விளையாட்டு… விளையாட்டாகவே இருக்கட்டும்!

விளையாட்டு… பல நன்மைகளைத் தரும் அருமருந்து என்று தெரியும். அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுவதும் உண்டு. ஆமாம்… வியாபார நோக்கத்துக்காக விளையாடப்படும்போது அது உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு தேவையற்ற அழுத்தங்களைத் தந்துவிடுகிறது.  விளையாட்டை விளையாட்டாக விளையாடும்போது எந்த மன அழுத்தமும் ஏற்படாது. என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். பொழுதுபோக்காக எங்கு வேண்டுமானாலும் போகலாம். அதுவே ஒரு குழுவாக, நாட்டுக்காக விளையாடும்போது விளையாட்டில் ஒழுக்கம்

தேவைப்படுகிறது. இதனால் பல மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. தொழில்முறையாக விளையாட்டை எடுத்துக் கொள்கிறவர்கள் இதுபோல் கூடுதல் அழுத்தத்துடனேயே இருக்கிறார்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
இதை தெளிவாகப் புரிந்துகொள்ள கொஞ்சம் விளக்கமாகப் பார்க்கலாம். விளையாட்டுக்காக பயிற்சி எடுக்கும் காலக் கட்டம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது. Off season என்ற பிரிவு வீரர்களுக்கான தயார் செய்யும் காலம். இது 6 வாரம் முதல் 2 வருடம் வரை நடக்கும். அவர்களுக்கு பயிற்சி கொடுக்க அவர்களின் உடல் கட்டமைப்பை பார்த்து அவர்களுக்கு எந்த விளையாட்டு போட்டியில் கலந்துகொள்கிறார்களோ அதற்கு ஏற்றார்போல் உடலில் கொழுப்பு அதிகமாக இருந்தால் அதை குறைத்து உடல் வலிமையை மெருகேற்ற வேண்டும். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சிகளும் கூடுதலாகக் கொடுக்கப்படும்.
பயிற்சி எடுத்துக்கொண்ட அனைத்தையும் விளையாட்டு மைதானத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது Cortisol stress hormones சுரப்பு அதிகமாகும். விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கும்போது ஐஸ்க்ரீம், இனிப்புகள் போன்ற தான் விரும்பிய உணவுகளை சாப்பிட முடியாது. ஆனால், அதற்கான தூண்டுதல் உடலிலும், மனதிலும் இருக்கும். இது விளையாட்டு வீரர்களுக்கான மிகப்பெரிய சோதனை. போட்டிக்காக தொடர்ந்து பயிற்சி எடுக்கும்போது மூளையில் சோர்வு(Neural fatigue) ஏற்படும்.
சராசரி மனிதனோடு ஒப்பிட்டு பார்க்கும்போது விளையாட்டு வீரனுக்கு சந்தோஷம் என்பது குறைவுதான். எப்போதுமே போட்டியை கண் முன்னால் வைத்து பயிற்சி எடுக்க வேண்டி உள்ளது. மன அழுத்தம் இருப்பது உணரப்பட்டால் Diaphragmatic breathing என்கிற யோகா, ரிலாக்சேஷன் தெரபி கொடுக்கப்படும். சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது என்று உணரப்பட்டால் அவர்களுக்கு மன நல மருத்துவர் சந்தித்து ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ள வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக இலக்கு வைத்து விளையாட்டில் தோல்வி காணும்போது மனதில் விரக்தி ஏற்படவும் வாய்ப்பு அதிகம். ஊடகங்களின் விமர்சனமும் முக்கிய காரணமாக அமைகிறது. சில நேரத்தில் மனது ஒத்துழைக்கும்; ஆனால் உடல் ஒத்துழைக்காது. ஏலத்தில் அதிக விலைக்கு வீரர்களை வாங்குவதும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மன அழுத்தம் ஏற்படுத்திவிடுகிறது.
இவையெல்லாம் எதற்காக இங்கே நினைவுகொள்ளப் பட வேண்டும் என்ற கேள்வி எழுகிறதுதானே… கோடிகளில் புரள்வதாக நாம் நினைக்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை கடினமான பாதை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல் இலக்குகளும், வியாபார நோக்கங்களும் கலக்கும்போது விளையாட்டு என்பது வினையாகிவிடும். எனவே, விளையாட்டை விளையாட்டுக்காக மட்டுமே விளையாடுங்கள். அதுதான் நாம் எதிர்பார்க்கும் நன்மைகளையும் தாண்டி பல நல்ல மாற்றங்களை நிகழ்த்தும்!

%d bloggers like this: