கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை

கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி.. உலகின் மூலை முடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பொருளாகிவிட்டது. கரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்க உதவும் ஒரு சிறு துளி.

கிருமி நாசினி என்று சொல்லிவிட்டாலே அதை வாங்கிப் பயன்படுத்திவிட்டால் நமது கையில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.

அதாவது, கிருமி நாசினியை வாங்கும் போதும், பயன்படுத்தும் போதும் நிச்சயம் சில விஷயங்களை நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

முதலில் எந்த கிருமி நாசினியை வாங்க வேண்டும்?

 1. கிருமி நாசினி என்றால் அது கையில் இருக்கும் கிருமிகளை கொல்லும் சக்தி கொண்டதாக இருக்க வேண்டுமே தவிர வெறும் வாசனைத் திரவியமாக இருக்கக் கூடாது.
 2. அதாவது, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் பரிந்துரைத்திருப்பதன் அடிப்படையில், ஒரு கிருமி நாசினி என்பது 60 முதல் 95% வரை ஆல்கஹால் இருக்க வேண்டியது அவசியம்.
 3. அதே சமயம், ஃபிரெஷ்னர் என்றோ அல்லது பர்ஃபியூம் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
 4. ஆல்கஹால் இல்லாத மற்றும் மிகக் குறைவான அளவிலான ஆல்கஹாலைக் கொண்ட கிருமி நாசினிகள், கையில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவாது. ஒருவேளை கையில் இருக்கும் கிருமிகளை அழிக்காமல், அது பல்கிப் பெருகாமல் தடுக்க வேண்டுமானால் பயன்படலாம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

 1. கைகளுக்கு மட்டுமே.. கிருமி நாசினியைக் கொண்டு கைகளை மட்டுமே சுத்தப்படுத்த வேண்டும். உடலின் வேறு எந்த பகுதியிலும் பயன்படுத்தக் கூடாது.
 2. முக்கியமாக நினைவில் கொள்ளவும், கிருமி நாசினிகள் எரியும் தன்மை கொண்டவை. அதனால்தான் சமைக்கும் போது கையில் கிருமி நாசினியைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
 3. எரியும் தன்மை கொண்ட பொருட்களுக்கு அருகே கிருமி நாசினியை வைக்க வேண்டாம். அது மட்டுமல்ல, கொளுத்தும் வெயிலில் உங்கள் வாகனங்களில் கூட அதை வைத்துவிட்டுச் செல்ல வேண்டாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
 4. உடலில் எங்கேனும் காயம் இருந்தால் அங்கு இந்த கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டாம்.
 5. கைகள் பயங்கர அழுக்காக இருக்கும் போது கிருமி நாசினியைப் பயன்படுத்த வேண்டாம். பதிலாக சோப்புப் போட்டுக் கழுவுங்கள்.
 6. ஒரு கிருமி நாசினியைப் பயன்படுத்தும் முன்பு, அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் படித்துப் பாருங்கள். ஒரு கிருமி நாசினியை உங்கள் கையில் ஊற்றி இரண்டு கைகளையும் கொண்டு தேய்த்து விடுங்கள். உங்கள் கை ஈரத்தில் இருந்து உலரும் வரை காத்திருங்கள். இதற்கு கிட்டத்தட்ட 20 நொடிகள் ஆகலாம்.
 7. பொதுவாகவே உங்கள் கையில் கிருமி நாசினியைப் பயன்படுத்தினால் அது உலரும் வரை நிச்சயம் காத்திருக்க வேண்டும். பிறகு உணவு உண்ணுவது போன்ற வேலைகளில் ஈடுபடலாம்.
 8. ஒரு வேளை கிருமி நாசினியைப் போட்டுவிட்டு, அது உலருவதற்குள் துணி அல்லது காகிதத்தைக் கொண்டு துடைப்பது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம். அதனால் கிருமி நாசினி அதன் வேலையை செய்ய முடியாமல் போகலாம்.

கிருமி நாசினியை விட மிகச் சிறந்த உபாயம் என்னவென்றால் சோப்புப் போட்டு தண்ணீரைக் கொண்டு கையைக் கழுவுவதுதான். அந்த வாய்ப்பு இல்லாத பட்சத்தில் கிருமி நாசினையைப் பயன்படுத்தலாம்.

%d bloggers like this: