கர்வம் அழித்து கலை வளர்க்கும் கயிலைநாதன்

திருஞானசம்பந்தர் மகா தேவரை தரிசனம் செய்து வரும் காலத்தில் நாயன்மார்களில் சிறந்து விளங்குகின்ற திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியாரும் அவரைத் தரிசிக்க சீர்காழிப் பதி வந்தனர். கண்டனர்; கருத்து ஒருமித்தனர்; பேரானந்தம் அடைந்தனர். சம்பந்தர் பாட, பாணர் யாழ் மீட்டினார். புளங்காங்கிதம் அடைந்தார்.பின்பு ஆளுடைப் பிள்ளையாராகிய சம்பந்தர் பெருமான், பலதலங்களைப் போற்றிய பின் திருத்தருமபுரத்தை அடைந்தார்.அவ்வூர் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் தாயின் ஊர், ஞானசம்பந்தர் வருகைக்கு அவ்வூர் பெரிதும் மகிழ்ந்து வரவேற்றது.ஒன்று சொல்லியாக வேண்டும் திருநீலகண்ட யாழ்பாணரிடம், பக்தியும் பொங்கிப்பிரவகித்தலும், அவருமறியாமல் அவருக்குள் தனது யாழ் வாசிப்பினைப் பற்றிய கர்வம் மிகமிகச் சிறிய அளவில் ஒளிந்து கிடந்தது. ஆனால், அவருடைய உற்றார், உறவினர்கள், ‘யாழில் வல்லோன் திருநீலகண்டன்! அவனது யாழ் ஓசையும் இசையும் எட்டுத் திக்கும் வெற்றி முரசு கொட்டும்’ என்ற கர்வத்தில் திளைத்திருந்தனர்.
அந்த கர்வம் ஒடுக்கத் திருவுளம் கொண்ட இறைவன், அதுவும் சம்பந்தப் பெருமான் மூலமாக, விருந்துண்டு முடித்து, பக்திப் பரவசத்தில் திளைக்க எண்ணங்கொண்ட பாணர், ஞானசம்பந்தர் பெருமானிடம் திருப்பதிகம் பாடியருள வேண்டினார். சம்பந்தப் பெருமானும் ‘யாழ் முரி’ எனத் தொடங்கும் பதிகம் ஒன்று பாடினார், அவரின் பதிகத்திற்கு ஏற்ப பண்ணில் யாழ் மீட்டத் தொடங்கினார் பாணர். பதிகம் காற்று வெளிகளில் வளைந்து, நெளிந்து, சுழன்று, குழைந்து, இறைத் தன்மையில் எல்லா இடத்திலும் நிறைந்தது.
ஆனால், திடீரென்று யாழின் வேகம்
குறைந்தது, தடுமாறிற்று, அபஸ்வரம் பிறந்தது.
பாணருக்குப் பெருங்கோபம், யாழின் மீது…
என்ன அருமையாய் இசையெழுப்பும் இது.இன்று ஏன் இப்படி…உள்ளங்குமுற, பெருங்கோபம், தீயாய் கனன்று எழ…யாழைப் பற்றிய கையை மேலே ஓங்கினார், விசையுடன் கீழிறக்கி அந்த இசைக் கருவியினை ஒரேயடியாகச் சிதற அடித்து விட முயன்றார்.சுற்றியுள்ளோர் தவித்தனர். அதிர்ச்சி அடைந்தனர். நம்முடைய திருநீலகண்ட யாழ்பாணரின் யாழ் தவறிழைத்ததா? நம்ப முடியாமல் உறைந்து போயிருந்தனர் அனைவரையும் திருஞானசம்பந்தர் தடுத்தார். “புரிந்து கொள்ளுங்கள் ஏழிசையும், அண்ட சராசரங்களும், எட்டுத்திக்கும் பணியும் பரமனின் புகழ் இந்த யாழின் மூலம் பெருகுமோ? யாழிசை துணை செய்யலாம். ஆனால், இசையால் பெற்றதல்ல எம்பெருமான் துணை.
உங்கள் இசையும், என் பண்ணோசையும் கூடத் தொடமுடியாத இடத்தில் இருப்பதே சிவ பரம்பொருள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்’ ‘அன்பரே, அடியார்க்கு நல்லவரே, சிவனின் புகழ் பாட முடியாத யாழின் மேல் கோபம் ஏன்? ஏழிசைக்கும் மூல ஆதாரம் அல்லவா அவன்? மௌனகுரு அல்லவா அவன்? ஓசைகளுக்கெல்லாம் ஓசையாயும், ஓசை அடங்குமிடத்தில் விளங்குவதாயும் உள்ளதுதானே, அப்பெருமானின் தன்மை’ என்று பாணருக்கும் எடுத்துரைத்தார்.‘யாழ் நல்லதாய் இசைப்பதில் மகிழ்ந்தது எல்லாம் இறைவனின் கருணை’ எனச் சொன்ன நீங்கள் ‘வாசிக்க முடியாத யாழின் தன்மையும் கூட இறைவனின் கருணையே என்பதை எண்ண ஏன் மறந்தீர்கள்’ என மீண்டும் உரைத்தார் திருஞானசம்பந்தப் பெருமான்.திருநீலகண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணியாரும் அவர்தம் உறவினரும், ஞானசம்பந்தர் திருவடிகளில் வீழ்ந்து பணிந்தனர்.கர்வம் அழிக்கும் இடம், ஆனந்தம் பிறக்கும் இடம் இறைவனின் திருவடிகளேயன்றி வேறென்ன?

%d bloggers like this: