நெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி!

தமிழக அரசுத் தரப்பில் ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள்.

சில நிமிடங்களில் ஹேங்அவுட்ஸ் மீட்டிங்கில் சந்திப்போம்’ என கழுகாரிடமிருந்து வாட்ஸப் தகவல் மின்னியது. சொன்னபடி சிறிது நேரத்திலேயே ஸ்கீரினில் தோன்றினார் கழுகார். எடுத்த எடுப்பிலேயே செய்திக்குத் தாவினார்.‘

‘‘கடந்த 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி-யில் ‘2000 கோடி டெண்டர்… ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி… ஐ.ஏ.எஸ் போர்க்கொடி’ என்று எக்ஸ்க்ளூசிவ் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். பாரத்நெட் என்ற பெயரில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதுதொடர்பாக டெண்டர் விடும் விவகாரத்தில் நடந்த உள்விவகாரங்களை அம்பலப்படுத்திய அந்தக் கட்டுரை, பெருவாரியாக கவனம் ஈர்த்தது. கட்டுரையில், `விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்க, சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரி மறுப்பு தெரிவித்து கையெழுத்துப் போட மறுத்துவிட்டார்’ என்று தகவல் சொல்லியிருந்தோம். சொன்னது போலவே சில தினங்களில் தகவல் தொழில்நுட்ப துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுக்கு மனு கொடுத்துவிட்டார்.”

“ம்ம்ம்…”

“தொடர்ந்து அறப்போர் இயக்கமும், ‘ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் பதிக்க நடந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருக்கிறது’ என்று புகார் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது. அதே நேரம், ‘டெண்டரில் முறைகேடு என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’ என்று அந்தத் துறையின் அமைச்சரான ஆர்.பி.உதயகுமார் விளக்கம் அளித்தார். இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து முதன்மைச் செயலாளர் நேரு, காரசாரமாக பதில் அறிக்கையும் விடுத்தார். இந்த விவகாரத்தில்தான் தற்போது, ‘மறு உத்தரவு வரும் வரை இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கூடாது’ என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.”

‘‘இன்னொரு குற்றச்சாட்டையும் ஆர்.பி.உதயகுமார் மீது வைக்கிறார்களே…’’

‘‘ஆமாம். ஏற்கெனவே டெண்டர் விவகாரம், கட்சியில் கோஷ்டிபூசல் என உதயகுமார் மீது ஆயிரத்தெட்டு சர்ச்சைகள் இருக்கும்போது, ‘தேவையில்லாமல் சில விவகாரங்களில் தலையிட்டு, அம்மா பேரவை நிர்வாகிகளையும் தூண்டிவிடுகிறார்’ என்று சில மாவட்டச் செயலாளர்கள் முதல்வரிடம் புகார் வாசித்தார் களாம். அதையடுத்து, முதல்வர் தரப்பிலிருந்து உதயகுமாரைக் கண்டித்ததாக தகவல்.’’

“அது இருக்கட்டும். டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுத் தரப்பின் ரியாக்‌ஷன் என்னவோ?”

“தமிழக அரசுத் தரப்பில் ஒப்பந்தத்தை எப்படியும் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்கள். இப்போது மத்திய அரசு ஒப்பந்தத்துக்குத் தடைவிதிக்கக் காரணம் ‘மேக் இன் இந்தியா’ விதிமுறைகளின் படி இந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லை என்பதுதானாம். தமிழக அரசுத் தரப்பிலோ, ‘நாங்களாக இந்த ஒப்பந்தத்துக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை. இதற்குப் பின்னால் நடந்த அழுத்தங்களும் எங்களுக்குத் தெரியும். யாருக்காக இந்த ஒப்பந்தத்துக்கு நாங்கள் மல்லுக்கட்டுகிறோமோ… அவர்களுக்கும் மத்திய அரசுக்கும் உள்ள நெருக்கத்தையும் நாங்கள் அறிவோம்’ என்கிறார்கள்.”

“ஓஹோ!”

“அதேசமயம், தொழில் போட்டிதான் இதில் லாபி செய்திருக்கிறது என்று சொல்பவர்கள், ‘மேக் இன் இந்தியா விதிமுறைகளைப் பின்பற்றாதது மட்டுமல்ல, ஒரு நிறுவனம் மட்டுமே பலன் அடையும் வகையில் இந்த டெண்டர் கையாளப்பட்டிருக்கிறது. அதனால்தான் மத்திய அரசு தொழில் வர்த்தகத் துறையின் கீழ்வரும் DPIIT (Department for Promotion of Industry and Internal Trade) அமைப்பு இந்த டெண்டருக்குத் தடைவிதித்துவிட்டது’ என்கிறார்கள். தற்போது மேலும் சில டெண்டர் முறைகேடுகள் விவகாரங் களையும் இந்த அமைப்பின் பார்வைக்குக் கொண்டுசெல்ல தி.மு.க தரப்பில் முடிவெடுத்துள்ளார்கள்.”

“ம்ம்ம்… பாரத்நெட் டெண்டர் முறைகேடு தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையையும் பார்த்தேன். கூடவே மே 3-ம் தேதி ஸ்டாலின் வெளியிட்ட மற்றோர் அறிக்கையில் ‘கொரோனா காலத்திலும் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் நடைபெற்றிருக்கிறது’ என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறாரே?”

“தஞ்சாவூர் கோட்டத்துக்குள் வரும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய நான்கு உபகோட்டங்களில் சுமார் 462 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலைகளைப் பராமரிப்பதற்கு 1,165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 17-ம் தேதி திறக்கப்பட்ட இந்த டெண்டரில்தான் மோசடி நடைபெற்றிருப்பதாக முதல்நிலை ஒப்பந்ததாரர் துரை ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.”

“என்ன குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதாம்?”

“வேறென்ன… ஊழல்தான். வெறும் 500 கோடி ரூபாய்க்குள் முடிய வேண்டிய பணியை, 1,165 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விட்டுள்ளனர். இதனால் அரசுக்கு 700 முதல் 800 கோடி ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக துரை ஜெயக்குமார் தரப்பு குற்றம்சாட்டுகிறது.”

“ஓஹோ…”

“இதில் இன்னொரு விவகாரமும் புதைந்துள்ளது. இந்த டெண்டரை முருகக்கடவுளின் பெயர் கொண்டவரின் இரண்டெழுத்து நிறுவனம்தான் எடுத்துள்ளது. இதற்கு கமிஷனாக 500 கோடி ரூபாயை உச்ச பிரமுகர் ஒருவரின் மனைவி வழி உறவினருக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது டீலாம்.”

“அடேங்கப்பா… கொரோனா காலத்திலும் புகுந்து விளையாடுகிறார்களே!”

“வரும் மே 13-ம் தேதி மற்றொரு சாலைப் பராமரிப்பு டெண்டரையும் திறக்கவுள்ளார்கள். கும்பகோணம், திருவிடைமருதூர், திருவையாறு, பாபநாசம் ஆகிய உபகோட்டங்களில் சுமார் 371 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலைகளைப் பராமரிக்கும் 662 கோடி ரூபாய் பணியை, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வழங்கவுள்ளார்களாம். இதற்கு கமிஷனாக அதே உச்ச பிரமுகரின் மருமகன் வழி உறவினர் ஒருவருக்கு 300 கோடி ரூபாய் கைமாற்றிவிட வேண்டும் என்பது டீலாம்.”

“பெரிய டீல்தான்!”

“இந்த இரு டீல்களில் மட்டும் 800 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் கைமாறி யிருப்பதாக நெடுஞ்சாலைத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு எப்படி டெண்டர் வழங்கப்பட்டது என, பல முதல்நிலை ஒப்பந்ததாரர்களும் கொதித்துப் போயுள்ளனர். விரைவில் மேலும் சில ஒப்பந்ததாரர்கள் நீதிமன்ற படி ஏற இருக்கிறார்கள்.”

“கோட்டையில் முதல்வர் தரப்புக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக பேச்சுகள் எழுந்துள்ளனவே?”

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்குறித்து, கடந்த வாரம் கோட்டையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வரும் சுகாதாரத் துறை அமைச்சரும் ஆலோசனை நடத்தினர். அப்போது ரேபிட் டெஸ்ட் கருவிகள் கொள்முதல் தொடர்பாக பேச்சு திரும்பியுள்ளது. ‘ஐ.சி.எம்.ஆர் பட்டியலிலேயே இல்லாத ஷான் பயோடெக் நிறுவனம்மூலம் எப்படி இறக்குமதி செய்தீர்கள்?’ என விஜயபாஸ்கர் தரப்பிடம் முதல்வர் தரப்பு கேட்டுள்ளது.”

“நியாயமான கேள்விதானே!”

“உமக்குத் தெரிகிறது… ஆனால் அமைச்சர் தரப்பிலோ, ‘எல்லாம் உங்களுக்குத் தெரிந்துதானே நடந்தது’ என்று காட்டமாக பதில் வந்ததாம். தொடர்ந்து, ‘எவ்வளவு கருவிகள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன?’ என்ற கேள்விக்கு, ‘ஐ.சி.எம்.ஆர் கொடுத்த 12,000 கருவிகளை திருப்பி அனுப்பிவிட்டோம். சீனாவிலிருந்து இறக்குமதி செய்த 24,000 கருவிகளில் சில ஆயிரம் கருவிகளைப் பயன்படுத்திவிட்டோம்’ என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பிலும் முதல்வர் தரப்புக்கும் அமைச்சர் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போதுதான் அமைச்சர் தரப்பிலிருந்து, ‘சின்னம்மா வெளியே வரட்டும்’ என்கிறரீதியில் வார்த்தைகள் வெடித்தனவாம். இதுதான் எடப்பாடி தரப்பை ஆத்திரமடையவைத்துள்ளதாம்.”

“சசிகலாவை எதற்காக அமைச்சர் தரப்பு குறிப்பிட்டதாம்?”

“அவர் உட்பட சில அமைச்சர்கள் இன்றும் சசிகலாவின் ஆதரவாளர்களாகத்தான் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். தங்களுக்கு ஆபத்து என வரும்போதெல்லாம் அவர்கள் எடுக்கும் ஆயுதமே `சசிகலா’ என்ற பெயரைத்தான். தன்னைச் சுற்றி சர்ச்சைகள் வெடித்தபோது, ‘சிறையிலிருந்து சசிகலா வெளியில் வர வேண்டும் என்பதே என் பிராத்தனை’ என்றார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இப்போது சுகாதாரத் துறையைப் பறித்து மற்றோர் அமைச்சர்வசம் கொடுத்துவிடலாம் என பேச்சுகள் அடிபடும் நிலையில், விஜயபாஸ்கர் தரப்பு தன்னை தற்காத்துக்கொள்ள சசிகலாவின் பெயரை கையில் எடுத்ததாம்!”

“இரட்டை இலை தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்புக்குச் சாதகமான தீர்ப்பைத்தானே உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது. அப்படியிருக்கும்போது சசிகலாவுக்கு இந்த ஆட்சியில் என்ன அதிகாரம் இருக்கிறது?”

“சில உதாரணங்களைச் சொல்கிறேன் கேளும்… சசிகலா தரப்புக்கு நெருக்கமானவர் என அறியப்பட்டவர் சோ.அய்யர். இவரைத்தான் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சீர்மரபினர் ஆணையத்தின் தலை வராக தமிழக அரசு நியமித்துள்ளது. அதேபோல், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட தர் வாண்டையார் குடும்பத்தின் மருமகனான பாலச்சந்திரனை டி.என்.பி.எஸ்.சி. சேர்மனாக நியமித்துள்ளனர். எல்லாம் சசிகலாவின் ஆதிக்கம்தான் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்!”

“சரிதான்.”

“துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வாரிசுகளான ரவீந்தரநாத், ஜெய்பிரதீப், கவிதா பானு ஆகிய மூவருக்குச் சொந்தமான விஜயந்த் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், சமீபத்தில் அவிநாசி அருகே ஒரு கட்டுமான அனுமதிக்கு விண்ணப்பம் செய்திருந்தது. கொரோனா களேபரத்திலும் அனுமதியை வழங்கிவிட்டார்கள் அதிகாரிகள். இதில்தான் சிக்கலும் எழுந்துள்ளது.”

“என்ன சிக்கலாம்?”

“ஒரு துறையின் அமைச்சராக இருப்பவரின் நேரடி உறவுகள் அந்தத் துறை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது முறையல்ல என்கிறார்கள். தவிர, அவர்கள் நடத்தும் தனியார் நிறுவனத்துக்கு பதிவு முகவரியாக அரசு பங்களாவைப் பயன்படுத்தி யுள்ளார்கள். அடுத்து, இதுபோன்ற விண்ணப்பங்களுக்கு மாதக் கணக்கில் எடுத்துக் கொள்ளும் அரசு நிர்வாகம், ஒரே நாளில் அனுமதி வழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது” என்ற கழுகார் “மே 7-ம் தேதி முதல் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி தவிர தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கைத் திறக்கப்போவதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா தாண்டவமாடிவரும் நிலையில், இது என்னென்ன எதிர்விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ” என்றபடி சிறகுகளை விரித்துப் பறந்தார்.

அரிசியிலிருந்து எத்தனால்… திட்டம் நிறுத்திவைப்பு!

‘உணவுக் கழக குடோன்களில் உபரியாக உள்ள அரிசியை சானிடைஸர்களின் மூலப்பொருளான எத்தனால் தயாரிப்புக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்’ என்று சமீபத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்ததற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரத்தை மையப்படுத்தி, கடந்த 29.04.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘அரிசியில் இருந்து எத்தனால் தயாரிப்பதா… பசியால் வாடும் ஏழைகளுக்கு என்ன பதில்? மத்திய அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில் தமிழக விவசாயச் சங்கங்களின் எதிர்ப்புகளையும் பதிவுசெய்திருந்தோம்.

இந்த நிலையில், ஏப்ரல் 28-ம் தேதியன்று தமிழக பா.ஜ.க சார்பில் இணையதளம் மூலமாக தமிழக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் கைலாஷ் சௌத்ரியுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து 15 விவசாயச் சங்கங்களின் பிரநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்களாம். முதலில பேசிய அமைச்சர் எடுத்த எடுப்பிலேயே, ‘அரிசியிலிருந்து எத்தனால் தயாரிக்கும் திட்டத்துக்கு தமிழக விவசாயிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக அறிகிறேன். நான் உங்களுடன் பேச வரும் முன், மத்திய உணவுத் துறை அமைச்சருடன் போனில் பேசினேன். அப்போது அவர், அந்தத் திட்டத்தை நிறுத்திவைத்திருப்பதாகச் சொன்னார். இந்த மகிழ்ச்சியான செய்தியுடன் நாம் பேச்சுவார்த்தையைத் தொடங்குவோம்’ என்றாராம். இந்தத் தகவலை, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நம்மிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

%d bloggers like this: