கொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்?

கொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்று, இனி அடிக்கடி வரலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

நவீன மருந்துகளுடன் சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீரையும் கபசுர குடிநீரையும் ஒருங்கிணைந்த மருந்தாகப் பயன்படுத்தலாம்’ என்று அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இது எந்தளவுக்கு பலன் தரும்?

‘‘பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு?’’

இதற்கான முன்னெடுப்புகளைச் செய்த சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். ‘‘கொரோனா போன்ற பேண்டெமிக் நோய்த்தொற்று, இனி அடிக்கடி வரலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. சவால்கள் அதிகம் இருக்கும் நிலையில், அனைத்து மருத்துவமும் ஒருங்கிணைந்து செயல்படும்போது நல்ல பலன் கிடைக்கும். அதன் அடிப்படையில், உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் முறையில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை ஏற்றுக்கொண்ட தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.

அலோபதி மருத்துவத்துடன் நேரடியாக ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றாலும், இயல்பான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்கு சித்தா, யுனானி, இயற்கை, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைத்துப் பயன்படுத்தக் கூறியிருக்கின்றனர்.

 

அதன்படி நாங்கள் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் கஷாயத்தைக் கொடுக்கவிருக் கிறோம். நோயிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு, உடலை வலுப்படுத்தும் அமுக்குரா சூர்ண மாத்திரைகளையும் நெல்லிக்காய் லேகியத்தையும் பரிந்துரை செய்திருக்கிறோம். அரசாணை பெற்றவுடனேயே இதற்கான வேலைகளை செய்யத் தொடங்கிவிட்டோம். சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர் கொடுப்பதால், அதன் வீரியம் எப்படியிருக்கிறது என்பதை சோதனை செய்து பார்ப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கபசுர குடிநீர் கஷாயத்தில் பதினைந்து வகையான மூலிகைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைக்கும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. இவை எப்படி கொரோனா வைரஸிடம் போரிடுகின்றன என்பதன் அடிப்படை விளக்கம் ‘Asian Journal of Pharmaceutical Research and Healthcare’ இதழில் தெளிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இது கொரோனா நோயை குணப்படுத்தும் மருந்து என்று நாங்கள் சொல்லவில்லை. பொதுவான நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் என்றுதான் சொல்கிறோம். இதுபோன்ற நேரத்தில், பரிசோதனை அடிப்படையில் ஆங்கில மருந்துகளைப் பயன்படுத்துவது போன்று, நோயின் வீரியத்தன்மையைக் குறைக்கவல்ல பிற மருந்துகளையும் பயன்படுத்திப் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?

கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்?

கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்?

சீனாவிலும் இந்தியாவிலும் மட்டும்தான் தொன்மையான மருத்துவ முறைகள் இன்றைக்கும் பின்பற்றப்படுகின்றன. மரபு அனுபவம் என்பது, இரண்டாயிரம் வருடங்களாகத் தொகுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் முறை. இவற்றை அறிவியல் ஆய்வு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, முறைப்படுத்தப்பட்ட பல மருந்துகள் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அதிலிருந்து ஏதாவது மூலக்கூறுகளைக் கண்டறிய முடியும். நம் மரபு மருத்துவத்தையும் சரியாகப் பயன்படுத்தி ஒருங்கிணைந்து செயல்படும்போது, நிச்சயம் பிற நாடுகளுக்கு உபயோகப்படும் அளவுக்கு நம் நாட்டு மரபு மருத்துவம் வளரும்’’ என்றார்.

தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் செயலரான டாக்டர் அமலோற்பவநாதனிடமும் பேசினோம்…

‘‘ஆங்கில மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் மருந்துகளை ‘வேக்ஸின்’ என்றும், நோயை குணப்படுத்தும் மருந்துகளை ‘டிரக்ஸ்’ என்றும் குறிப்பிடுவோம். ஒருவர் நோய்கள் இல்லாமல் இருக்கும்போதுதான் தடுப்பூசியைத் தர முடியும். நோயிருக்கும்போது தர மாட்டோம். கபசுர குடிநீரும் நிலவேம்புக் குடிநீரும் வேக்ஸின்களா அல்லது மருந்துகளா என்பது எனக்குப் புரியவில்லை. மருந்துகள் என்றால் அவை எப்படி வைரஸை எதிர்கொள்கின்றன என்றும், வேக்ஸின் என்றால் அது எப்படி நோயைத் தடுக்கிறது என்றும் விவரங்கள் வேண்டும்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வந்தபோது, பல சித்த மருத்துவர்கள் நிலவேம்புக் குடிநீரைப் பரிந்துரைத்தனர். பிறகு, பன்றிக்காய்ச்சல் வந்தது. அதற்கும் நிலவேம்புக் குடிநீரையே சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அரசும் மக்களுக்கு விநியோகித்தது.

அப்போதே நாங்கள் `இதை நாம் ஆராய்ச்சி செய்துபார்க்க வேண்டும்’ என்று கேட்டதோடு, `ஆராய்ச்சி செய்யாத மருந்தை எப்படி நோயாளிகளுக்குக் கொடுக்கலாம்?’ என்றும் கேள்வி எழுப்பினோம். ஆனால், எங்களுக்கு அதற்கான பதில் கிடைக்கவில்லை. அதன் பிறகும், கடந்த பத்து வருடங்களில் டெங்கு காய்ச்சலுக்கு எதிராகவும் பன்றிக்காய்ச்சலுக்கு எதிராகவும் நிலவேம்புக் குடிநீர் எப்படி வேலை செய்தது, அதைக் குடித்தவர்கள் தற்போது எப்படி இருக்கின்றனர் என்கிற அடிப்படையில் எந்த ஆராய்ச்சியும் இங்கு மேற்கொள்ளப் படவில்லை.

நோயாளிகளுக்கு ஒரு மருந்தைக் கொடுக்க வேண்டுமென்றால், அது பற்றிய அறிவியல் ஆதாரம் இருக்க வேண்டுமல்லவா? இந்த மருந்துகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யாமல் மக்களுக்குத் தருவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆராய்ச்சி செய்து முடிவு இவர்கள் சொல்வதுபோலவே வந்தால், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் ஏன் உலகில் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்தக் கஷாயங்கள் உபயோகமாக இருக்கலாம். இதனால் நம் மருத்துவர்களுக்கு நோபல் பரிசுகூட கிடைக்கலாம். இப்போதும் காலம் கடந்துவிடவில்லை. இந்த மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளை உடனே ஆரம்பியுங்கள். நல்லது நடந்தால் மகிழ்ச்சிதான்’’ என்றார்.

‘‘ஆயுர்வேதத்தையும் பயன்படுத்த வேண்டும்!’’

சென்னை மாநகராட்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஆயுர்வேத மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.வீரச்சோழன், ‘‘கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ஓர் ஆயுர்வேத மருத்துவர். அங்குதான் முதலில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த பலரும் சாதாரணமாக வந்து செல்லக் கூடிய கோவாவில் ஏழு கொரோனா பாசிட்டிவ் கேஸ்தான். அவர்களுக்கும் அலோபதி மருந்துகளோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகளைக் கொடுத்து குணமாக்கி, வீடுகளுக்கு அனுப்பினர். இப்போதுவரை கோவாவில் பாசிட்டிவ் கேஸ்கள் இல்லை.

கேரள மக்களுக்கு இயல்பாகவே ஆயுர்வேத சிகிச்சையில் நம்பிக்கை அதிகம். அங்கு உள்ள 18 ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுர்வேத கிளினிக்குகளுக்கு ‘ஆயுர் ரக்‌ஷா’ எனப் பெயரிட்டு, அவற்றின் மூலம் ஆயுர்வேத மருத்துவர்களை கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடுத்தின. குஜராத், டெல்லி, ஹரியானா, கர்நாடகா உட்பட சில மாநிலங் களிலும் அலோபதி மருந்துகளோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகளைக் கொடுக்க ஆரம்பித்து நல்ல முன்னேற்றம் காண்கின்றனர்’’ என்றார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் இந்திய மருத்துவக் கழக முன்னாள் தலைவர் வனிதா முரளிகுமார், ‘‘இந்தியாவின் பல மாநிலங்களில் அலோபதி மருந்துகளோடு ஆயுர்வேத மருந்துகளையும் கொடுத்து நல்ல பலன் பெற்றுள்ளனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் இந்துகாந்த கஷாயம், அகஸ்த்ய ரசாயனம், கூஷ்மாண்ட ரசாயனம், தசமூல கடுத்ரயம் கஷாயம் ஆகிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இது நல்ல தொடக்கம் என்றே நாங்கள் பார்க்கிறோம். அடுத்தகட்டமாக, மற்ற மாநிலங்களைப்போல் கொரோனா சிகிச்சையில் ஆயுர்வேத மருத்துவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை’’ என்றார்.

%d bloggers like this: