எச்சரித்த வல்லுநர் குழு; முடிவுகளை மாற்றிய முதல்வர்..!’ – மே 3 வரை தளர்த்தப்படாத ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இந்தியா முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவு

பிறப்பிக்கப்பட்டது. கொரோனா தொற்று மேலும் பரவியதையடுத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மத்திய அரசு இந்த ஊரடங்கு உத்தரவுகளில் சில தளர்வுகளை அறிவித்தது.

ஊரடங்கைத் தளர்த்துவது குறித்து தமிழக அரசு வல்லுநர் குழுவை நியமித்திருந்தது. இந்தக்குழுவின் அறிக்கையைப் பெற்ற பின்னரே முதல்வர் தரப்பிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தின்போது தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு இதுதொடர்பான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கில் எந்தத் தளர்வும் இல்லை எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு எந்தெந்தத் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, குஜராத் போன்ற மாநிலங்கள் தற்போதுள்ள கொரோனா வைரஸ் நோய்ப் பரவலைக் கருத்தில்கொண்டு நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என முடிவெடுத்துள்ளன. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது குறித்து ஆராய வல்லுநர் குழுவை தமிழக அரசு நியமித்திருந்தது. அந்தக்குழுவானது முதற்கட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில் நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மாநிலப் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்படி தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதரக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3-ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அத்தியாவசியப் பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கெனவே அரசால் அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: