கொரோனா குளறுபடிகள்… ஒத்துழைக்காத அதிகாரிகள்… திணறும் எடப்பாடி

‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பற்றி சில செய்திகள் கிடைத்தன. ‘சமீப நாள்களாக அ.தி.மு.க அரசின்மீது கடும் அதிருப்தியில் இருக்கும் 50 சதவிகித ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை’ என்பதுதான் கோட்டையில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.’’

‘‘புதுத்தகவலாக இருக்கிறதே!’’

‘‘ஏப்ரல் 23-ம் தேதி கோட்டைக்கு வந்திருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக திடீர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். மீட்டிங்கை முடித்துவிட்டு வந்த முதன்மைச் செயலாளர் ஒருவர், அதிகாரி ஒருவரிடம் ‘இவங்களை நம்பி எதுவும் செய்ய முடியல. அடுத்து யார் ஆட்சிக்கு வருவாங்கன்னே தெரியலை. ஏதாவது விவகாரம் ஆகிடுச்சுன்னா நம்ம தலையும்தான் சேர்ந்து உருளும். ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்’ என முணுமுணுத் திருக்கிறார்.’’

பிரதமருடனான ஆலோசனையின்போது…

‘‘ஓஹோ!’’

‘‘இந்த பயம்தான் பெரும்பாலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமும் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே மீதம் இருக்கும் நிலையில், தேவையில்லாத சர்ச்சையில் சிக்கி பெயரைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம் என, நேர்மையான அதிகாரிகள் ஒதுங்கிவிட்டனர். சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்துவிடக் கூடாது என ஊழல் அதிகாரிகளும் ஒதுங்குகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் தங்கள் நிர்வாக அனுபவத்தை அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் என ஒருசில நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எதிர்பார்த்தனர். அவர்களில் சிலரை கொரோனா தடுப்புக் கண்காணிப்பு மண்டலக் குழுக்களில் உறுப்பினர்களாக மட்டுமே நியமித்து ஓரம்கட்டியது அரசு. அதில் அதிருப்தியடைந்த அவர்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையாம்.”

“ஆனால், இப்போதுதான் அரசுத் துறைகள் பெரிய அளவில் இயங்குவதில்லையே?”

“அப்படியில்லை, புரியும்படி சொல்கிறேன் கேளும்…

தமிழக அரசின் 66 துறைகளும் கொரோனா பாதிப்பால் ஏதாவது ஒரு தாக்கத்தைச் சந்தித்துள்ளன.

பூம்புகார் நிறுவனத்தில் விற்பனை தொடங்கி தொழில் துறையில் முதலீடுகள் வரை எல்லாமே அடிவாங்கியிருக்கின்றன. இதிலிருந்து அந்தந்தத் துறைகளை எப்படி மீட்பது, பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை வைத்து திட்டங்களை எப்படி நிறைவேற்றுவது என ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான் ஆலோசனை கூற வேண்டும். ஆனால், இதில்தான் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்கிறார்கள். சமீபத்தில் அமைச்சர்கள் சிபாரிசில் கோப்புகள் வந்தால், அதையும் ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிடுகிறார்களாம்.”

“பெரிய விவகாரம்தான்!”

“இன்னொரு விவகாரமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தி.மு.க சார்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என எப்போதும் ஒரு பிரிவு தனியாகச் செயல்படும். இந்த அணி, இப்போது வலுவாக கோட்டைக்குள் சுற்றிவருகிறதாம். அரசின் தகிடுதத்தங்களை அம்பலப் படுத்தும் பல கோப்புகள் செனடாப் சாலைக்குப் பறந்துவிட்டன என்கிறார்கள். விரைவிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் இருந்து சூடான ஊழல் குற்றச்சாட்டுகள் வரிசையாகக் கிளம்பும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவையெல்லாம் ஒரு புறமிருக்க, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஈகோ தலைதூக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.’’

“இது வேறா!”

‘‘கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 12 குழுக்கள் நியமிக்கப்பட்டன. இப்போது அதிலும் சிக்கல்கள். இந்தக் குழுக்களுக்கு தலைமைவகிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறைச் செயலாளர் தரப்புக்கும் இணக்கம் இல்லையாம். ‘நாங்கள் செயலாளர் அந்தஸ்தில் இருக்கிறோம். இந்தம்மா எங்களுக்கு பாஸ் மாதிரி செயல்படுகிறார். எங்களிடம் எதையுமே ஆலோசிப்பதில்லை’ என்று புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.’’

‘‘ரொம்ப கஷ்டம்தான்!’’

‘‘இந்தக் குழுவில் புராசஸிங் குழு என்று ஒரு குழு உள்ளது. இதுதான் கொரோனா எப்படிப் பரவுகிறது, அதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றெல்லாம் ஆராய்ந்துவருகிறது. அவர்களிடம் இதுவரை சுகாதாரத் துறைச் செயலாளர் தரப்பி லிருந்து பேச்சுவார்த்தையே நடத்த வில்லையாம். ‘இப்படிச் செயல்பட்டால் கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?’ என்கிறார்கள்.’’

“இது தொடர்ந்தால் அரசு நிர்வாகத்தில் கடும் குளறுபடிகள் ஏற்படுமே?”

‘‘ஏற்கெனவே குளறுபடிகள் தொடங்கிவிட்டன. சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம் முதல்வர். அவருக்கு சரியான ஆலோசனை வழங்க ஆட்கள் இல்லாததால்தான், ஐந்து மாநகராட்சிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதில் அரசு சொதப்பிவிட்டது என்கிறார்கள் சில சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். ஏப்ரல் 24-ம் தேதி முழு ஊரடங்கை அரசு அறிவித்தபோது, அத்தியாவசிய பொருள்களை வாங்க மக்களுக்கு குறுகிய நேரம் மட்டுமே அவகாசம் இருந்தது. தேவையற்ற பதற்றம் உருவாகி, மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்குப் படையெடுத்தனர். நிலைமையைச் சமாளிக்க முடியாமல் காவல் துறையும் திணறிவிட்டது.”

“சென்னையில் கொரோனா தொற்று அதிகமுள்ள ராயபுரம் ஏரியா, மக்கள் வெள்ளத்தில் மிதந்ததே!”

“அதுமட்டுமா… கோவை, மதுரை, திருப்பூர், சேலம் என அனைத்து நகரங்களிலுமே ரணகளம் தான். அடிப்படை உணவுப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அல்லாடிவிட்டனர். ‘திடீரென முழு ஊரடங்கை அறிவித்ததால் மக்கள் அச்சப்பட மாட்டார்களா… குறைந்தபட்சம் 48 மணி நேரமாவது அவகாசம் அளித்து முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தால் இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்காது. இந்த நெரிசலில் கொரோனா பரவியிருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?’ என சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே கொந்தளிக்கிறார்கள்.”

“ஏன், இப்படி ஓர் அவசர முடிவு?”

‘‘முதல்வருக்கு அதிகாரிகள் சிலர் கொடுத்த தகவல், அவரையே பீதியடையவைத்துவிட்டது என்கிறார்கள். ‘இனி சில நாள்கள் தாமதித்தால்கூட நிலைமை மோசமாகிவிடும்’ என்று அவர்கள் சொன்னதால்தான் இந்த விவகாரத்தில் அவசரமாக சில முடிவுகளை எடுத்துள்ளார்கள்.’’

‘‘ஓ!’’

‘‘அனுபவம் பெற்றவர்களிடமிருந்து ஒத்துழைப்பு இல்லாததால், இருப்பவர்களிடம் ஆலோசனை கேட்டு அரசு நடக்கிறது. இதில் கோளாறு ஏற்பட்டு விவகாரம் பூமராங் ஆகும்போது எடப்பாடி திணறிவிடுகிறார். முதல்வர் இப்போது தனிச் செயலாளர்களைவிட இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்மீதுதான் அதீத நம்பிக்கைவைத்துள்ளார். அவர்கள்தான் இப்போது முதல்வர் தரப்பைக் கட்டிக்காக்கிறார்களாம்.’’

‘‘அது சரி… ஏப்ரல் 27-ம் தேதியன்று ஊரடங்கு நீட்டிப்பு பற்றி பிரதமர் ஆலோசனை நடத்தினாரே?”

‘‘அதில் பேசுவதற்கு பத்து மாநில முதல்வர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதாம். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநில முதல்வர்கள், ‘ஊரடங்கை நீட்டித்தாலும் பிரச்னையில்லை’ என்று சொல்லியிருக்கின்றனர். பாதிப்பு அதிகமில்லாத நான்கு மாநில முதல்வர்கள், ‘ஊரடங்கை தளர்த்த வேண்டும்’ என்று சொல்லியிருக்கின்றனர். எஞ்சிய ஒரு முதல்வர், மத்திய அரசின் முடிவை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளார்.’

‘‘தமிழகத்தின் நிலைப்பாடு?’’

‘‘தமிழக அரசுத் தரப்பில், ‘சென்னை உட்பட கொரோனா தொற்று அதிகமுள்ள சில இடங்களில் மே 3-ம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கலாம். மற்ற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளலாம்’ என்று சொல்லப்பட்டதாம். அதேசமயம், ‘மே மாதம் இறுதி வரை சென்னை உள்ளிட்ட இந்தியாவின் சில நகரங்களை கடும் கண்காணிப்பில் வைத்திருக்கலாம்’ என்று மத்திய சுகாதாரத் துறையும் அறிவுறுத்தியுள்ளதாம்.’’

‘‘அமைச்சர் வேலுமணிமீது ஸ்டாலின் கடுமையாகப் பாய்ந்திருக்கிறாரே?’’

‘‘கொரோனா பீதியைக் கடந்து கோவையில் அதிகம் பேசப்பட்டது, சிம்ப்ளிசிட்டி இணையதள ஊடக உரிமையாளர் ஆண்ட்ரூ சாம் கைது விவகாரம். ஊரடங்கு காலகட்டத்தில், காவல் துறை தொடர்பாக சிம்ப்ளிசிட்டி வெளியிட்ட சில செய்திகள், மேலிடம் வரை சென்று காவல்துறைக்கு சிக்கலை ஏற்படுத்தின. ஆனால், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்து தி.மு.க எம்.எல்.ஏ கார்த்திக் வெளியிட்ட அறிக்கையை வெளியிட்டதுதான் சிம்ப்ளி சிட்டிக்கு செக் வைக்க முக்கிய காரணம் என்கிறார்கள். அந்த அறிக்கை வேறு எந்த ஊடகத்திலும் வரவில்லை. சிம்ப்ளிசிட்டி மட்டுமே வெளியிட்டதுதான் வேலுமணி தரப்புக்கு பெரும்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’’

‘‘அதற்குத்தான் ஸ்டாலின் இவ்வளவு ரியாக்‌ஷன் காட்டியிருக்கிறாரா?’’

‘‘ம்ம்ம்… ஆனால், அரசுத் தரப்பில் அதை நேரடியாகக் காட்டிக்கொள்ளவில்லை. கோவை பயிற்சி மருத்துவர்கள் பிரச்னை மற்றும் ரேஷன் கடையில் நிவாரணம் வழங்குவதில் நடந்த முறைகேடு தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக கோவை மாநகராட்சி உதவி ஆணையர் சுந்தர்ராஜன் பெயரில் புகார் தரப்பட்டுள்ளது. புகாரிலுள்ள இரண்டு பிரச்னைகளுக்கும் மாநகராட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதையெல்லாம் சேர்த்துதான் ஸ்டாலின் தரப்பில் அமைச்சரை குறிவைத்து அறிக்கை தரப்பட்டது. அதற்கு பதில் அறிக்கையும் வேலுமணி கொடுத்துவிட்டார்’’ என்ற கழுகார், ‘அடுத்த மீட்டிங் இருக்கிறது, கிளம்புகிறேன்!’ என்று கூறி சட்டெனப் பறந்தார்.

%d bloggers like this: