ஆறு மாதம் அமைதியாக இரு!” – அமைச்சருக்கு ஆறுதல் சொன்ன தி.மு.க நிர்வாகி

பல மாநில அரசுகள், `ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்’ என வேண்டுகோள் வைத்துள்ளன. அதை தொடர்ந்துதான், `ஏப்ரல் 11-ம் தேதி அன்று, அனைத்து மாநில முதல்வர்களுடன்

ஆலோசனைக் கூட்டம்’ என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து விவாதிக்கப்படவுள்ளதாம். இன்னும் இரண்டு வாரங்கள் இந்த ஊரடங்கை நீட்டிக்கச் செய்யலாம் என மத்திய அரசு திட்டமிடுகிறது. இந்த நிலையில், அதிகாரிகள் தரப்பில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.’’

‘‘என்ன அது?’’

‘‘இந்தியாவின் மக்கள்தொகை 130 கோடி! இந்த நாட்டில் 21 நாள் ஊரடங்கு என்பதே பெரிய விஷயம். இதை இன்னும் நீட்டித்தால், பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரும். குறிப்பாக, அடித்தட்டு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அதனால் முழு ஊரடங்கு என்பதை நிறுத்திவிட்டு, சில கட்டுப்பாடுகளோடு தளர்வுகளைக் கொண்டுவரலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கின்றனர். எப்படியிருந்தாலும், தமிழ்நாட்டில் முழு தளர்வு இருக்காது என்பதே தற்போதைய நிலை.’’

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

‘‘கொரோனா விவகாரத்தால் அரசியல் களம் அமைதியாகிவிட்டது போலவே?’’

‘‘அமைதிக்குப் பின்னால் புயல் இருக்கப்போகிறது! அதிலும் ஆளுங்கட்சிக்குள் நிலவும் பனிப்போர், கொரோனாவுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கலாம்.’’

‘‘ஆளுங்கட்சியில் அப்படி என்னதான் நடக்கிறது?’’

‘‘சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையேயான பிணக்கு அதிகரித்துவருகிறதாம். சமீபத்தில் முதல்வரைச் சந்திக்க அவரின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறார் விஜயபாஸ்கர். வீட்டில் காத்துக்கொண்டிருந்தபோது முதல்வர் வெளியே வந்து அங்கு இருந்த அதிகாரிகளுக்கு மட்டும் ஆலோசனை வழங்கிவிட்டு உள்ளே சென்று விட்டாராம். இதுபோன்று இரண்டு முறை வெளியே வந்தும் விஜயபாஸ்கரைப் பார்த்துப் பேசவில்லையாம். மூன்றாவது முறை வெளியே வந்தபோதுதான் விஜயபாஸ்கரைக் கண்டுகொண்டதுபோல், ‘என்ன தம்பி… எப்படி இருக்க?’ என்று சம்பிரதாயத்துக்கு விசாரித்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம்.’’

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர்

‘‘முதல்வரின் பாராமுகம் எதனால் ஏற்பட்டதாம்?’’

‘‘ ‘சுகாதாரத் துறை அமைச்சர் கொரோனா விவகாரத்தில் ஸ்கோர் செய்துவிட்டார் என்பதால் ஏற்பட்ட கோபம்’ எனச் செய்திகள் கசிந்தாலும், `உண்மை அதுவல்ல’ என்கின்றனர் உள்விவகாரங்களை அறிந்தவர்கள். ‘தற்போது அதிகமான நிதி ஒதுக்கீடு சுகாதாரத் துறை அமைச்சகத் துக்குத்தான் செல்கிறது. பல கோடிகளில் பொருள்கள் வாங்கப்படுகின்றன. இதில் புழங்கும் கமிஷன்தொகை தொடங்கி பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் சுகாதாரத் துறையில் ஏகப்பட்ட முட்டல்மோதல்களாம். இது கட்சியையும் பாதிக்கிறதாம். இதனால்தான், விஜயபாஸ்கர் ஓரங்கட்டப்பட்டார்’ என்கிறார்கள் அவர்கள்.’’

‘‘ஓஹோ!’’

ஸ்டாலின்

ஸ்டாலின்

‘‘இதற்குப் பின்னால் மற்றொரு கதையும் சொல்கின்றனர். சுகாதாரத் துறையில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை வைத்துதான் இப்போது விஜயபாஸ்கருக்கு எதிராக சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன. அந்த அதிகாரியின் பெயரை சம்பந்தமில்லாமல் வெளியிட்டதும், துறையைச் சேர்ந்த இன்னொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என்கிறார்கள். ‘தான் செய்த சில தவறுகளை அந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி கண்டுபிடித்து அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய கோபத்தில் இருந்த அந்த ஐ.ஏ.எஸ், இப்போது சமயம் பார்த்து அமைச்சர் தரப்புக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தரப்புக்கும் கமிஷன் முறைகேடு என்று கதையை உலவவிட்டு இப்போது குளிர்காய்ந்துவருகிறார்’ என்று சொல்கின்றனர்.’’

‘‘சரிதான்!’’

‘‘சமீபத்தில், மத்திய உளவுத்துறை டெல்லிக்கு ஒரு நோட் அனுப்பியுள்ளது. அதன் சாராம்சத்தைச் சொல்கிறேன். கரன்ஸிகளை கை நிறைய வைத்திருக்கும் அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர் அவர். தி.மு.க-வின் நிர்வாகி ஒருவரை சமீபத்தில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இருவருமே ஒருகட்டத் தில் நெருக்கமாக இருந்தவர்கள். ‘அமைச்சராக இருந்தும் என்ன செய்ய… ஏகப்பட்ட நெருக்கடி! வரும் தேர்தலில் கையில் உள்ள காசையெல்லாம் செலவு செய்ய வைத்துவிடுவார்கள்போல’ என்று தி.மு.க பிரமுகரிடம் புலம்பி யிருக்கிறார். அப்போது தி.மு.க பிரமுகர், ‘ஆறு மாதம் அமைதியாக அங்கு இரு. அதன் பிறகு இந்தப் பக்கம் வந்து விடலாம். மேலிடத்தில் பேசி உனக்கு வேண்டியதை நான் செய்துதருகிறேன். அடுத்த முறையும் ஆளும் கட்சியில் உனக்கு இடம் உண்டு’ என்று வலை விரித்துள்ளார். அந்த அமைச்சரும் அதற்கு அரை மனதுடன் ஓ.கே சொல்லிவிட்டாராம். இந்த விவகாரம் இன்னும் கொஞ்ச காலத்தில் வெடிக்கும்.’’

‘‘தி.மு.க முகாம் எப்படி இருக்கிறது?’’

‘‘பொதுக்குழு தள்ளிப்போவதால், கட்சிக்குள் பொருளாளர் பதவிக்குப் போட்டி அதிகரித் துள்ளது. டி.ஆர்.பாலுவுக்கு உறுதி என்று சொல்லி வந்தார்கள். இப்போது எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோரும் போராடிப் பார்க்கலாம் என முடிவுசெய்துள்ளனராம். அதேபோல், துணைப் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கடுமையாக முட்டுவார்கள் என்கின்றனர். ஏற்கெனவே ஜெகத்ரட்சகன், ‘எனக்கு இந்த முறை கௌரவமான பதவியைத் தந்துவிடுங்கள்’ என்று ஸ்டாலினிடமே மல்லுக்கட்டியிருக்கிறாராம்.’’

கனிமொழி

கனிமொழி

‘‘ம்!’’

‘‘இது ஒருபுறம் என்றால், மற்றொருபுறம் தி.மு.க-வின் வாரிசுத் தலைவர்கள், அடுத்த ஆண்டு ஆட்சியை அமைத்தவுடன் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி, எந்த அதிகாரிக்கு என்ன துறை என்றெல்லாம் பட்டியலிட்டுவருகிறார்களாம். ‘இந்த மாதிரி 2016-ம் ஆண்டில் பட்டியல் போட்டு ஏமாந்தது போதாதா… மீண்டும் அதே வேலையை ஆரம்பித்துவிட்டார்களே’ என்று மூத்த நிர்வாகிகள் புலம்புகின்றனர்.’’

‘‘நல்ல வேடிக்கைதான்!’’

‘‘தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி, தனது தொகுதிக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சென்னையிலிருந்து காரிலேயே தொகுதிக்குச் சென்று சில நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொகுதி நிதி ஒருபுறம் என்றாலும், தனது சொந்த நிதியையும் பயன்படுத்தி உதவிகளைச் செய்தாராம். தொகுதிக்குச் செல்லும் முன்பே, இந்தந்தப் பொருள்களையெல்லாம் வாங்கி வைத்துவிடுங்கள் என்று அனிதா ராதாகிருஷ்ண னிடம் பட்டியலைக் கொடுத்துள்ளார். இப்படி தொகுதி நிதி, தன் சொந்த நிதி, மற்றவர் நிதி… அனைத்தையும் கலந்துகட்டி நலத்திட்ட உதவிகளைச் செய்த தகவல் மு.க.ஸ்டாலினுக்குத் தெரிந்ததும், ‘யாரைக் கேட்டு இப்படி இந்த நேரத்தில சென்றுள்ளார்?’ என்று குடும்ப உறுப்பினர்களிடம் கடுகடுத்தாராம்.’’

‘‘அப்படியா!’’

‘‘ம்… ஆனால், அடுத்து நடந்ததையும் கவனிக்க வேண்டும். அதுவரை வீட்டில் இருந்து வீடியோ கான்ஃபரன்ஸ் நடத்திக்கொண்டிருந்தவர், உடனடியாக தனது கொளத்தூர் தொகுதிக்கு விசிட் அடித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்’’ என்றவர் வீடியோ காலில் இருந்து வெளியேறினார்

%d bloggers like this: