ஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்!

நாற்பது நாள்களைக் கடக்கப் போகிறது ஊரடங்கு. ஆனால், இன்னும் முக்கிய நகரங்களில் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்கிற வருத்தம் மத்திய அரசுக்கு இருக்கிறது.

சொன்ன நேரத்துக்கு ஹேங்அவுட்ஸ் மீட்டில் வந்த கழுகாரிடம், ‘‘மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு என்னவாகும்? முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் திணறுகின்றன போலிருக்கிறதே?’’ என்ற கேள்வியை வீசினோம்

.

“உண்மைதான். நாற்பது நாள்களைக் கடக்கப் போகிறது ஊரடங்கு. ஆனால், இன்னும் முக்கிய நகரங்களில் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்கிற வருத்தம் மத்திய அரசுக்கு இருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை சமீபத்தில் அளித்த அறிக்கையில், ‘சென்னை, இந்தூர், தானே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் எதிர்காலத்தில் இன்னும் பல சிக்கல்கள் ஏற்படும். அங்கெல்லாம் ஊரடங்கை இன்னும் கடுமையாக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.’’

‘‘அப்படியா… சென்னை நிலை?’’

“நான் ஏற்கெனவே சொன்னதுதான். சென்னை யில் மூன்றாவது கட்டத்துக்கு கொரோனா பாதிப்பு சென்றுவிட்டது. ‘இன்னும் ஒரு மாதம் சென்னை முழுவதும் ஊரடங்கைக் கடுமையாக்க வேண்டும்’ என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லியிருக்கின்றனர். மே 3-ம் தேதிக்குப் பிறகு பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில தளர்வுகளை மேற்கொள்ள அரசு முடிவுசெய்திருக் கிறது. அங்கு, வணிக நிறுவனங்களைத் திறக்கவும் விரைவில் அனுமதி அளிக்கப்படவுள்ளது.’’

‘‘மத்திய அரசுமீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாமே தமிழக அரசு?’’

‘‘கோட்டை வட்டாரத்தில், ‘கேட்ட நிதியைத் தரவில்லை. தமிழகத்துக்கு வரவேண்டிய

ஜி.எஸ்.டி நிதியைக்கூட தராமல் இருந்தால், இந்த நெருக்கடி நேரத்தில் என்னதான் செய்வது?’ என்று கொந்தளிப்புக் குரல்கள் கேட்கின்றன. ‘இதுவரை மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 510 கோடி ரூபாயும், சுகாதாரத் துறை மூலம் 314 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த இரண்டு தொகையுமே தமிழகத்துக்கு என ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் தொகைதான். மத்திய அரசின் தொகுப்பிலிருந்த அந்தத் தொகையை எடுத்துக்கொள்ள மட்டுமே இப்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் நிதியுதவி என்பது எங்கு வந்தது?’ என்று கேட்கிறார்கள் அதிகாரிகள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஐந்து முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிட்டார். முதல்வர்கள் கூட்டத்திலும் நிதி வேண்டும் என்று மூன்று முறை கேட்டுவிட்டார். ஆனால், எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை மத்திய அரசு. இதை இப்போது வெளிச்சத்துக்குக் கொண்டுவர தயாராகிவிட்டது அ.தி.மு.க தரப்பு.’’

‘‘மாநிலங்களுக்கு நிதி கொடுக்க முடியவில்லை… ஆனால், வங்கிகளில் கடன் தள்ளுபடியா?’’

‘‘அது தள்ளுபடியில்லை… தள்ளிவைப்பு என்கிறார்கள். அந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி ஆளுநர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறதாம் மத்திய அரசு. இதே கேள்வியை ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கேட்டபோதே அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் நிதி அமைச்சர். அதேசமயம், ‘இந்தியாவில் வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட முதல் ஐம்பது பேர் பட்டியலைத் தாருங்கள்’ என்று மும்பை வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான சாகேத் கோக்கேலே ஆர்.டி.ஐ மூலம் கேட்க, பட்டியலைக் கொடுத்துவிட்டது ரிசர்வ் வங்கி. அவர் அதை ட்விட்டரில் பதிவேற்றி விட்டார்.’’

‘‘யார் இந்த கோக்கேலே?’’

‘‘மகாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி நடந்தபோது கடும் அச்சுறுத்தலுக்கு ஆளானவர் இவர். இப்போது சமயம் பார்த்து பா.ஜ.க-வுக்கு செக் வைத்துவிட்டார் என்கிறார்கள். அந்தப் பட்டியலில் பதஞ்சலி நிறுவனமும் இருக்கிறது. அவர்கள்மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பும் கிளம்பிவிட்டது.’’

‘‘நாடு இருக்கும் நிலையில் கடன் தள்ளுபடி தேவையா?’’

‘‘இந்த விவகாரத்தை வைத்து மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் பல்வேறு குடைச்சல்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். ரைட் ஆஃப் அதாவது தள்ளிவைப்பு என்றாலே அது வராத கணக்குதான் என்பதுதான் காங்கிரஸாரின் வாதம். அதிலும், இந்த ரைட் ஆஃப் பட்டியலிலும் குஜராத் நிறுவனங்கள் தான் அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்திருக்கி றார்களாம். இதுதான் இப்போது நிதி அமைச்சர் நிர்மலாவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாம்.’’

‘‘காவிரி ஆணைய விவகாரத்தாலும் தமிழக அரசுக்கு சிக்கலாகியிருக்கிறதே?’’

‘‘உச்ச நீதிமன்றத்தில் போராடிப் பெற்ற காவிரி ஆணைய உரிமையைப் பறிக்கும் வகையில், அந்த ஆணையத்தை மத்திய அரசின் ஜல்சக்தித் துறையின் கீழே கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு. ‘இதனால் எந்தப் பாதிப்புமில்லை என்று தமிழக பொதுப்பணித் துறை சொல்வது சப்பைக்கட்டு’ என்று கொதிக்கிறார்கள் விவசாய அமைப்புத் தலைவர்கள். ‘இந்தத் துறை நிச்சயமாக கர்நாடக அரசுக்கு ஆதரவாகத்தான் நடக்கும் என்பதால் இனிமேல் காவிரியில் தண்ணீர் வருவது சந்தேகம்தான்’ என்று பதறுகிறார்கள் விவசாயிகள்.’’

‘‘அம்மா உணவகங்கள் தொடர்பாக தி.மு.க தரப்பில் புலம்பல் சத்தம் கேட்கிறதே?’’

‘‘அம்மா உணவகங்கள் மூலமாக நாளுக்கு எட்டு லட்சம் பேர் பயனடைவதாக முதல்வருக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது. அம்மா உணவகத்தைக் கைப்பற்றிய அ.தி.மு.க புள்ளிகள், அதன்மூலம் மக்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர். இதை தங்களுக்கான தோல்வியாகவே தி.மு.க பார்க்கிறதாம். பிரஷாந்த் கிஷோர் ஆலோசனைப்படி தொடங்கிய ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தில் மாஸ்க், சானிட்டைஸர் கொடுப்பதுடன் உணவு வழங்கும் திட்டத்தைச் சேர்த்தது இதனால்தான் என்கிறார்கள். இந்தத் திட்டத்தில் தி.மு.க கொடுத்துள்ள உதவி எண்ணுக்கு தினமும் எக்கச்சக்கமான அழைப்புகள் வருகின்றனவாம். அவற்றுக்குச் செலவிடவே நாளுக்கு 50,000 ரூபாய் தேவைப்படுகிறதாம். தினமும் செலவழிக்க காசுக்கு எங்கே போவது என்று மாவட்டச் செயலாளர்கள் புலம்புகின்றனர்.’’

‘‘தமிழகத்தை 12 மண்டலங்காகப் பிரித்து மண்டல அளவில் நியமிக்கப்பட்ட 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதல்வர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாமே?’’

‘‘ஆமாம். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 12 மண்டலங்களை உருவாக்கி, ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தது தமிழக அரசு. அவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்த தமிழக அரசு, அவர்களுக்கான அதிகாரம் என்ன, அவர்கள் சொல்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஏற்க வேண்டுமா என்பது பற்றியெல் லாம் எந்தச் சுற்றறிக்கையையும் தரவில்லையாம்.’’

‘‘அதனால்?’’

‘‘இவர்கள் சொல்லும் பல அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்கள் பலரும் ஏற்பதில்லையாம். அத்துடன், இந்த அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்கள்தான் மண்டல அளவிலான கண்காணிப்புப் பணி வழங்கப்பட்டது. ஏப்ரல் 26-ம் தேதியே இரண்டு வாரங்கள் முடிந்தும், வேறு அதிகாரிகளை சுழற்சி முறையில் மாற்றவில்லை. அதனால், குடும்பத்தினரைவிட்டு பல வாரங்களாக வெளியூரில் பணியாற்ற வேண்டியிருப்பதால், வருத்தத்தில் இருக்கிறார்களாம்.’’

‘‘தேர்தல் தொடர்பாக ஒரு தகவல் கேள்விப் பட்டேனே?’’

“சட்டப்பேரவைத் தேர்தலை ஆறு மாதங்களுக்குத் தள்ளிவைத்து ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தலாமா என்று டெல்லி மேலிடம் யோசிக்கிறதாம். ‘வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணி தொடங்கவே அடுத்த ஜனவரி மாதமாகிவிடும் என்பதால் அதை வைத்தே தள்ளிவைக்கலாம்’ என்று டெல்லியில் கணக்கு போடுகிறார்களாம்.’’

‘‘அதனால் பா.ஜ.க-வுக்கு என்ன பயன்?’’

‘‘மூன்று விஷயங்களைச் சொல்கிறார்கள். முதலாவது, தி.மு.க-விடம் உள்ள பண இருப்பைக் கரைக்கலாம். இரண்டாவது, ஆட்சி முடிந்ததும் அ.தி.மு.க இரண்டாகப் பிளவுறும் வாய்ப்பு ஏற்படும். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவை யிலுள்ள இரட்டை இலை வழக்குக்கு உயிர்கொடுத்து சின்னத்தையும் முடக்கிவிட்டால், பிளவுற்ற கட்சியை தங்களுக்கு ஏற்ற கூட்டணிக்குள் கொண்டுவரலாம். மூன்றாவது, ரஜினியின் அரசியல் என்ட்ரிக்குத் தேவையான அவகாசம் கிடைக்கும்.’’

‘‘வேறு?’’

‘‘ஆளுநர் தலைமையில் ஆறு மாதம் ஆட்சியை நடத்திவிட்டு, உயர்கல்வித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளில் ஊழல்களை அம்பலப்படுத்தி நற்பெயர் சம்பாதித்துக்கொள்ளலாம். இதை மூலதனமாக வைத்து மெகா கூட்டணி அமைக்கலாம் என பா.ஜ.க தலைமை கணக்கு போடுகிறதாம்’’ என்ற கழுகார், கைகாட்டிவிட்டு சட்டென மீட்டில் இருந்து லீவ் ஆனார்.

%d bloggers like this: