இன்ஃபார்மல் மீட்; டாஸ்மாக் விவகாரம்!’- அதிகாரிகள் பேச்சைக் குறிப்பெடுத்துக் கொண்ட முதல்வர் பழனிசாமி

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு அறிவிப்புகளும் அரசு சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில், சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொரோனா தொற்றால்

பாதிக்கப்பட்டோர் அதிகம் இருக்கும் மாநகராட்சிகளில் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இதேபோல் தஞ்சை உள்ளிட்ட இடங்களில் ஒருநாள் முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதில் கிடைத்த பாசிடிவ் ரிசல்டால் தமிழக அரசு மற்ற மாநகராட்சிகளுக்கு இதை விரிவுபடுத்தியிருக்கிறது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

கொரோனா தொடர்பாக பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். அதேபோல், தொழில்துறையைச் சேர்ந்தவர்களோடு கடந்த 23ம் தேதி வீடியோ கான்ஃப்ரஸ் மூலம் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் இருந்திருக்கிறார்கள்.

தொழிற்சாலைகள் விஷயத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கும் சில தளர்வுகளை தமிழகத்தில் செயல்படுத்துவது குறித்து தொழில்துறையினருடன் ஆலோசித்திருக்கிறார் முதல்வர். ஆனால், மத்திய அரசு கூறியபடி தளர்வுகளை நாம் செயல்படுத்தினால் இழப்புகள் அதிகமாகும் என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

அவர்கள் சாதக, பாதகங்களைச் சொல்ல அப்படியே அப்படியே குறிப்பெடுத்திருக்கிறார்.அதன்பிறகு இந்தக் கூட்டம் முடிந்ததும் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத், அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர், தொழில்துறைச் செயலாளர் ஆகியோர் இருந்த நிலையில், அதிகாரிகளிடம் `முதல்வர் பேச இருக்கிறார்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் அவசர அவசரமாகக் கோப்புகளைத் தயார் செய்யத் தொடங்கவே, `குறிப்புகள் எதுவும் வேண்டாம். முதல்வர் உங்களிடம் பேச விரும்புகிறார்’ என்று கூறப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது ரூமில் சென்று அமர்ந்திருக்கிறார்கள். அவர்களை பார்த்ததும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருக்கிறீர்களா? இது அஃபிசியல் மீட்டிங் இல்ல. கேஷுவல் மீட்டிங்தான்” என்று இயல்பாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

மேலும்,“கொரோனா விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் பற்றியும் எனது ஆட்சியைப் பற்றியும் மக்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்காகத்தான் இந்த மீட்டிங்” என சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் செயல்பாடுகளைப் பார்த்ததும் கேஷ்வலாக அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். `மத்திய அரசு சொல்வது போல் செய்தால் கண்டிப்பாகக் கொரோனா விவகாரத்தில் அதிக இழப்புகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்.

இத்தனை நாளா கட்டுப்படுத்தி வைத்திருந்தது அனைத்தும் வீணாகிவிடும்” என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டதோடு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பவர்களின் புள்ளிவிவரத்தை அடுக்கியிருக்கிறார்கள். `நாளுக்கு நாள் பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் மத்திய அரசு சொல்வதுபோல் செய்தால் மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகமாகிவிடும்’ என்றும் சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், `மத்திய அரசிடம் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து எடுத்துரைப்போம்’ என்றிருக்கிறார்கள். அதை கவனமாகக் கேட்டுக் கொண்ட முதல்வர், இவ்விவகாரத்தைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் கேட்டிருக்கிறார்.

`எதிர்க்கட்சிகள்தான் அதிகமாக விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள்’ என்று சொல்ல, `அவர்களை விடுங்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? அதைச் சொல்லுங்கள்’ என்று முதல்வர் கேட்டிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் பாசிட்டிவாக பதில் சொல்லவில்லை என்கிறார்கள். `இதனை மாற்ற என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று முதல்வர் உடனடியாகக் கேட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள் அதிகாரிகள் வட்டத்தில். அந்தக் கேள்விக்குப் பதிலாக, டாஸ்மாக் விவகாரத்தைத் சொல்லியிருக்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னபடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தலாம் என்று சொல்ல, `பூரண மதுவிலக்கா முடியாத காரியம் ஆயிற்றே’ என்று கேள்வி எழுந்ததாகச் சொல்கிறார்கள். `நேரம் மற்றும் கடைகளை குறைத்தால் கண்டிப்பாகப் பெண்களின் மனதில் இடம் பிடித்துவிடலாம். ஜெயலலிதாவும் பெண்களைக் குறி வைத்துத்தான் அரசியல் செய்தார்’ என்ற புள்ளி விவரங்களை முதல்வருக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். `சரி, பார்ப்போம். இதுகுறித்து அறிக்கை தாருங்கள்’ என அவருக்கு நம்பிக்கை பாத்திரமான அதிகாரிகளிடம் முதல்வர் சொன்னதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. `கூடிய விரைவில் மக்கள் மனதில் இடம்பிடிக்க பல்வேறு விஷயங்களைக் கையில் எடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி’ என்று கோட்டை வட்டாரத்தில் பேசிக்கொள்வதைக் கேட்க முடிகிறது.

%d bloggers like this: