கழிக்கலாம்.

உங்க உடலை கட்டுக்கோப்பாக வைக்க நீங்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் நீங்கள் தனிமையில் இருக்கும் போது கூட புஷ் அப், அடிவயிற்று உடற்பயிற்சிகள், தொப்பையை குறைக்க உடற்பயிற்சிகள், தசைகளை வளர்க்க உடற்பயிற்சிகள் என்று உங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்து வரலாம். தனிமையை வென்ற மாதிரியும் ஆச்சு உடலும் பிட்டான மாதிரியாச்சு. எனவே வீட்டிற்குள் இருந்த படியே உங்க உடலை உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்

சிலருக்கு நிறைய நண்பர்கள் இருந்திருப்பார்கள், ஒரே இடத்தில் இல்லாமல் சுற்றித் திரிந்தவராக இருந்திருப்பார்கள். அவர்களுக்கு இந்த 10 நாள் தனிமை என்பது சங்கடமாக உணர வைக்கும். ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் தனியாக இல்லை தனி அறையில் தான் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றி கோடிக்கணக்கான மக்கள் வெளியில் வாழ்ந்து வருகின்றனர். உங்கள் ஒருவருடைய தனிமை மற்ற எவ்வளவோ உயிர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க உதவுகிறது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்

தற்போது தனிமையில் இருக்கும் போது நாம் செய்யும் மிகப்பெரிய செயலாக டீவி பார்ப்பது, மொபைல் போன் நோண்டுவது இதைத்தான் எல்லாரும் செய்கிறோம். இப்படி நீண்ட நேரம் டீவி பார்ப்பது சதா மொபைல் போன் நோண்டுவது உங்க மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச் சோர்வை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. யுபி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, அதிக தொலைக்காட்சி மற்றும் மொபைல் பார்வையாளர்கள் அதிக அளவு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை வெளிப்படுத்துகிறார்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

எனவே தனிமையில் இருப்பதற்கான அர்த்தத்தை புரிந்து அந்த நேரத்தை நமக்காக்கி கொண்டு செயல்படுங்கள். இதன் மூலம் உங்க தனிமையை வென்று சந்தோஷமாக்கி கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

%d bloggers like this: