முன் தயாரிப்பு இல்லாத தமிழக சுகாதாரத் துறை!

ஜூம் வீடியோ காலில் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்ட கழுகாரிடம் காரணம் கேட்டதற்கு, ‘‘என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். ஆனால், இப்போதுதான் செய்தி இதழ்களையே அச்சடிக்க முடியாத நிலையைப் பார்க்கிறேன். வேதனையாக இருக்கிறது. இதிலிருந்தெல்லாம் உலகம் விரைவாக மீள வேண்டும்’’ என்று கலங்கிய குரலில் சொன்னார்.

சில நிமிட இடைவெளிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்… ‘‘நல்லவேளையாக இன்றைக்கு டிஜிட்டல் உலகத்தில் நாம் இருக்கிறோம். அதனால் தடங்கலின்றி வாசகர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது. சரி, நீர் கேட்க வேண்டியதைக் கேளும்!’’ என்று நமக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார்.

வேறு என்ன கேள்வி கேட்கப்போகிறோம்… கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன?’’ என்று கேட்க, வழக்கமான உற்சாகத்துடன் பதிலளிக்கத் தொடங்கினார் கழுகார்.

‘‘முதலில் பாராட்டுகள் குவிந்துவந்தன. இப்போது விமர்சனங்களே அதிகம் எழுகின்றன. அதைப் பற்றி உமது நிருபர்கள் தனிக்கட்டுரைகள் கொடுத்திருப்பார்கள். நான் சில தகவல்களை மட்டும் சொல்கிறேன். `கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கும்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்த பிறகே, மின்னல் வேகத்தில் இந்திய அரசு நடவடிக்கையில் இறங்கியது. `ஆரம்பக்கட்டத்தில் இந்திய அரசு சுணக்கம்காட்டியதே இந்தியாவில் கொரோனா தொற்று பரவக் காரணம்’ என்று மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் குற்றச்சாட்டைக் கிளப்பியிருக்கிறது. இதனால்தான் ஊரடங்கு உத்தரவு என்கிற முடிவை பிரதமர் அறிவிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது என்கிறார்கள்.’’

‘‘ஆனால், அதற்கு முன்பாகவே மாவட்ட எல்லைகளுக்கு சீல்வைக்க தமிழக அரசு உத்தரவிட்டதே?’’

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

‘‘ஆமாம்… கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. முதலில் மூன்று மாவட்டங்களுக்கு மட்டும் சீல்வைக்கலாம் என ஆலோசித்தனர். ஆனால், ‘கொரோனா தாக்கம் பல இடங்களில் பரவியிருக்கிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களில் வெளிநாடுகளிலிருந்து வந்த பலரும் பல்வேறு மாவட்டங்களில் பரவியிருக்கின்றனர். மாவட்ட எல்லைகளுக்கு சீல்வைப்பது மட்டுமே இதற்குத் தீர்வு’ என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியாகச் சொன்ன பிறகே, மாவட்ட எல்லைகளுக்கு சீல் என்கிற முடிவை அறிவித்தனர். அதன் பிறகே ரேஷன் கார்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர்.’’

‘‘சரி… பொங்கல் பண்டிக்கைக்குப் பணம் வாங்க மக்கள் குவிந்தார்களே… அதைப்போல் இதற்கும் கூட்டம் சேர்ந்தால் என்ன செய்வார்களாம்?’’

‘‘ஒரே நேரத்தில் கூட்டம் சேராமல் இருப்பதற்காக வீடு வீடாக டோக்கன் வழங்கி, இடைவெளிவிட்டு வரச்சொல்லி பணம் வழங்கலாம் என்று முதலில் ஆலோசனை செய்யப்பட்டதாம். ‘அது சரிப்பட்டு வராது’ என்று சிலர் சொல்லவே, ‘வங்கியில் பணத்தைச் செலுத்துவது’ என்று இறுதி முடிவெடுத்திருக்கிறார்களாம். அதேபோல் பிரதமர் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதுகுறித்து ஆலோசனை நடந்துள்ளது. அதற்குப் பிறகுதான் எட்டு அறிவிப்புகளை வரிசையாக அறிவித்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இறந்தால் ஐம்பது லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு அந்தத் துறையினருக்கு ஆறுதலை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களுக்கும் நிதியுதவி வழங்குவதுகுறித்து பரிசீலித்து வருகிறார்கள்.’’

‘‘இவற்றை முதலிலேயே அறிவிப்பதில் ஏன் தாமதம்?’’

‘‘ஏற்கெனவே பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் எந்த வகையில் நிதியுதவியை வழங்குவது எனக் குழப்பத்தில் இருக்கிறது மத்திய அரசு. மற்றொரு புறம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்களும் மத்திய அரசிடம் கூடுதல் நிதியைக் கேட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளன.’’

‘‘அதனால்?’’

‘‘மாநில அரசுகள் எல்லாம் நிதியுதவி கேட்டு நெருக்கடி கொடுத்தால் நிலைமை என்னாகும் என யோசித்ததுதான் குழப்பத்துக்குக் காரணம் என்கிறார்கள். அதேநேரத்தில் ‘மருத்துவத் துறையில் நம்மிடம் பெரியளவில் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதை பிரதமரிடம் அதிகாரிகள் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, வென்டிலேட்டர்கூட இந்தியாவில் போதிய எண்ணிக்கையில் இல்லை என்று சொன்னதும், பிரதமர் டென்ஷனாகிவிட்டாராம். எப்படி இந்தக் கோரத்தாண்டவத்தை எதிர்கொள்வது என்று பல்வேறு தரப்பிலும் ஆலோசனைகளைக் கேட்ட பிறகுதான், சில முடிவுகளை பிரதமர் எடுத்துள்ளார். அதற்குப் பிறகுதான் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தற்காலிகத் தடையும் விதித்துள்ளது மத்திய அரசு.’’

‘‘மோடியைப் பின்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருக்கமான உரையை கவனித்தீரா?’’

‘‘பார்த்தேன். கொரோனா விவகாரத்தில் அவருக்கு ஒரு டீம் தொடர்ந்து சில ஆலோசனைகள் கொடுத்துவருகிறது. அந்த உரையைத் தயாரித்துக் கொடுத்ததும் அந்த டீம்தான். முதல்வரின் பேச்சுக்கு பொதுமக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் என்று உளவுத்துறையும் நோட் போட, குஷியாகிவிட்டாராம் எடப்பாடி.’’

‘‘ஸ்டாலினும் மக்களிடம் உரையாற்றி இருந்தாரே?’’

‘‘ஆமாம். மோடி, எடப்பாடி பழனிசாமி இவர்களுக்கெல்லாம் முன்னதாகவே, அதாவது ஒரு வாரத்துக்கு முன்பாகவே எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் மக்களுக்காக உரையாற்றிய உருக்கமான வீடியோவை வெளியிட்டிருந்தார். உண்மையைச் சொல்லப்போனால், இந்த விஷயத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க இரண்டு கட்சிகளுமே பொறுப்பாகத்தான் நடந்துகொண்டிருக்கின்றன. வடமாநிலத்தில் பல கட்சிகள் இதைவைத்தும் அரசியல் செய்தது, அங்கு உள்ள மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!’’

‘‘இவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையிலும் சட்டமன்றத்தில் ஒரே நாளில் 27 மசோதாக்களை நிறைவேற்றிவிட்டனரே?’’

‘‘ஆமாம்… தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரே நேரத்தில் இத்தனை மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டது இதுதான் முதல்முறையாம். சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், சட்டமன்றத்தை ஒத்திவைத்தால் 27 துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை தனபால் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்குப் பிறகுதான் ஒரே நாளில் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றினால் என்ன என்று அ.தி.மு.க தரப்பிலே ஆலோசிக்கப்பட்டு இந்த அதிரடி நடந்துள்ளது.’’

‘‘மருத்துவர்கள் மத்தியில் குமுறல்கள் இருக்கின்றனவே?”

‘‘அது உண்மைதான். அது பற்றித்தான் விரிவான அட்டைப்படக் கட்டுரை வந்துள்ளது. அவர்களின் குமுறல்கள் நியாயமானவையே. இதே மருத்துவர்கள் ஊதிய உயர்வுக்காகப் போராடியபோது அதை விஜயபாஸ்கர் எப்படிக் கையாண்டார் என்பதை மருத்துவர்கள் எவரும் மறக்க வில்லை. இப்போதும் அவருக்கு தங்கள்மீது உண்மையான அக்கறையில்லை என்றுதான் அரசு மருத்துவர்கள் குமுறுகின்றனர்.’’

“ஓஹோ…”

“இந்தத் திடீர் பேரிடருக்கு தமிழக சுகாதாரத் துறை முன்தயாரிப்பில் இல்லாமல் கோட்டைவிட்டதால் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இப்போது வரை தனியார் மருத்துவமனைகள் தடுப்பு நடவடிக்கைகளில் உரிய பங்களிப்பை அளிக்காமல் இருப்பதற்கு அமைச்சர்தான் காரணம் என்பதே எல்லோருடைய வருத்தமும். இன்றைய நிலையில் நம் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், பணியாளர்களும்தான் நிஜமான காவல் தெய்வங்கள்!’’ என்று அவர்களுக்கு சல்யூட் அடித்த கழுகார், ‘‘கேரளா மாநிலம் கண்ணூர், கோழிக்கோடு பகுதிகளில் கட்டட வேலைக்குச் சென்ற தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 36 பேரும், மகாராஷ்டிரா மாநிலம் கொப்பலியில் கூலி வேலைக்குச் சென்ற திருச்சி, கரூர், திருப்பூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோரும் ஊரடங்கு உத்தரவு காரணமாக சாப்பிட, தங்க வழியின்றியும், சொந்த ஊர் திரும்ப முடியாமலும் தவித்துவருகின்றனராம். தங்களை எப்படியாவது தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உதவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்’’ என்றபடியே மீட்டிங்கிலிருந்து ‘லீவ்’ ஆனார்.

%d bloggers like this: