ஆன்லைன் கேம்ஸ்… ஆபத்தாகிவிடாமல் தவிர்ப்பதற்கான ஆலோசனைகள்!

கேம் விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் முன், பின் ஆன்லைன் கேம் விளையாடாதவர்கள்கூட, பணம் சம்பாதிக்க நினைத்து அதில் வீழ்கின்றனர்.

இந்த லாக்டௌன் நாள்கள் பலருக்கு நல்ல மாற்றங்களைத் தந்து வருகின்றன என்றாலும், நிறைய பேர் வீடுகளில் முடங்கிப் போய்விட்டதாலேயே மொபைல் கேம்களில் மூழ்கிவிடுகிறார்கள். அதிலும் இப்போதெல்லாம் கேம் விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் முன், பின் ஆன்லைன் கேம் விளையாடாதவர்கள்கூட, பணம் சம்பாதிக்க நினைத்து அதில் வீழ்கின்றனர். இதன் விளைவுகளைப் பற்றி மனநல மருத்துவர் ருத்ரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 

1. ஆன்லைன் கேம் அடிக்‌ஷனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன?

முதலில் கண் பாதிக்கப்படும். அமரும் விதத்தைப் பொறுத்து கழுத்துவலி, முதுகுவலி வரலாம். உறக்கம் கெடுவதால் மலச்சிக்கல் வரலாம், தலைவலியும் ஏற்படும். இந்த உடல் பிரச்னைகளோடு, ஸ்ட்ரெஸ், மனச்சோர்வும் ஏற்படலாம்.

2. விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற மனநிலை பற்றி?

சூதாடத் தூண்டும் பல நிகழ்நிலை (online) விளையாட்டுகள் கையிலிருக்கும் செல்பேசியிலேயே வந்துவிட்ட பின், இளைஞர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் இதனால் கவரப்பட்டு, இதில் மூழ்கித் தன்னிலை இழப்பது இப்போது அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பணம் வருகிறதா என்று எனக்குத் தெரியாது. பணம் சம்பாதிக்கலாம் என்பது தீவிரமான ஒரு தூண்டுதல். விளையாட்டு, போட்டி என்பதையெல்லாம் மீறி இது அடிமையாகும் ஒரு பழக்கமாக (addiction) மாறுவதும் சாத்தியம். ஒரு போட்டி, அதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்பது ஆரம்பத்தில் ஆர்வமாகவும் வேட்கையாகவும் இருந்தாலும், அதுவே ஒரு வெறியாக மாறுவது சிலருக்கு நிகழும். இது அவரவர் தனிப்பட்ட ஆளுமையைப் பொறுத்த ஒன்று.

 3. இளைஞர்களின் ஆன்லைன் சூதாட்டம் அடிக்‌ஷன் உளவியல் பற்றி..?

இன்று நிறைய இளைஞர்களுக்கு ஆடம்பரங்களின் மீது ஒரு மோகமே இருக்கிறது. விளம்பரங்கள் காட்டும் பைக், மொபைல், உணவகங்கள், உடைகள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அத்தியாவசிமானவை என்று நினைக்கும் அளவு மனச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களது குடும்பப் பொருளாதாரச் சூழல் இடம் தராவிட்டால், எளிதுபோல் விரைவுபோல் தோன்றும் இவ்வகைச் சூதாட்டங்களில் அவர்களது மனம் இயல்பாகவே நாட்டம் கொள்ளும்.

4. புளுவேல் போன்ற விபரீத விளையாட்டுகளைப்போல இதிலும் நேர வாய்ப்புண்டாகுமா?

புளுவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் முதிர்ச்சி இல்லாத இளைஞர்கள்தான் ஈடுபட்டார்கள். அந்த புளுவேல் விரைவிலேயே தன் கவர்ச்சியை இழந்ததற்குக் காரணம், அது உயிர்களோடு விளையாடியதுதான். தன்னுயிர் காத்தல் என்பது மனித மனதின் அடிப்படை நோக்கம். ஆகவே இப்படிப்பட்ட விபரீதங்கள் இம்மாதிரி விளையாட்டுகளில் உருவாகும் வாய்ப்பு குறைவு.

 

5. இத்தகைய விளையாட்டுகளில் மனம் ஈடுபடாதவாறு தடுப்பது எப்படி?

மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும்கூட ஆரம்பத்தில் ‘என்னதான் இருக்கிறது பார்ப்போம்’ எனும் தேடல் ஆர்வத்தில் உருவாகிறவைதான். ஆகவே, `இது சரியில்லை’ எனும் எண்ணத்தை பள்ளி மாணவர்களிடம் முதலில் ஆழப் பதியவைக்க வேண்டும். பதின்ம வயதுகளில் இப்படி ஒரு போலி வீரம் காட்டும் ஆர்வம் சிலருக்கு வரும். ஆனால், இது வீரமல்ல, வெட்கப்படும் அளவுக்கு அநாகரிகம் என்பதை நாம் குழந்தைப் பருவத்திலிருந்தே கருத்தேற்றம் செய்தால் தடுக்கலாம்.

 

6. இந்த விளையாட்டுகளில் வீழ்ந்தவர்கள் மீள வழி?

இதில் உள்நுழைந்துவிட்டு வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு, எல்லா போதைப் பிடிகளிலிருந்தும் மீட்கும் அதே முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். முதலில் கணினி மற்றும் செல்பேசியிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். இதன் விளைவாக எரிச்சல், கோபம், சோர்வு, படபடப்பு, பதற்றம் எல்லாமும் ஆரம்பத்தில் இருக்கும். அப்போது மிகவும் நிதானத்துடன், பொறுமையுடன் குடும்பமும் சுற்றமும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து, ‘பரவாயில்லை கொஞ்சமாக விளையாடிக்கொள்’ எனும் சலுகைகள் கண்டிப்பாக உதவாது.

ஆரம்பத்தில் ஏற்படும் பதற்றமும் கோபமும், ஒரு சோர்வு நிலையில் போய் முடியும். அப்போது அவர்களுக்கு நேரத்தைச் செலவழிக்க மாற்று வழிகளைக் கைகாட்டி, அவற்றில் ஈடுபடவைக்க வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆளுமை, ஆர்வம், திறன் ஆகியவற்றைப் பொறுத்து திட்டமிடப்பட வேண்டும். இதிலிருந்து மீண்டவர் மறுபடியும் ஆன்லைன் கேம்ஸ் போதையில் சிக்கிக்கொள்ளாதிருக்க, அவர்களைச் சில மாதங்களாவது கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சபலம் தோன்றும்போதெல்லாம், ‘இது தவறு’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்க வேண்டும்.

 7. ஆன்லைன் கேம் ரகங்களில் பரிந்துரைக்கத்தக்கவை..?

என்னென்ன விளையாட்டுகள் உள்ளன என்று எனக்குத் தெரியாது. 1990-ல் முதலில் நான் கணினி பயன்படுத்த ஆரம்பித்தபோது அதில் சதுரங்கம் விளையாடுவதில் எனக்கு ஈடுபாடு இருந்தது. சூதாட்டமாக இல்லாத, வன்முறையை மனதளவிலும் தூண்டாத விளையாட்டுகள் இருந்தால் அவற்றை விளையாடலாம். விளையாடும் நேரத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் முதலிலிருந்தே வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

%d bloggers like this: