ஆண்டிற்கு, 10 முறையாவது சளி பிடிக்கும்!

நம் நாட்டில் என்றில்லை… உலகின் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், குழந்தைகளுக்கு பொதுவாக வரும் உடல் பிரச்னை, சளியும் இருமலும். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பயம், பதற்றத்தில், பெரும்பாலான குழந்தைகள், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு இருப்பதாக நமக்கு தோன்றுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் குறித்து, அடிப்படையான சில விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

சளி, இருமலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, பொதுவாக, மூக்கிலிருந்து நீர் வடிவது, மூக்கடைப்பது போன்ற பிரச்னைகள் இருக்கலாம். காய்ச்சல் இருக்காது. இது, பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படும் அறிகுறிகள். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளால், இந்த அறிகுறிகளை சமாளிப்பது சிரமம். மூக்கு அடைப்பு ஏற்பட்டால், மூக்கின் வழியே சுவாசிப்பது சிரமம்; வாய் வழியாகவே சுவாசிக்க முடியும். தாய்ப்பால் குடிப்பது கூட இவர்களுக்கு சிரமம். இதை வெளியில் சொல்ல முடியாமல், அடிக்கடி அழுவதும் சகஜம்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி சமயங்களில் நீர் போன்றோ, வெள்ளை நிற திரவமாகவோ வடியும். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, மூக்கடைப்புடன் சுவாசிக்கும் போது, மெல்லிய சத்தம் வந்தபடியே இருக்கும்.
வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, இரவு நேரங்களில் லேசான இருமலை வரவழைக்கும். மல்லாந்து, தலை சற்றே உயரமாக இருக்கும்படி குழந்தையை படுக்க வைத்தால், மூக்கின் பின்பக்கம் சென்று, ஓரளவு சிரமமில்லாமல் சுவாசிக்க முடியும்.

ஏழு நாட்கள்

சளி பிடித்தால், சிகிச்சை எடுத்துக் கொண்டால், ஏழு நாட்களில் சரியாகும்; இல்லாவிட்டால், ஒரு வாரத்தில் குணம் தெரியும் என்று நகைச்சுவையாக சொல்கிறோம். இதற்கு காரணம், வைரஸ் தொற்றால் ஏற்படும் சளிக்கு, நேரடியான மருந்துகளோ, சிகிச்சையோ இல்லை. அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை செய்கிறோம்.
சளி இருக்கும் சமயங்களில், திரவ உணவுகளை அதிகமாக தர வேண்டும். இது, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கும். உடல் வலியோ, அசவு கரியமாகவோ உணர்ந்தால், ‘பாரசிட்டமால்’ மாத்திரைகளை தரலாம். மூக்கடைப்பு ஏற்படும் நேரங்களில் சுத்தமான, மென்மையான ஈரத் துணி உதவியுடன், மூக்கின் உள்புறம் மெதுவாக சுத்தம் செய்யலாம், இதில் சமையல் உப்பு சிறிதளவு போடலாம்.

தேன்

ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு, வெதுவெதுப்பான நீரில், தேன் கலந்து குடிக்கச் கொடுப்பது, பொதுாக ஏற்படும் இருமலுக்கு மிகச் சிறிந்த நிவாரணம் தரும்.
வேகமாக மூச்சு விடுவது, காதில் வலியுடன் திரவம் வடிவது, மூக்கு துவாரங்களில் ரத்தம் கசிவது, சுவாசிக்கும் போது, அதிகமாக சத்தம் வருவது, உணவு சாப்பிட மறுப்பது. மூக்கிலிருந்து வரும் திரவத்தில் அழுகிய வாடை வருவது, அடர் மஞ்சள் நிற திரவம், சளி குறையாமல் பல நாட்கள் அப்படியே இருப்பது, நாளுக்கு நாள் நிலைமை மோசமாவது போன்ற பிரச்னைகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம் அழைத்து வர வேண்டும்.

வேர்க்கடலை

சில குழந்தைகள், எதிர்பாராத விதமாக இருமுவர்; இதை, கண்டு கொள்ளாமல் விடக் கூடாது. என்ன காரணம் என்று உடனடியாக பார்க்க வேண்டும். காரணம், வேர்க்கடலை உட்பட, உணவுப் பொருள் அல்லது கடினமான பொருள், தவறுதலாக மூக்கின் உள் சென்றிருக்கலாம்.
இது, எந்த வயது குழந்தைகளுக்கும் நடக்கும் விபரீதம் தான். இப்படிப்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவ உதவியை பெற வேண்டும். பொருளை, வெளியில் எடுக்க, நீங்களாகவே முயற்சி செய்வது, ஆபத்தாக முடியலாம்.
சளி, இருமல் என்று குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், ‘ஏதாவது மருந்து, மாத்திரை எழுதி கொடுங்க…’ என்று கேட்கின்றனர். பெரும்பாலான நேரங்களில், மருந்தே தேவைப்படாது. சத்தான ஆகாரம், நிறைய திரவ உணவுகள், சுத்தமான சூழலில் பாதுகாப்பாக இருந்தால் தானாகவே சரியாகி விடும்.
ஒவ்வாமையால் சளி ஏற்பட்டு இருந்தால், ‘ஆன்டிஹிஸ்டமைன்’ மருந்துகளே போதுமானது. தீவிரமாக மூக்கடைப்பு இருந்தால் மட்டுமே, அதற்கேற்ற சிகிச்சை தேவைப்படும்.
சளி, இருமல் போன்ற பிரச்னைகள் பொதுவாக வைரஸ் தொற்றால் ஏற்படுபவை. மூக்கில் அழற்சி, சைனஸ் கோளாறு, ஆஸ்துமா கோளாறு போன்றவை, மூச்சிரைப்பை ஏற்படுத்தலாம். அபூர்வமாக ரிப்ளெக்ஸ் என்று சொல்லப்படும், உணவுக் குழாயில் இருந்து, அமிலத்துடன் சேர்ந்து உணவு மேல் நோக்கி வருவதால் ஏற்படும் பிரச்னையையும் ஏற்படுத்தலாம்.

ஆஸ்துமா

மூச்சிரைப்பு இல்லாமல், ஆனால், அடிக்கடி இருமல் இருப்பது, குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம். இருமலுடன் சேர்ந்து, சத்தமாக மூச்சு வருவது, துாங்கும் போது துாக்கத்திற்கு நடுவே இருமல் வந்து துாக்கத்தை கலைப்பது போன்ற அறிகுறிகள் இருந்தால், சிறிது நேரமே இது போன்ற பிரச்னை இருந்தாலும், முறையான மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், காசநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். தொடர்ந்து பல வாரங்களுக்கு இருமல் இருந்தாலும், டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும். இருமலுடன் காய்ச்சல், உடல் எடை குறைவது என்று, தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இருந்தால், இதுவும் காச நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு ஆண்டில், ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தது, 10 முறையாவது, காய்ச்சலுடன் சேர்ந்தோ அல்லது காய்ச்சல் இல்லாமலோ சளி, இருமல் ஏற்படுகிறது.
வயதிற்கு, உயரத்திற்கு ஏற்ப சரியான உடல் எடையுடன் ஆரோக்கியமாக குழந்தை வளர்கிறது என்றால், குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.
குழந்தைக்கு அடிக்கடி சளி, இருமல் இருந்தால், டான்சில் அல்லது தொண்டையின் உள் பகுதியில் மேல்புறம் திசுக்கள் கூடுதலாக வளரும், ‘அடினாய்ட்ஸ்’ பிரச்னை இருக்கலாமோ என்பது தான், பெற்றோரின் கவலையாக உள்ளது. லேசான இருமல், தொண்டையில் புண் இருந்தாலே, இந்த சந்தேகம் தேவையில்லை. இதற்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தரக் கூடாது.
சில குழந்தைகளுக்கு, பாக்டீரியா தொற்றால், சளி, இருமல் இல்லாமல், அதிக காய்ச்சல், உணவை விழுங்க முடியாத அளவிற்கு தொண்டையில் புண், வீக்கம் இருக்கும். இப்படி இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

சளி தொல்லையிலிருந்து தப்பிக்க…

குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் செல்லாமல் இருப்பது, வீட்டையும் சுற்றுப் புறத்தையும்
சுத்தமாக, துாசி, மாசு இல்லாமல் பராமரிப்பது, கரப்பான் பூச்சி, எலி, பூச்சிகள் இல்லாமல் சுற்றுப்புறத்தை பராமரிப்பது.
மேலும், செல்லப் பிராணிகளான பூனை, நாயிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான உணவு, காய்கறி, பழங்கள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ள குழந்தைகளை பழக்குவது, தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது ஓடியாடி விளையாடச் சொல்வது போன்றவை, எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

தடுப்பூசி

தேவையான எல்லா தடுப்பு ஊசி, மருந்துகளையும் தவறாமல் போட வேண்டியது அவசியம். புளு காய்ச்சலுக்கான தடுப்பு ஊசியை ஒவ்வொரு ஆண்டும், புளு காய்ச்சல் பரவும் செப்டம்பர், அக்டோபர் மாதத்திற்கு முன் அதாவது ஆகஸ்ட் மாதத்தில் போடுவது, வைரஸ் தொற்றிலிருந்து ஓரளவு பாதுகாப்பு தரும்.
டாக்டர் பாலசுப்ரமணியம்,
இயக்குனர்,
காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, சென்னை
044 – 4200 1800

%d bloggers like this: