மாஸ்க்குகளுக்குகூட தட்டுப்பாடு… விஜயபாஸ்கரிடம் எகிறிய எடப்பாடி?

இந்த முறை ஹேங் அவுட்ஸ் காலில் நம்மை அழைத்தார் கழுகார்… “நான் ஃபில்டர் காபி குடிக்கிறேன். உமக்குப் பிடித்ததை நீரே வீட்டில் போட்டுக்கொள்ளும்!” என்று நம்மிடம் ‘சியர்ஸ்’ காண்பித்தவரிடம் “ஏப்ரல் 14-க்குப் பிறகும் இதே நிலைமைதானா… நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்கிறார்களே?” என்று கேட்டோம்.

காபியை ருசித்துக்கொண்டே நமக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்…

“இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னும் உறுதியான எந்த முடிவையும் எடுக்கவில்லை. முக்கிய அதிகாரிகளுடனும் மூத்த அமைச்சர்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்திக்கொண்டே இருக்கிறார். 8-ம் தேதி ஸ்கைப் வழியாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடக்கிறதல்லவா, அதிலும் இதுபற்றி விவாதிக்க உள்ளனர். ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தாமல் பகுதிப் பகுதியாகத் தளர்த்தலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்”

“பகுதிப் பகுதியாக என்றால்?”

“ ‘மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு பாதிப்பு இருக்கிறது. எங்கெல்லாம் பாதிப்பு அதிகளவில் இருக்கிறதோ… அங்கெல்லாம் ஊரடங்கைத் தளர்த்த வேண்டாம். பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் வேண்டுமானால் சில கட்டுப்பாடுகளோடு ஊரடங்கைத் தளர்த்தலாம். கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விட்டுவிடலாம். அதே நேரத்தில், மாநிலங்களுக்கு இடையிலான தொடர்புகளைத் துண்டித்தே வைத்திருக்கலாம்’ என ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.”

“ஓஹோ… பிரதமர் என்ன முடிவு எடுத்திருக்கிறாராம்?”

“அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்த வார இறுதியில் இதுகுறித்து தொலைக்காட்சியில் உரையாற்ற இருக்கிறாராம்.”

“தமிழகத்தில் ஏதேனும் பிரத்யேக முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளனவா?”

“திங்கள்கிழமை அன்று, தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சில நாள்களாக தேனியில் முகாமிட்டிருந்த துணை முதல்வர் பன்னீர் செல்வமும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன, தமிழகத்தில் தடையை நீடிப்பதா… வேண்டாமா என்பது பற்றியும் அப்போது பேசியிருக்கின்றனர்.”

“என்ன முடிவு எடுத்தார்களாம்?”

“ ‘பொதுமக்களுக்கான அத்தியாவசியத் தேவைகள் முறையாகச் செல்கின்றனவா?’ என்று தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி-யிடம் கேட்ட முதல்வர், `ஆயிரம் ரூபாய் நிவாரணத்தை சரியாகத் தரச் சொல்லுங்கள். சில பகுதிகளில் பொருள்கள் தட்டுப்பாடு எனத் தகவல் வருவதை சரி செய்யுங்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார். அதற்குப் பிறகு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் செய்யப்பட்டுவரும் முன்னேற்பாடுகள் குறித்தும் கேட்டிருக்கிறார். ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பிறகு மத்திய அரசு ஊரடங்கைத் தளர்த்தினால், நாம் என்ன மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.”

“ஓஹோ!”

“10-ம் தேதி வரை தமிழகத்தில் கொரோனா தொற்று எப்படி இருக்கிறது எனப் பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு தமிழகத்தில் என்ன மாதிரியான முடிவை எடுக்கலாம் என முடிவுசெய்துள்ளார்கள். ‘அதற்கு முன்பாக மத்திய அரசிடமும் ஆலோசனை செய்துகொள்ளலாம்’ என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். தமிழகத்திலும் முழு அளவில் ஊரடங்கை விலக்கிக்கொள்ளும் திட்டம் இப்போது வரை இல்லை என்கிறார்கள். குறிப்பாக, மாவட்ட எல்லைகளை மட்டும் சீல் வைத்துவிட்டு பொதுமக்களை நடமாட அனுமதிக்கலாம் என நினைக்கிறார்கள். ‘பலருக்கு 14 நாள்களுக்குப் பிறகுதான் பாதிப்பு இருப்பதே அறிய முடிகிறது. ஆகையால், பாதிப்பு உள்ள பகுதிகளை இந்த மாத இறுதி வரை சீல் செய்துவைத்திருப்பதே நல்லது’ என்று சுகாதாரத் துறை சொல்லியிருக்கிறது.”

“தமிழகத்தில் போதிய அளவு வென்டிலேட்டர் இல்லை என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதே?”

 

“வேலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசுக்குக் கொடுத்த ஓர் அறிக்கைதான் இந்தச் சர்ச்சைக்குக் காரணம் என்கிறார்கள். `போதிய அளவு வென்டிலேட்டர் வசதி இல்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிமானால் சமாளிப்பது கடினம்’ என, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓர் அறிக்கையை அவர் கொடுத்திருக்கிறார். அதேபோல், ‘தமிழகத்தில் பல மாவட்டங்களில் தேவையான அளவுக்கு மாஸ்க்குகள்கூட இல்லையாம். இதனால் கடுப்பான முதல்வர், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் எகிறிவிட்டார்’ என்ற தகவலும் கோட்டை வட்டாரத்தில் பரபரக்கிறது.”

“கொரோனா விவகாரத்தில் தனது செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று, சத்தமில்லாமல் ஆய்வு நடத்திவிட்டாராமே முதல்வர்?”

“உண்மைதான். ‘கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 1,000 ரூபாய் வழங்கியது மக்களிடம் இருந்த கொந்தளிப்பை அடக்கிவிட்டது’ என்று சொல்லியிருக்கின்றனர். ‘இதுபோன்ற நேரத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டில் இருப்பதே அரசுக்கு வெற்றிதான்’ என்று அந்த டீம் அறிக்கை கொடுத்துள்ளதாம். இது முதல்வருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள்.”

“எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் உரையாடி இருக்கிறாரே?”

“ம்! எதிர்க்கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை பிரதமரே தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அந்த வகையில்தான் தி.மு.க தலைவருக்கும் பேசியிருக்கிறார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் நடந்துள்ளன. அரசியல் ஒன்றும் பேசிக்கொள்ள வில்லையாம். ஏப்ரல் 8-ம் தேதியன்று நடக்கவுள்ள கூட்டத்தில் தான் கலந்துகொள்ள இயலாது என்றும், தனக்குப் பதிலாக டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.”

“ம்… தமிழகத்தின் நிதி நிலவரம் எப்படி இருக்கிறது?”

“தமிழக அரசின் நிதிநிலை ஏற்கெனவே மோசமாக இருந்துவந்தது. இப்போது கொரோனாவால் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறதாம். அறிவித்த திட்டங்களைச் செயல் படுத்துவதில்கூட சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம். மத்திய அரசு மனதுவைத்தால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று அதிகாரிகள் சொல்லி இருக்கின் றனர். ‘மாற்று ஏற்பாடு ஏதாவது செய்யுங்கள். மத்திய அரசிடமிருந்து பெரிதாக எதையும் இப்போது எதிர்பார்க்க முடியாது’ என்கிற யதார்த்தத்தைச் சொல்லியிருக்கிறார் முதல்வர்” என்ற கழுகார், சட்டென அழைப்பைத் துண்டித்தார்.

%d bloggers like this: