4 மணி நேரம்..! கட்சியா, கம்பெனியா? ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சி தலைவர் ஸ்டாலினை உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டார் ஜெ. அன்பழகன். இவரது குரல் பெரும்பான்மை மாவட்ட செயலாளர்கள் குரல் என்பது கூடுதல் சிறப்பு.

தமிழகத்தில் பொதுவாக கட்டமைப்பு மற்றும் கட்டுக்கோப்பான கட்சி என்று அரசியல் பேசும் சாதாரண நபரும் சொல்வது திமுகவை தான். ஆனால், இப்போது திமுக கட்சி அல்ல… வடிவேலு சினிமாவில் வசனமாக சொல்வது போல.. கம்பெனி என்ற ரேஞ்சுக்கு சென்றிருக்கிறது.

அதற்கு மிக சமீபத்திய உதாரணம் தான் திமுக மா.செ.க்கள் கூட்டம். கிட்டத்தட்ட முண்டாசு தட்டாத அளவுக்கு இருந்திருக்கிறது இந்த கூட்டம். அதுவும் ஆன்லைனிலேயே இந்த அலப்பறை என்றால், நேரில் கூட்டம் நடத்தப்பட்டு இருந்தால் ஸ்டாலின் அந்தோ கதி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

கொரோனா நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க திமுகவின் மாசெக்கள் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி முறையில் நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காலை 10.30க்கு தொடங்கிய இந்த மாசெக்கள் கூட்டம் பிற்பகல் 2.50 வரை நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது. அனைத்து மாவட்டச் செயலாளர்களும் பேசினார்கள் என்பதை விட கத்தினார்கள் எனலாம்.

கொரோனா நிவாரணப் பணிகளில் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் டீம் ஒருங்கிணைக்கும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் பற்றியும் மற்ற நிவாரணப் பணிகள் பற்றியும் விவாதிக்கவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் மற்ற மா.செ.க்களை விட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் தான் ஸ்டாலினை பிடித்து, உலுக்கோ, உலுக்கு என்று உலுக்கி இருக்கிறார்.

நான் எனக்காக பேசலை… கட்சிக்காக பேசறேன். நான் எல்லா மா.செ.க்களின் மனசாட்சி என்று ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட் கணக்காய் ஸ்டாலினை உதறல் அடைய வைத்திருக்கிறார்.

வழக்கம்போல தனது அதிரடியான பாணியில் ஐபேக் டீமையும் பிரசாந்த் கிஷோரையும் வெளுத்து எடுத்துவிட்டார். அவரது பேச்சின் சாராம்சம்: தலைவருக்கு நிகர் தலைவர்தான். தலைவரை மையமாக வைத்துதான் திமுக என்ற கட்சி சுழல்கிறது. தலைவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாக மாவட்டச் செயலாளர்களாகிய நாங்களெல்லாம் இருக்கிறோம். இந்நிலையில் கழகத்துக்கு ஆலோசனை கூற கம்பெனிகள் தேவையா? தேவையே இல்லை.

நாம் என்ன கட்சி நடத்துறோமா இல்லை கம்பெனி நடத்துகிறோமா? கட்டமைப்பு இல்லாதவர்களுக்குதான் கம்பெனி தேவை. நாம் கட்டமைப்போடு உள்ள கட்சி. நமக்கு நாமே போனோம். 100 சீட்டை தூக்கிட்டு வந்துட்டோம்.

ஊராட்சி சபை கூட்டம் போடச் சொன்னீங்க. போட்டோம். 39 எம்பிக்களை அள்ளிட்டு வந்திட்டோம். கம்பெனி இருந்தால்தான் நீங்கள் முதல்வர் ஆவீர்கள் என்று கிடையாது. எந்த கம்பெனியும் இல்லையென்றாலும் நீங்கள் தான் அடுத்த முதல்வர்.

திமுககாரர்கள் அத்தனை பேரும் சுயமரியாதைக்காரர்கள். சுய மரியாதைக்கு இழுக்கு வந்தால் எந்த திமுககாரனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். நான் எப்போதும் ரொம்ப ஓபனாக பேசறவன். நிறைய மாவட்டச் செயலாளர்கள் சார்பாகவே நான் பேசுறேன்.

அது என்ன ஐபேக் டீம்? என்ன கம்பெனி? என்னை விட வயசுல சின்ன பையன் ஒருத்தன் எங்கிட்ட அதிகாரம் பண்றான். டவுன்லோடு பண்ண சொல்றான். வாட்ஸ் அப் அனுப்ப சொல்றான். பேஸ்புக்ல போடுங்க, ட்விட்டர்ல போடுங்கன்றான்.

ட்ரெண்டிங் பண்ணுங்கன்றான். ஆலோசனை சொல்றதுக்கு நீங்க வேணா அவங்கள வச்சிக்கங்க. உங்களுக்கு நாங்க வேலைக்காரங்களா இருப்போம். ஆனா கண்டவனுக்கும் எங்களால வேலைக்காரனாக இருக்க முடியாது என்று தேள் கடித்த கதையாக ஸ்டாலினை கடித்து எடுத்தே விட்டாராம் அன்பழகன்.

இந்த கூட்டத்தின் நோக்கமே வேறு கோணத்துக்கு போக, ஒரு கட்டத்தில் அரண்டே போனராம். ஒரு கட்டத்தில் ஜனங்க பேசி வருவதை கடைசியில் நமது கட்சிக்காரர்களுக்கு பேச ஆரம்பித்துவிட்டனர் என்று மிரண்டு இருக்கிறாராம் ஸ்டாலின். இனி பிரஷாந்த் கிஷோர் டீமுக்கு சாதகமாக எப்படி இவர்களை சமாதானப்படுத்துவது என்ற யோசனையில் இருக்கிறாராம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க வெடியாய் வெடித்த அன்பழகனுக்கு மற்ற மா.செ.க்கள் அப்ளாஸ் பண்ணி பாராட்டி இருக்கிறார்களாம். நாங்க நினைச்சோம்.. நீங்க சொல்லிட்டீங்க என்று புளங்காகிதம் அடைந்துவிட்டனராம். இந்த தகவல்கள் எல்லாம் அப்படியே ஸ்டாலின் முன்பு கொண்டு போகப்பட… என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கிறாராம்….!

ஒரு மறுமொழி

  1. இளங்கோவன்

    சுயமரியாதை கட்சி அதை இழந்து விட்டது.

%d bloggers like this: