அழகிரியின் ஆவேசம்… ஆரம்பமானது குடும்பப் பேச்சுவார்த்தை!

பிரதமர் கோபமாகப் பேசியதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வரின் கவனம் திரும்பியிருக்கிறது.

சீரியஸ் ஆன கழுகார், நிதானமாக பதில் சொல்லத் தொடங்கினார்…

‘‘தமிழகத்தில் மூன்றாவது கட்டத்துக்கு கொரோனாவின் தாக்கம் செல்லாது என்று அதிகாரிகள் முதல்வரிடம் நம்பிக்கை கொடுத் திருந்தனர். ஆனால், டெல்லி இஸ்லாமிய மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால் இந்த எண்ணிக்கை அதிகமாகத் தொடங்கியது. அதையடுத்து, தமிழகம் அபாயகட்டத்தில் இருப்பதாக முதல்வரின் காதில் போட்டிருக் கிறார்கள் சுகாதாரத் துறையினர். இதைப் பற்றித்தான் வீடியோ கான்ஃபரன்ஸிலும் முதல்வரிடம் ‘என்ன… நீங்க கவனிக்கலையா?’ என்று பிரதமர் கேட்டிருக்கிறார்.’’

‘‘ஓ!’’

‘‘பிரதமர் கோபமாகப் பேசியதையடுத்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முதல்வரின் கவனம் திரும்பியிருக்கிறது. அதையடுத்து தானே களத்தில் இறங்கியதோடு, அதிகாரிகள் அளவில் இதை முழுமையாகக் கையாள்வதற்கான உத்தரவைப் பிறப்பித் தாராம் முதல்வர்.”

‘‘அடடே..!’’

‘‘முதல்வரின் கோபத்தை உணர்ந்த, அமைச்சருக்கு ஆதரவான சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலர், ‘தப்லீக் அமைப்பினர் தமிழகம் திரும்பியபோது, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விட்டது. அதனால், அவர்களால் சமூகப் பரவலுக்கு வாய்ப்பில்லை’ என்று சொல்ல, இன்னும் உஷ்ணமாகி விட்டாராம் முதல்வர்.’’

‘‘பிறகு?’’

‘‘அதிகாரிகளை நோக்கி, ‘என்ன… காது குத்துகிறீர்களா? ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் முழுமையாகக் கடைப் பிடிக்கவில்லை என்று காவல் துறையினர் கதறிக்கொண்டுள்ளனர். டெல்லியிலிருந்து சொல்லும் வரை நமக்கே தகவல் தெரியாது. பிறகு எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? இப்படியெல்லாம் மழுப்பி யாரைத் திருப்திப்படுத்தப்பார்க்கிறீர்கள்? இது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். இனியாவது அனைவரும் உண்மையைப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று சீறியவர், ‘டெல்லி சென்று வந்த அனைவரை யும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வாருங்கள். அவர்களின் வீடுகளுக்கு அருகில் உள்ளவர்களை யும் தொடர் கண்காணிப்பில் வையுங்கள்’ என்று உத்தர விட்டாராம்.’’

‘‘ஓ… இவ்வளவு நடந்துள்ளனவா?’’

‘‘இது தொடர்பாக முதல்வர் ஓர் அறிக்கையும் வெளியிட்டார். அதற்கு மறுநாள்தான், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற ஏராள மானோர் அடையாளம் காணப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து, தாமாக முன்வந்தும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தை சிலர் திட்டமிட்டு திசைமாற்றுவதை உணர்ந்த இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்தையும் தொடர்புகொண்டு ‘டெல்லி சென்றவர்கள் இருந்தால் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்லச் சொல்லுங்கள்’ என்று வலியுறுத்தியிருக் கின்றனர். இதற்கும் பலன் கிடைத்திருக்கிறது.’’

‘‘நல்ல விஷயம்!’’

‘‘மற்றொரு புறம், தனிமை வார்டில் அடைக்கப்பட்டவர் களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளாமலேயே கொரோனா இருப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப் படுவதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.’’

‘‘தமிழகத்தில் முறையாக பரிசோதனை நடந்தால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்கிறார்களே?’’

பிரதமருடன் வீடியோ கான்ஃபரன்ஸில்...

பிரதமருடன் வீடியோ கான்ஃபரன்ஸில்…

‘‘அது உண்மைதான் என்பதை சுகாதாரத் துறையில் இருக்கும் சிலரே ஒப்புக்கொள்கின்றனர். கொரோனா பரிசோதனைகளை அதிகளவில் மேற்கொள்வதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும்!’’

‘‘நிலைமை சீரியஸ் ஆகிக் கொண்டிருப்பது தெரிந்தும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஏன் தனிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள்?’’

‘‘ஏற்கெனவே சொன்னதுபோல், திட்டமிட்டு தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது ஒரு காரணமாகக் கூறப் பட்டாலும், விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவர் மீதான குற்றச்சாட்டையும் அதற்கு காரணமாகச் சொல்கின்றனர்.”

‘‘என்ன குற்றச்சாட்டு?’’

‘‘கொரோனா வைரஸ் தடுப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்ய, சுகாதாரத் துறை அவசரமாக முடிவுசெய்திருக்கிறது. அதை தனக்கு வேண்டிய நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று விஜயபாஸ்கருக்கு நெருக்கமான ஒருவர் வலியுறுத்தியதாகவும், அவர் சொன்ன நிறுவனத்தை, ஒருசில காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் மறுத்து விட்டதாகவும் சொல்கின்றனர். அதனால், டெண்டரை முடிவுசெய்வதில் காலதாமதமாகியிருக்கிறது. கையுறை, முகக்கவசம் உள்ளிட்டவற்றை உடனே கொள்முதல் செய்ய முடியாத நிலை முதல்வர் அலுவலகத்துக்குத் தெரிந்து, அதன் பிறகே விஜயபாஸ்கரை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.’’

‘‘தி.மு.க-வில் புகைச்சல் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே?’’

‘‘கே.பி.ராமலிங்கத்தின் பதவியைப் பறித்த மறுதினமே, மதுரை முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரன் ‘ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் தி.மு.க-வில், கருத்து சொன்னதற்காக ஒருவரின் பதவியைப் பறிக்கக் கூடாது. அதை தலைமை மறுபரிசீலனை செய்து, அவருக்கு மீண்டும் பதவியை வழங்க வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார். இதில், ஸ்டாலின் செம கடுப்பாகிவிட்டாராம்.’’

‘‘பதவியைப் பறித்தது மட்டுமல்லாமல், ராமலிங்கத்தை கட்சியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்துவிட்டாரே?’’

‘‘ஸ்டாலினுக்கு எதிராக கே.பி.ராமலிங்கம் கருத்து தெரிவித்தபோது, துரைமுருகனிடம் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘பதவியிலிருந்து மட்டும் நீக்குங்கள். ராமலிங்கம் கண்டிப்பாக வருத்தம் தெரிவிப்பார். அதற்குப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறார். ஆனால், மூன்று நாள்களாகியும் ராமலிங்கம் தரப்பிலிருந்து அறிக்கை, கடிதம் எதுவும் வராததால் கட்சி யிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையில், அழகிரி ஆதரவாளரான செ.ராமச்சந்திரனின் அறிக்கையும் வர, ஸ்டாலின் செம கடுப்பாகி விட்டார்.’’

‘‘அழகிரி ரியாக்‌ஷன் என்னவாம்?’’

அழகிரி

அழகிரி

‘‘ `ஸ்டாலினை, முதல்வர் ஆக விட மாட்டேன்’ என்று இப்போது மீண்டும் சொல்ல ஆரம்பித்துள்ளாராம். ‘இந்தச் சமயத்தை நான் பயன்படுத்தாவிட்டால், இனி எப்போதும் எனக்கு வாய்ப்பு வராது’ என்றும் சொல்லி யிருக்கிறார். இந்தத் தகவல் ஸ்டாலின் காதுகளுக்கு எட்டியதும், செல்வி மற்றும் செல்வத்தை வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். ‘அறக்கட்டளையில் பதவியும், கட்சியில் தன் மகனுக்கு பதவியும் கிடைத்தால் அழகிரி அமைதியாக இருப்பார். இல்லை யென்றால், ஏதாவது குடைச்சல் கொடுப்பார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் சைலன்ட் மோடில் இருக்கிறார்களே?’’

‘‘அவரவர் மாவட்டத்தில் பணிகளைச் செய்துகொண்டிருந்தாலும், வெளியே வர யோசிக்கிறார்கள். அடுத்த சில நாள்களில் மக்களிடம் பொருளாதாரச் சிக்கல் வந்துவிடும், நெகட்டிவ் ரியாக்‌ஷன் வந்துவிடக் கூடாது என்று அமைதியாக ஒதுங்கிவிட்டார்கள். அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களில் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதற்காக முதல்வர் ஒரு குழு அமைத்திருக்கலாம் என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது.’’

‘‘தமிழக பா.ஜ.க தலைமையில் அதற்குள் முனகல் சத்தம் எழுந்துவிட்டதுபோலிருக்கிறதே?’’

‘‘ஆமாம். புதிய தலைவராக முருகன் தேர்வு செய்யப்பட்டதும் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்தார்கள். அதற்குப் பிறகு வழக்கம்போல் சத்தமில்லாமல் அவரைப் புறக்கணிக்கும் வேலை ஆரம்பித்துவிட்டதாம். குறிப்பாக, மூத்த தலைவர்கள் சிலர் ‘தலைவர் என்றாலும் நாங்கள் சொல்வதைத்தான் அவர் கேட்க வேண்டும். அவர் சொல்வதைக் கேட்டு நாங்கள் செயல்பட முடியுமா?’ என்று வெளிப்படையாகவே பேசுகிறார்களாம். அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை வைத்துக்கொண்டு இந்தக் குளறுபடியில் எப்படி கட்சியை மாநிலத் தலைவர் நடத்தப்போகிறாரோ என வருத்தப்படுகிறார்கள் கீழ்மட்ட நிர்வாகிகள்’’ என்ற கழுகார் வீடியோ காலில் இருந்து வெளியேறினார்.

%d bloggers like this: