ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூட்டு… தமிழக கஜானாவில் 800 கோடிக்கு வேட்டு!

தமிழகத்தில் மூன்று நாள்களில் கொரோனா தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்றாரே முதல்வர்?’’ என்ற கேள்வியை வீசினோம்.

‘‘அதை ஏன் சொன்னோம் என்று முதல்வரே யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. ‘கொரோனா தொற்று, இரண்டு நாள்களாக குறைந்த எண்ணிக்கையிலேயே பதிவாகிறது’ என்று சுகாதாரத் துறை கொடுத்த புள்ளிவிவரத்தை வைத்து மூன்று நாள் கணக்கைச் சொன்னார் முதல்வர். ஆனால், அவர் சொன்ன மூன்றாவது நாளில், மூன்று இலக்க எண்ணில் தொற்று பாதிப்பு வந்ததும்

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அப்செட்டாம். ஏற்கெனவே முதல்வருடன் முரண்பாடு முற்றியுள்ள நேரத்தில் இப்படி நடந்ததும், அதிகாரிகளைக் கூப்பிட்டுக் கடிந்துள்ளார் விஜயபாஸ்கர்.’’

‘‘ம்!’’

‘‘அப்போது அதிகாரிகள் தரப்பில் சொல்லப் பட்ட தகவல் அமைச்சரை அதிரவைத்திருக்கிறது. சென்னையில் புதிதாக தொற்று பாதிக்கப் பட்டவர்கள், எந்த வகையில் பாதிக்கப்பட்டார்கள் என ஆராய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, சென்னை நகரம் கிட்டத்தட்ட மூன்றாவது கட்டத்துக்குச் சென்றுவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ வந்த பிறகுதான் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எளிதான பரிசோதனை, இப்போது பரிசோதனையின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. ஆரம்பம் முதலே பரிசோதனையை அதிகரியுங்கள் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்ததும் இதற்குத்தான் என்கிறார்கள்.’’

‘‘ரேபிட் கிட் வாங்கிய விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதே?’’

‘‘ஆமாம். சத்தீஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சர், ஒரு ரேபிட் கிட் 331 ரூபாய் ப்ளஸ் வரியுடன் வாங்கியிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், தமிழகம் அதே கிட்டை 600 ரூபாய் விலைக்கு வாங்கியிருக்கிறது. இதிலும் கமிஷனா என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்வி, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.’’

‘‘என்ன நடந்ததாம் ரேபிட் கிட் கொள்முதல் விவகாரத்தில்?’’

‘‘முதல்வரிடம், ‘இதில் தன் பங்கு ஏதுமில்லை’ என்று துறை அமைச்சர் விளக்கம் கொடுத்து விட்டாராம். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தினர்தான் அதை வாங்கியிருக்

கின்றனர். ‘இந்தியாவிலேயே ரேபிட் டெஸ்ட் கிட்டை சீனாவுக்கு ஆர்டர் கொடுத்த முதல் மாநிலம் தமிழகம்தான். ஆர்டர் கொடுத்த மார்ச் மாதத்தில் அதற்கு கடும் டிமாண்ட் இருந்ததால், வரி உட்பட 600 ரூபாய் கோட் செய்தோம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலம் ஏப்ரல் மாதம்தான் இந்த கிட்டை வாங்கியுள்ளது. அதுவும் தென்கொரியாவிடம் இருந்து வாங்கியுள்ளது. இப்போது விலை குறைந்து விட்டது’ என்கிறார்கள் சுகாதாரத் துறை அதிகாரிகள். அத்துடன், ‘தமிழக அரசு வாங்கிய தொகைக்குத்தான் மத்திய அரசும் இந்த கிட்டை வாங்கியுள்ளது. கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’ என்றும் சொல்கிறார்கள். இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் விடுவதாக இல்லை.’’

‘‘தி.மு.க-வில் கட்சி நிர்வாகத்தில் ஐபேக் நிறுவனம் தலையிட ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறதே?’’

‘‘அப்படியொரு பேச்சு இப்போது கட்சிக்குள் கேட்க ஆரம்பித்துவிட்டது. ஏப்ரல் 20-ம் தேதியன்று தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சித்தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்ஃபரன்ஸில் உரையாற்ற முடிவுசெய்தார். இதற்காக தி.மு.க-வின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சென்னையிலிருந்து போன் போயிருக்கிறது. அதில் பேசியவர்கள், ‘நாங்கள் ஐபேக் நிறுவனத்திலிருந்து பேசுகிறோம். தலைவர் உங்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசப் போகிறார். அதில் நீங்கள் எப்படிப் பேச வேண்டும் என நாங்கள் உங்களுக்கு விளக்கப்போகிறோம்’ என்று உட்கார்வது முதல் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.”

‘‘அடேங்கப்பா!’’

‘‘அதுகூட பரவாயில்லை… அன்றைக்கு வீடியோ கான்ஃபரன்ஸில் ஸ்டாலின் ஐந்து விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயம், ஐபேக் நிறுவனத்திலிருந்து மண்டல வாரியாக ஒரு நபரை நியமிக்கப்போகிறார்களாம். இந்த விஷயம்தான் கட்சிக்காரர்களை பயங்கர கடுப்பாக்கியிருக்கிறது.’’

‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது ஏக வருத்தத்தில் இருக்கிறாராமே துணை முதல்வர் ஓ.பி.எஸ்?’’

‘‘உண்மைதான்… ‘கொரோனா விவகாரம் தொடங்கியதிலிருந்து அரசின் நடவடிக்கைகள், முடிவுகள் எதிலுமே தன்னை கலந்தாலோசிக்க வில்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம் பன்னீர். கடும் மன உளைச்சலில் இருப்பதால், ‘சென்னையில் இருந்தால் சரிப்படாது’ என அடிக்கடி தேனி பக்கம் சென்றுவிடுகிறாராம். இன்னொரு பக்கம், ராஜேந்திர பாலாஜி, விஜயபாஸ்கர், வீரமணி என்று முதல்வர் மீது அதிருப்தியாக உள்ள அமைச்சர்களின் பட்டியலும் நீள்கிறது. தேர்தலுக்கு முன்பே இது வெடிக்கலாம்.’’

‘‘ஏதோ ஸ்பெஷல் தகவல் தருவதாகச் சொன்னீரே?’’

ம்… நீர் வாங்காமல் விடுவீரா? கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கும் தொழிலில் பல்வேறு நிறுவனங்கள் கால் பதித்தன. தமிழகத்துக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதை பிரதான நோக்கமாகக்கொண்டுதான் இது தொடங்கப்பட்டது. இதில் ஒரு நிறுவனம், அப்போதே ஒரு யூனிட் மின்சாரத்தை 15 ரூபாய்க்கு தமிழக அரசுக்கு விற்க ஒப்பந்தம் போட்டது. மேலும், ‘தமிழக அரசு மின்சாரம் வாங்காவிட்டால், உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்துக்கு ஈடான நஷ்டஈட்டுத் தொகையை நிறுவனத்துக்குக் கொடுக்க வேண்டும்’ என்றும் அப்போதே அந்த ஒப்பந்தத்தில் ஒரு ஷரத்தைச் சேர்த்திருக்கிறார்கள்.’’

‘‘இப்போது என்ன ஆனது?’’

‘‘அந்த ஒப்பந்தப்படியே தி.மு.க ஆட்சியிலும் அதைத் தொடர்ந்த அ.தி.மு.க ஆட்சியிலும் மின்சாரம் வாங்கப்பட்டிருக்கிறது. ஒருகட்டத் துக்குப் பிறகு தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தனியார் நிறுவனங்கள் மின்சார உற்பத்தி செய்து தமிழக அரசுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முன்வந்தன. எனவே, அதிக விலைக்கு விற்ற அந்த நிறுவனத்திடமிருந்து மின்சாரத்தை வாங்குவதை தமிழக அரசு நிறுத்திவிட்டது.’’

‘‘ஓ!’’

‘‘அதற்கு முன்பே, இந்த ஆட்சியின் தொடக்கத் திலேயே அந்த நிறுவனத்துடன் தமிழக அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் ரத்துசெய்து விட்டார்கள். அந்த நிறுவனம் உற்பத்திசெய்யும் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருகிறது. தற்போது தமிழக அரசு ஒரு யூனிட் மின்சாரத்தை 3.20 காசுக்கு வாங்கிவருகிறது. இந்த நிலையில் அந்த நிறுவனம், ‘தமிழ்நாடு மின்வாரியத்துக்காக நாங்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை வாங்காததால், 800 கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும்’ என்று அரசிடம் கேட்டிருக்கிறது. மின்துறை அமைச்சகம் தரப்பிலோ ‘ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்ட பிறகு எதற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும்?’ என்று மறுத்துவிட்டது. இதற்குப் பிறகுதான் குறுக்கு வழியைத் தேடியுள்ளதாம் அந்த நிறுவனம்.’’

‘‘என்ன வழியாம்?’’

‘‘ஆளும் தரப்பு மறுத்தாலும் அதிகாரிகள் துணையுடன் அந்தப் பணத்தை வாங்க முயற்சி செய்திருக்கிறது அந்த நிறுவனம். ‘அக்கட’ பூமி ஐ.ஏ.எஸ் ஒருவர், ஷாக் துறையின் ஐ.ஏ.எஸ் ஒருவர் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் அந்த தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக சில ஃபைல்களை ரெடி செய்துள்ளார்கள். 800 கோடி ரூபாயை பல வழிகளிலும் பிரித்து வழங்குபடியான வேலைகள் அமைச்சருக்கே தெரியாமல் நடந்துள்ளன. சென்னையில் உள்ள தங்கமான

ஜூவல்லரி ஒன்றின் அதிபர் ஒருவர் இந்த விஷயத்தில் அந்த நிறுவனத் தரப்புக்கு ஆதரவாக ஐ.ஏ.எஸ்களிடம் உறவாடி வந்துள்ளாராம. இந்த தகவல்கள், அராசாங்கத்திலிருக்கும் முக்கியமானவருக்குத தாமதமாகவே தெரிந்ததாம். கடந்த ஒரு வருடமாக தமிழக மின்வாரியத் துக்கு மின்சாரம் வழங்கிய நிறுவனங்களுக்கே இன்னும் பணம் கொடுக்கத் தடுமாறிவருகிறது அரசு. ஆனால், மின்சாரத்தையே வழங்காமல் அதற்கு நஷ்டஈடு பெற முயலும் இந்த விவகாரம் கோட்டையில் பெரும் விவாதத்தைக் கிளப்பி யுள்ளது. விரைவில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும்” என்ற கழுகார், “அது, தி.மு.க, ஜெயலலிதா காலத்து அ.தி.மு.க என்று மேலிடங்களின் இதயத்துக்கே மிகவும் நெருக்கமானதொரு நிறுவனம். இவர்களுடைய ஆரோக்கியத்தையெல்லாம் ’பக்காவாக’ பார்த்துக்கொண்ட நிறுவனமாம்” என்ற கழுகார் சட்டென கைகாட்டி மீட்டிங்கிலிருந்து ‘லீவ்’ ஆனார்.

%d bloggers like this: