கொரோனா வைரஸ் உலகைப் புயல்போல் தாக்கியுள்ளது, மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வருவதற்கே அஞ்சுகிறார்கள். இந்தப் பிரச்னையில் நம்முடைய நாடு தொடர்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில், ஒவ்வொரு தனி மனிதரும் அனைத்து நடவடிக்கைகளையும் அறிந்திருப்பது முன்பு எப்போதையும்விட மிக முக்கியமாகிவிட்டது.
நெருக்கடியின் அளவு மிகப் பெரிதாக உள்ளதால், அதை இயன்றவரை கட்டுப்படுத்துவதுதான் இதற்கான ஒரே தீர்வாக உள்ளது. அரசு, நல அலுவலர்கள் மற்றும் உலகச் சுகாதார அமைப்பு ஆகியோர் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்கள், இவற்றை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்ளவேண்டும், அதன்மூலம் தங்களைப் பாதுகாப்பாகவும் நலத்துடனும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
ஆனால், உணவுப் பொருட்கள் வழங்கப்படும்போது அவற்றை எப்படிக் கையாள்வது என்று மக்களுக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதைவிட, உணவுப்பொருட்களை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுவது மிகப் பாதுகாப்பான மாற்று என்று நினைப்பதா, கூடாதா என்று பல குழப்பங்கள் உள்ளன. கொரோனாவைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்காக முழுமையாகக் கிருமிநீக்கம் செய்யவேண்டும், ‘கை கழுவுதல்’ அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும் என்ற சூழ்நிலையில், உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதில் இருக்கும் பாதுகாப்பை மக்கள் உணர்வதில்லை. உணவுப் பொருட்களை உங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாக வழங்கச்செய்வதுபற்றிய சரியான எதார்த்தத்தைக் கூடுதலாக உணர்ந்துகொண்டு, தவறான நம்பிக்கைகளை மாற்றுவது முக்கியமாகும். முதலில், கொரோனாவைரஸ் என்பது மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வைரஸ் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். நோய்த்தொற்று கொண்ட ஒரு மனிதருக்கு மிக அருகில் வரும்போதுதான் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, உணவுப் பொருட்கள் அல்லது பொருள் பொதிகளின்மூலம் வைரஸ் பரவும் ஆபத்து குறைவு, ஏனெனில், பரப்புகளில் அது உயிர்வாழ்வது அரிது. தேசிய நலக் கல்வியமைப்புகள் (NIH) நடத்தியுள்ள ஓர் ஆய்வின்படி, கார்ட்போர்ட் அட்டையில் வைரஸின் ஆயுட்காலம் 24 மணிநேரம், பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் அதன் ஆயுட்காலம் 72 மணிநேரம். இத்துடன் ஒப்பிடும்போது, காற்றில் அது உயிர்வாழும் காலகட்டம் மூன்று மணிநேரம். ஆகவே, மக்கள் உணவுப் பொட்டலங்களைப் பெறும்போது, அவற்றைக் கவனமாகக் கையாளவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. உணவு வழங்கல் வழிகள் பலவும் பின்பற்றும் நல நெறிமுறையானது, தொடுதல் இல்லாத வழங்கல். அதாவது, பொருட்களை வழங்கும் நபர் உணவுப் பொட்டலத்தைத் தங்களுடைய வாடிக்கையாளருடைய வீட்டுக்கு வெளியில் வைத்துவிடவேண்டும், அவர்களை முகத்துக்கு முகம் சந்திக்கக்கூடாது.