நுரையீரல் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப தினமும் இந்த ஆசனங்களை செய்யுங்க…

கொரோனா வைரஸால் உலகமே வீட்டில் முடங்கிக் கிடக்கிறது. கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் பலரை மீட்கும் பணியில் மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். மறுபுறம் விஞ்ஞானிகள் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நுரையீரலைத் தாக்கும் ஒரு கொடிய கிருமி. இந்த வைரஸ் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், முதியவர்கள் மற்றும் உடல்நல பிரச்சனைகளான சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் உள்ளவர்களை விரைவில் தாக்கும். எனவே உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் வைரஸ் பரவுவதைத் தடுக்கலாம். பலருக்கும் வீட்டில் இருப்பது அலுத்துப் போயிருக்கும். இந்த ஊரடங்கு காலத்தை சிறப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாசனங்களை தினமும் செய்து வாருங்கள்.

அதுவும் இந்த யோகாசனங்களை தினமும் செய்து வந்தால், நுரையீரல் ஆரோக்கியம் மேம்பட்டு, கொரோனா வைரஸின் தாக்கத்தைத் தவிர்க்கலாம். சரி, இப்போது நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் யோகாசனங்கள் எவையென்று காண்போம்.

சேது பந்தா சர்வங்காசனம்

Yoga Poses For Promoting Lung Health

செய்முறை:

* முதலில் தரையில் கால் நீட்டிப் படுங்கள்.

* பின்னர் கால்களை மடித்து பாதங்களை தரையில் ஊன்றிய நிலையில் வைக்க வேண்டும்.

* பின் உள்ளங்கைகளை தரையோடு சேர்த்து வையுங்கள். கைகளை வளைக்காமல் நேராக வைக்க வேண்டும். இப்போது மெல்ல இடுப்பையும், முதுகையும் உயர்த்துங்கள்.

* இந்நிலையில் சிறிது நேரம் மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பின் சாதாரண நிலைக்கு வாருங்கள். இதுப்போன்று ஐந்து முறை செய்யலாம்.

மர்ஜார்யாசனம்
செய்முறை:
* முதலில் படத்தில் காட்டியவாறு கைகள் மற்றும் முழங்காலை தரையில் ஊன்றி, மேஜை நிலையில் இருக்கவும்.
* பின்பு மூச்சை உள்ளிழுத்தவாறு, வயிற்றுப் பகுதியை கீழ் நோக்கியும், தலையே மேலே நோக்கிவாறு உயர்த்த வேண்டும். இந்நிலையில் 3 நொடிகள் இருக்க வேண்டும்.
* பின் மூச்சை வெளியே விட்டவாறு முதுகு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அதே சமயம் தலை தரையை நோக்கியவாறு 3 நொடிகள் இருக்க வேண்டும்.
* இப்படி குறைந்தது 3 முதல் 5 முறை, இந்த ஆசனத்தை செய்வது நல்லது.

 

அதோ முக ஸ்வனாசனம்

செய்முறை:

* முதலில் நேராக நிமிர்ந்து நில்லுங்கள். ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்ட பின், கால் மற்றும் முட்டிகளை வளைக்காமல் குனியுங்கள்.

* நேராக குனியாமல் சற்று முன்னோக்கி படத்தில் காட்டப்பட்டவாறு குனிந்து உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். கைகள் காதை மூடியவாறு வைக்க வேண்டும். உங்கள் கண்கள் வயிற்றைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.

* நன்றாக ஆழ்ந்து மூச்சை உள்வாங்கி விடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வாருங்கள். இது போல் மூன்று முறை செய்யலாம்.

சக்ராசனம்

செய்முறை:

* முதலில் தரையில் நேராக படுக்கவும்.

* இரண்டு கால்களையும் மடக்க வேண்டும். கால்களுக்கு இடையே, சற்று இடைவெளி இருக்க வேண்டும்.

* கைகளை பின்புறமாக கொண்டு சென்று, கழுத்தின் பக்கவாட்டில் சிறிது இடைவெளி விட்டு, உள்ளங்கை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

* உள்ளங்கைகளை அழுத்தியவாறு, மெதுவாக முதுகை உயர்த்தி, பின் தலையை உயர்த்த வேண்டும். (இந்நிலையில் தலையை கீழே தொங்க விட வேண்டும்.)

* ஆழ்ந்த சுவாசத்திற்கு பின், மெதுவாக பழைய நிலைக்கு வர வேண்டும்.

ஊர்த்வ முக ஸ்வனாசனம்

செய்முறை:

* முதலில் வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும்.

* பாதங்களையும் முன்கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும்.

* உடல் எடை முழுவதும் பாதங்களிலும் கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும். தோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

* மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

%d bloggers like this: