ஐபேக் ஹைஜாக்! – அலறும் உடன்பிறப்புகள்

பி.டி.ஆர் Vs பி.கே பனிப்போர்… தயங்கும் ஸ்டாலின்

செனடாப் சாலையில் இருக்கிறேன். சூடான செய்தி காத்திருக்கிறது’ – கழுகாரிடமிருந்து வாட்ஸப் தகவல் சிணுங்கியது. ஹேங்-அவுட்டை ஆன் செய்தோம்.

திரையில் தோன்றிய கழுகார், ‘‘பிரஷாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனப் பஞ்சாயத்துதான் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முகாமை ஆக்கிரமித்திருக்கிறது’’ என்றபடி செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்.

‘‘ ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு நிதி திரட்ட முடியவில்லை என தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம் அதிருப்தி நிலவுவதை, ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்படியான சூழலில் 25 நகரங்களில் நடைபெற்றுவரும் தி.மு.க-வின் உணவு அளிக்கும் திட்டத்தை 150 தொகுதிகளுக்கு விரிவுபடுத்த ஐபேக் முடிவெடுத்திருக்கிறதாம். ‘இவங்க பாட்டுக்கு டெய்லி ஒரு லிஸ்ட் அனுப்பிடுறாங்க… யார்கிட்ட இருக்குய்யா பணம்?’ என தி.மு.க நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்.’’

‘‘ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் செலவு செய்துதானே ஆகவேண்டும்?’’

‘‘அதற்காக சுயமரியாதையையும் அடகுவைக்க வேண்டுமா என்பதுதான் தி.மு.க-வுக்குள் எழுந்துள்ள போர்க்குரல். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தை ஐபேக்குடன் ஒருங்கிணைக்க தி.மு.க-வின் அமைப்புரீதியான ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஆங்கிலம் தெரிந்த ஒருவரை பணியமர்த்தும்படி தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக்கு ஐபேக் தகவல் அனுப்பியுள்ளது. ஐபேக் தரப்பில் இருந்தும் மாவட்டத்துக்கு ஒரு வடமாநில இளைஞரை நியமித்துள்ளனர். உதவி வேண்டுவோரிடம், ‘பொருள் வந்து சேர்ந்துவிட்டதா?’ என ஐபேக் தரப்பு கிராஸ் செக் செய்வதை மாவட்டச் செயலாளர்கள் ரசிக்கவில்லையாம்.’’

‘‘கொஞ்சம் விளக்கமாகவே சொல்லும்!’’

‘‘சென்னை கிழக்கு மாவட்டத்தில் சேகர்பாபு ஆதரவாளர்களிடம் ஐபேக் தரப்பு ஏதோ விளக்கம் கேட்க, ‘நீங்க லிஸ்ட்டை மட்டும் அனுப்புங்க… யாருக்கு உண்மையிலேயே உதவி தேவைப்படுதுங் கிறதைப் பார்த்து நாங்களே ஆள்வெச்சு கொடுத்துடுறோம்’ என பதில் வந்ததாம். இந்த மல்லுக்கட்டு, அனைத்து மாவட்டங்களிலும் வெளிப்பட ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.’’

‘‘சரிதான்…’’

‘‘கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையிலிருந்து மருந்து வேண்டி ‘ஒன்றிணைவோம் வா’ எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. உடனடியாக நகர நிர்வாகி ஒருவரிடம் இந்தப் பொறுப்பை கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜ் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிர்வாகிக்கும் மனோ தங்கராஜ் தரப்புக்கும் ஏழாம் பொருத்தம். அதனால், அந்த நபர் உதவி அளிக்கச் செல்லவில்லை. மனோவை ஐபேக் டீம் குடைந்தெடுக்க, 500 ரூபாய் மருந்தை அளிக்க 1,000 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு அவரே சென்று வந்துள்ளார்.

இதேபோல் சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ-வான கார்த்தியின் தொகுதியிலிருந்து மூவாயிரம் அழைப்புகள் வந்துள்ளன. அவர்களுக்கு கார்த்தி தரப்பு உதவிசெய்யவில்லை என்று ஒரு பிரச்னயை சிலர் கிளப்பியுள்ளனர். இதை ஐபேக் தரப்பு கையில் எடுத்துக் குடைகிறதாம். ‘இது எதிரிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்ட கதை. தேவையில்லாமல் ஐபேக் இதை பெரிதாக்குகிறது’ என கார்த்தி தரப்பு கொந்தளிக்கிறதாம். இதுபோல் ஆயிரம் ஆயிரம் கொந்தளிப்புகள் ஐபேக்குக்கு எதிராக மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஐபேக்கின் செயல்பாடு தங்கள் அதிகாரத்தைப் பறிப்பதாகச் சொல்லி, ஸ்டாலினிடமே 15 மாவட்டச் செயலாளர்கள் புகார் வாசித்திருக்கிறார்கள்.’’

‘‘கஷ்டம்தான். சமீபத்தில் தி.மு.க-வின் ஐ.டி விங்குக்கும் ஐபேக் டீமுக்கும் இடையேகூட பிரச்னை வெடித்ததே?’’

‘‘ஆமாம். டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மீண்டும் திறந்ததைக் கண்டித்து, மே 7-ம் தேதி ‘#குடியைக்கெடுக்கும் அதிமுக’ என்ற ஹேஷ்டேக்கில் ஐபேக் டீம் ட்ரெண்ட் செய்ய தொடங்கியது. இதற்காக வட மாநிலங்களிலுள்ள ஐபேக் ட்விட்டர் ஐ.டி-க்களும் ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தன. இந்த ஹேஷ்டேக்கில்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், ஐபேக்கிடம் ஏற்கெனவே முறைத்துக்கொண்டிருந்த தி.மு.க-வின் ஐ.டி விங், ‘#குடிகெடுக்கும்_எடப்பாடி’ என புதிய ஹேஷ்டேக்கை உருவாக்கி, தேசிய அளவில் ட்ரெண்ட் செய்துவிட்டனர். ஐபேக் உருவாக்கிய ஹேஷ்டேக் படுத்துவிட்டது. இதை ஐபேக் டீம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஐ.டி விங் ஒத்துழைப்பதில்லை என ஸ்டாலின் வரையில் புகார் வாசித்திருக்கிறார்கள்.’’

“இரண்டு தரப்புக்குமிடையே என்னதான் பிரச்னை?’’

“ஐ.டி விங் செயலாளரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் ஐபேக்குக்கும் இடையே ஒத்துப்போகவில்லை. சபரீசனுக்கு நெருக்க மானவரான தியாகராஜனே ஒரு வியூக வகுப்பாளர் தான். வட மாநிலங்களில் பலித்த பிரஷாந்த் கிஷோரின் வியூகம், தமிழக அரசியலில் செல்லாது எனக் கருதும் தி.மு.க நிர்வாகிகள் பலர் உண்டு. அவர்களில் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் ஒருவர் என்ற பேச்சு அறிவாலயத்திலேயே ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் ஒரு ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்வது, அ.தி.மு.க-வை வீம்புக்கு வம்பிழுப்பது என ஐபேக் பாணி சமூக வலைதள வியூகத்தை தி.மு.க ஐ.டி விங் விரும்பவில்லை.”

“பிறகு?”

“தி.மு.க கட்சிப் பத்திரிகையான ‘முரசொலி’ அலுவலக நிலத்தின் மூலப்பத்திர விவகாரம், இந்துக்கள் எதிர்ப்பு என்கிற சாயம், ஸ்டாலினுக்கு எதிரான கேலிக் கிண்டல் இவற்றை சமூக வலைதளங்களிலிருந்து அகற்ற, ஐபேக் டீமிடம் தனி புராஜெக்ட் கொடுக்கப்பட்டதாம். அதை இப்போது வரையில் அவர்களால் செய்து முடிக்க முடியவில்லை. ஸ்டாலினைக் கிண்டலடித்து மீம்ஸ், வீடியோக்கள் பரப்பப்படுகின்றன. இதை ஐபேக்கால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதை ஸ்டாலினுக்கு உணர்த்தவே, ‘#குடிகெடுக்கும்_எடப்பாடி’ ஹேஷ்டேக்கை தேசிய அளவில் தி.மு.க ஐ.டி விங் ட்ரெண்ட் செய்ததாம்.’’

‘‘கடுமையான போட்டிதான்! கட்சி சீனியர்களும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறுகிறார்களே…’’

“இருக்காதா பின்னே! ஒரு மண்டலத்துக்கு 39 தொகுதிகள்வீதம், தி.மு.க-வை ஆறு மண்டலங்களாக ஐபேக் டீம் பிரித்துள்ளது. ஐபேக் டீம் பணிகளை மேற்பார்வையிட்டு தினமும் ஸ்டாலினுக்கு ரிப்போர்ட் செய்வது மண்டலப் பொறுப்பாளர்களின் பணி. தொகுதிவாரியாக மக்களின் பல்ஸை அறியவும் திட்டங்களை மேற்பார்வையிடவும் ஒரு தொகுதிக்கு மூன்று பேர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில், ஐபேக் டீமைச் சேர்ந்த வடமாநில இளைஞர்களும் அடக்கம். ‘ஒன்றிணைவோம் வா’ குழுவுக்கும் தொகுதி குழுவுக்கும் தேவைப்படும் உதவியைச் செய்வதுடன், மாவட்டச் செயலாளரின் பணி நின்றுவிடுகிறது. நீக்கம், நியமனம் எல்லாம் ஐபேக் சொல்படிதான் கட்சிக்குள் நடக்கின்றன. மாவட்டச் செயலாளர்களுக்கு இருந்த அதிகாரத்தையெல்லாம் ஹைஜாக் செய்துவிட்டது இந்த ஐபேக்.’’

“மாவட்டச் செயலாளர்கள் ரியாக்‌ஷன்?’’

“234 தொகுதிகளுக்கும் ஐபேக் டீம்தான் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கப் போகிறதாம். இதற்காக இப்போதிருந்தே தொகுதிவாரியாக வெற்றி வாய்ப்புள்ள நபர்களை அடையாளம் காணத் தொடங்கிவிட்டார்கள். தொகுதிக்கு மூன்று பேர் வீதம் தயாராகும் இந்தப் பட்டியல், மண்டலப் பொறுப்பாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு தயாராகுமாம். பிறகு, ஸ்டாலினின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படுமாம். சில சீனியர்களுக்கே இதில் இடம் கிடைப்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

“ஓஹோ…”

“பிரஷாந்த் கிஷோர் தரப்பில், ‘மாவட்டச் செயலாளர், குடும்ப உறுப்பினர்கள் சொன்னாங்கனு நீங்க தனியா ஒரு லிஸ்ட் ரெடி பண்ணீங்கன்னா, அதுக்கு நாங்க பொறுப்பேத்துக்க முடியாது. அவங்களுக்காக ஐபேக் வேலையும் பார்க்காது. நாங்க கைகாட்டுற வேட்பாளரை நிறுத்துனா மட்டும்தான் ஜெயிக்க முடியும். அதுக்கு நான் கேரன்டி’ என்று ஸ்டாலினிடமே சொல்லிவிட்டார்களாம். இதனால், சீனியர்கள் பலரும் பதற்றத்தில் இருக்கிறார்கள்.’’

“குடும்ப உறுப்பினர்கள் கோட்டா வேறு இருக்கிறதே??’’

“துர்கா, சபரீசன், உதயநிதி என குடும்ப பவர் சென்டர்கள் மூலமாக சீட் வாங்கிவிடலாம் என கனவில் இருந்தவர்களுக்கும் கலக்கம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல்லைச் சேர்ந்த ஒரு பிரமுகர், நரசிம்மர் கோயிலுக்கு துர்கா வரும்போதெல்லாம் கையில் கூடையைத் தூக்கித் திரிந்தே கட்சியில் பெரிய பொறுப்பை வாங்கியவர். திருச்செங்கோடு தொகுதியைக் குறிவைத்திருக்கும் அந்த நபர், வரும் தேர்தலில் கப்பம் கட்டியாவது சீட் வாங்கிவிட தயாராக இருந்தாராம். ஐபேக் டீம் இடையில் புகுந்துவிட்டதால், இவர்போல் சீட் எதிர் பார்த்திருந்த நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.’’

“2016-ம் ஆண்டில் ஓ.எம்.ஜி-யும் இதுபோல் பட்டியல் தயாரித்து, அதில் பலரும் ராங் ரூட்டில் இடம்பிடித்தார்களே!’’

‘‘அந்த பாச்சாவெல்லாம் எங்களிடம் பலிக்காது என்கிறது ஐபேக் டீம். ‘டீமில் இடம்பிடித்துள்ள நபர்கள் பெரும்பாலும் பீகார், மேற்குவங்கம், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவரவர் பணியைச் செய்ய மட்டுமே அவர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு பேட்ச் மாற்றப்பட்டு, மற்றொரு பேட்ச் வரும். வேட்பாளர் பட்டியலை வரையறை செய்வது யார் என்பது யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கும்போது, எப்படி பணம் கொடுத்து பட்டியலில் இடம்பெற முடியும்?’ என்கிறது ஐபேக் டீம்.’’

‘‘இதற்கெல்லாம் ஸ்டாலின் தரப்பினர் என்ன பதில் சொல்கிறார்கள்?”

“அவரின் ஆதரவாளர்களோ, ‘இவையெல்லாம் ஆளுங்கட்சியினர் கிளப்பும் அவதூறுகள்’ என்கிறார்கள். ‘ஐபேக் நிறுவனத்தைப் பொறுத்தவரை மாவட்டத்துக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் மாவட்டச் செயலாளர்களுக்கு உதவும் வகையில் தகவல்களைத் தருவார்கள். மாவட்டச் செயலாளர் சட்டமன்றத் தொகுதிவாரியாக நியமித்திருக்கும் ஆட்களைக் கொண்டு ஐபேக் தரும் தகவல்களை உறுதிப்படுத்தி, செயல்படுத்தி வருகிறார்கள். மே 11-ம் தேதியும்கூட அப்படித்தான் காலை 7.15 மணி தொடங்கி காலை 10.30 மணிக்குள் தூய்மைப் பணியாளர்கள், முடிதிருத்துவோர், கழிவுநீர் அகற்றுவோர், செவிலியர்கள், அர்ச்சர்கள், ஆசிரியர்கள், ரத்ததானம் செய்தவர்கள் என சுமார் மூவாயிரம் பேருக்கு தலைவர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறார். மூன்று ஜோடிக்கு இலவசத் திருமணமும் நடத்தியிருக்கிறார்’ என்கிறார்கள்.”

“ஆனால், சீனியர்கள் சிலர் ஸ்டாலினைக் குழப்புவதாக தகவல்கள் அடிபடுகின்றனவே?”

‘‘ஆமாம். ‘இன்றைக்கு தேர்தல் வைத்தால், தி.மு.க எப்படியும் 210 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும். தேவையில்லாமல் 300 கோடி ரூபாய் கொடுத்து பி.கே-வை (ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர்) புக் செய்துவிட்டோம்’ என சில சீனியர்கள் ஸ்டாலினைக் குழப்புகிறார்களாம். ஐபேக் தரப்பால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து என உணரும் மாவட்டச் செயலாளர்கள் சிலர், ‘இவங்க திட்டமே சரியில்லைண்ணே. இதுவரைக்கும் கொடுத்த 60 கோடி வரைக்கும் போதும். பேசாம புராஜெக்டை நிறுத்திடுங்க’ எனக் கூறியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் கோட்டாவும் செல்லுபடியாகாது என்பதால், அந்தத் தரப்பும் முறுக்கிக்கொள்ள ஆரம்பித்துள்ளதாம். மத்தளமாக இடிபடுகிறார் ஸ்டாலின்.’’

‘‘பாவம்தான்!’’

‘‘ `2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, தனக்கு சீட் வழங்காத காரணத்தால் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி தொகுதிகளில் தி.மு.க-வை மண்ணைக் கவ்வவைத்தார்’ என கும்மிடிப்பூண்டி வேணு மீது ஏற்கெனவே ஒரு புகார் உண்டு. 2016-ம் ஆண்டு தேர்தலில் சரியாகப் பணியாற்றவில்லை என நாகையில் பி.கல்யாணம், நாமக்கல்லில் காந்திசெல்வன், தேனியில் எல்.மூக்கையா என பலரும் அதிரடியாக மாற்றப்பட்டார்கள். தங்களுக்கு சீட் ஒதுக்கவில்லை என்றால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பணியாற்ற மாட்டார்கள் என்கிற அனுபவம் ஸ்டாலினை கவலை கொள்ளச் செய்திருக்கிறது. அதனால் அடுத்தகட்டமாக அடியெடுத்து வைப்பதில் சற்றே அவர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது” என்ற கழுகார், “பிரஷாந்த் கிஷோருக்கும் சபரீசனுக்கும்கூட ஏதோ மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்” என்றபடி புறப்பட எத்தனித்த கழுகாரிடம்,

‘‘தனியார் மின்சார நிறுவனம் ஒன்று தமிழ்நாடு மின்வாரியத்திடம் நஷ்டஈடு கேட்கும் விவகாரத்தில் ஒருவர் இடைத்தரகர் வேலையில் ஈடுபட்டுள்ளார் என்று சில இதழ்களுக்கு முன் சொல்லியிருந்தீர். ஆனால், அவருக்கும் ஜுவல்லரிக்கும் தொடர்பில்லை என்கிறார்களே?” என்று கேட்டோம்.

‘‘அடடே… நானே சொல்ல வேண்டுமென இருந்தேன். அதற்குள் உம்மிடமும் அது வந்துசேர்ந்துவிட்டதோ. அவர் கட்டுமானத்துறையில் இருக்கிறார். ஆனால், அவருடைய பெயரை வைத்து, ஜுவல்லரியுடன் சேர்த்துக் குழப்பி என்னிடம் சொல்லிவிட்டனர். அதை வைத்து பலரும் பலரையும் ரொம்பவே உரசிப்பார்த்துவிட்டனர்’’ என்றபடியே மீட்டிங்கிலிருந்து லீவ் ஆனார்.

%d bloggers like this: