ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது அதிக வீரியம் இல்லாத வேதிப்பொருள்தான். சாதாரணமாக, நம் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய இது பயன்படுத்தப்படும்.
கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதிலிருந்து நாம் அடிப்படை சுகாதார முறைகளாகக் கடைப்பிடித்துவரும் இரண்டு முக்கியமான விஷயங்கள், மாஸ்க் அணிவதும் மற்றும் ஹேண்ட் சானிடைஸர் பயன்படுத்துவதும். அனைவரும் மாஸ்க் அணிவதையும், கைகளைச் சுத்தப்படுத்த சானிடைஸர் பயன்படுத்தவும் தொடங்கியவுடன், இவற்றுக்கான பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியது.
அவற்றில் அதிகம் பரிந்துரைக்கப்படும் ஒன்று, ஐசோ புரோப்பைல் ஆல்கஹால் (Isopropyl alcohol), ஹைட்ரஜன் பெராக்ஸைடு(Hydrogen peroxide) மற்றும் கிளிசரால்(Glycerol) சேர்ந்த கலவை.
90 மில்லி லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லிட்டர் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால், 1 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரால் சேர்த்து நன்றாகக் கலந்து, ஹேண்ட் சானிடைஸராகப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. இந்த ரசாயனக் கலவைகளால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா? இதை வீட்டிலேயே தயாரிக்கலாமா என்று வேதியியலாளர்கள் சிலரிடம் கேட்டோம்.
“ஹேண்ட் சானிடைஸர் தயாரிக்க, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர்தான் (Distilled Water) பயன்படுத்தப்படும். இந்தத் தண்ணீரில் வேறு எந்தத் தனிமங்களும் இல்லாத காரணத்தால் மற்ற வேதிப்பொருள்களை இவற்றுடன் சேர்க்கும்போது எந்த வேதிவினையும் நடைபெறாது. நாம் வீட்டிலேயே ஹேண்ட் சானிடைஸர் தயாரித்தால், சுத்திகரிக்கப்படாத வீட்டுத் தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.
ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்பது அதிக வீரியம் இல்லாத வேதிப்பொருள்தான். சாதாரணமாக நம் காதுகளில் உள்ள அழுக்கை சுத்தம்செய்ய இது பயன்படுத்தப்படும்.
ஆனால், குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும். இதை அதிக அளவில் சேர்க்கும்போதும் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படலாம். கிளிசராலால் எந்த பாதிப்பும் ஏற்படாது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப்புகளில் கிளிசரால் சேர்க்கப்படுகிறது. இது, சோப்பு மற்றும் ஹேண்ட் சானிடைஸரில் உருவாகும் நுரைக்கு முக்கியக் காரணம்.
இதனால் 90 மில்லி லிட்டர் தண்ணீரில் 100 மில்லி லிட்டர் ஐசோ புரோப்பைல் ஆல்கஹால், 1 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரால் சேர்த்து நன்றாகக் கலந்து, வீட்டிலேயே ஹேண்ட் சானிடைராகத் தயாரிக்கலாம்.