ராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா? ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.!

ஊரடங்கில் உருவாகும் திடீர் பினாமிகள்!
சொத்துகளை மாற்றி எழுதும் மந்திரிகள்!

“”ஹலோ தலைவரே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. எம்.பி.க்களை அவமரியாதையா நடத்திய விவகாரம், மோடி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்குது.”

“”ஆமாம்பா, மனுகொடுக்கப்போன தி.மு.க. எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அப்ரோச் பண்ணிய முறை மிகவும் மோசமா இருந்ததா அவங்களும், தயாநிதிமாறன் தாறுமாறா பேசியதா கோட்டைத் தரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டியதே?”

“”தி.மு.க.வின் “ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் வந்த கோரிக்கைகளில் அரசுத்தரப்பு செய்ய வேண்டியவற்றை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு லட்சம் மனுக்களோடு எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் மனுக்களோடு போய் தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்திச்சப்ப நடந்தது தொடர்பாத்தான் சர்ச்சை கிளம்பியது. டி.ஆர்.பாலுவும் தலைமைச் செயலாளரும் அறிக்கைப் போர் நடத்தினாங்க. தி.மு.க. தரப்பில், தலைமைச் செயலாளர் மீது மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் பிரச்சினை கிளப்புவோம்னு பாலு சொன்னனதோடு, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கிட்டாரு.”

“”கோட்டை விவகாரம் பற்றி டெல்லி என்ன நினைக்குதாம்?”

“”சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தி.முக. எம்.பி.க்களான டி.ஆர்.பாலு வும், தயாநிதியும் கடிதம் கொடுத்திருக்காங்க. அது உடனடியாக மத்திய அமைச்சரவைச் செயலர் மூலம் பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டி ருக்கு. தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரிச்சிருக்காங்க. அப்ப சண்முகம், தி.மு.க. எம்.பி.க்கள்தான் என்னை மிரட்டுவது போல நடந்துக்கிட்டாங்கன்னு விளக்கம் கொடுத்திருக்கார், அவரின் இந்த பதிலைக் கடிதமாக அனுப்பச் சொல்லியிருக்குதாம் டெல்லி.”
“”கோட்டையில் நடந்த சர்ச்சை பற்றி பேட்டி கொடுத்த தயாநிதி மாறன், தாழ்த்தப்பட்டவர்கள் போல நடத்தப்பட்டோம்னும் மூன்றாம்தரமாக நடத்துனாங்கன்னும் சொன்னதும் கூட்டணிக்குள்ளேயே அதிருப்தியை உண்டாக்கிடிச்சே?”

“”ஆமாங்க தலைவரே.. சமூக நீதியையும் சுயமரியாதையையும் வலியுறுத்தும் இயக்கமான தி.மு.க.வின் தலைமைக் குடும்பத்து உறவினரான தயாநிதி இப்படி பேசியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளிப்பட்டது. கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் இது பற்றிய தன் எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்தாரு. தி.மு.க தலைமை, தயாநிதி பக்கம் முகத்தைத் திருப்ப, தன்னுடைய கருத்துக்காக வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்தார் தயாநிதி. தாழ்ந்த முறையில் நடத்தினார் என்பதைத் தான் அப்படிச் சொல்லிவிட்டேன்னு தயாநிதி வருத்தம் தெரிவிச்சாரு.”

“”பா.ஜ.க. இந்த விவகாரத்தை சாதீய ஆயுதமாக் கையில் எடுத்திருக்கே?”
ww
“”உண்மைதாங்க தலைவரே, ஏற்கனவே தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையப் பதவியில் இருந்தவரான தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், கட்சியின் சீனியர் லீடர்களிடம் விவாதித்துவிட்டு, கட்சியின் சார்பில் தயாநிதி மீது புகார் கொடுக்கும் மூவ்களை ஆரம்பித்து வைத்தார். இதைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர்களான நரேந்திரன், ராகவன், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் தயாநிதியைக் கைது செய்ய னும்னு சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக் காங்க. தமிழகம் முழுக்க பல ஊர்களிலும் இதுபோன்ற புகார்களை தயாநிதிக்கு எதிரா பா.ஜ.க. கொடுத்துக்கிட்டு இருக்கு. நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு எதி ராக மிகவும் ஆவேசமா தயாநிதி பேசியதை மறந்திருக்க மாட்டீங்க. அப்போதிருந்தே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தாங்க. அத னால், அவர் மீதான புகாரை சீரியஸாகப் பார்க்கத் தொடங்கியிருக்குதாம் பா.ஜ.க. தலைமை.”

“”பா.ஜ.க.வும் இதுபோன்ற விமர்சனத் தில் ஏக காலத்தில் சிக்கியிருக்குதே.”

“”டி.வி.சேனல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. பிரமுகரான கரு.நாகராஜன், காங் கிரஸ் எம்.பி. ஜோதிமணியை தனிப்பட்ட முறையில் கடுமையாகத் தாக்கிப் பேசிய தற்கு எதிர்ப்பு தெரிவிச்சி, ஜோதிமணி பாதியிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளி யேறினார். கரு.நாகராஜன் தன் கருத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி, கலாநிதி வீராசாமி எம்.பியும் வெளியேறினாரு. இந்த விவகாரமும் பல வகையிலும் பெரும் கண்டனத்துக்கு ஆளாகி வருது. தயாநிதி மீது காவல்துறை கடும் நடவடிக்கையை எடுக்கும் பட்சத்தில் ஜோதிமணி விவகாரத் தைப் பெரிய அளவில் கையில் எடுக்க காங்கிரஸும் தி.மு.க.வும் தயாராகிக் கிட்டு இருக்குது.”

“”இந்த நேரத்தில் தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான வி.பி.துரைசாமி, தமிழக பா.ஜ.க. தலைவர் முருகனை சந்திச்சிருக்காரே?”

“”தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், தன் செல்வாக் கைப் பெருக்கிக்கொள்ள, தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சியில் இருக்கும் அதிருப்தியாளர்களை எல்லாம் பா.ஜ.க.வில் இணைக்கும் திட்டத்தைக் கையில் எடுத் திருக்காராம். அவர்களைத் தேடிப் பிடித்து அவர்களோடு பேசி வருகிற முருகன், தி.மு.க.வில் ராஜ்யசபா பதவி தனக்குத் தரப்படலைங்கிற அதிருப்தியில் இருக்கும் மாஜி துணை சபாநாயகரான வி.பி.துரைசாமியை, தன் அலுவலகத்துக்கு வரும்படி அழைச்சிருக்கார். துரைசாமியும் அந்த அழைப்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், பா.ஜ.க.வின் அலுவலகமாக கமலாலயத்துக்குச் சென்று முருகனைப் பார்த்திருக்கிறார். பா.ஜ.க. தயவில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பதவி கிடைக்குமாங்கிற எதிர்பார்ப்பு துரைசாமிக்கு இருப்பதாகவும் சொல்றாங்க.”

“”மத்தியிலும் முதல்வர் எடப்பாடிக்கும், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் ரகசிய உடன் பாடுகள் ஏற்பட்டிருக்குதாமே?”

“”அப்படிதாங்க தலைவரே அ.தி.மு.க. தரப்பில் இருந்து செய்திகள் வருது. விரைவில் ரிலீசாகி வெளியே வரப்போகும் சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச் செய லாளராக ஏற்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் தயாராக இருக் காங்க. இந்த நிலையில் ஓ.பி.எஸ். மட்டும் தினகரனிடம் தனியே பேசிக்கிட்டு இருக்கிறார்னு ஒரு தகவல் எடப்பாடி காதுக்கு வர, உடனே ஓ.பி.எஸ்.சிடமே பேச்சுவார்த்தை நடத்திய எடப்பாடி, நாம் சசிகலாவை நம்பறோம். ஆனால் அவங்க நம்மை எந்த அளவுக்கு நம்பறாங்கன்னு தெரியலை. அதனால் நாம ரெண்டு பேரும் எந்த நிலையிலும் ஒண்ணா இருக்கனும். அப்பதான் அவங்க வந்தபிறகும் நமக்கான அதிகாரம் நிலைக் கும்னு சொல்ல, ஓ.பி.எஸ்சும். ஏத்துக்கிட்டாராம்.”

“”இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். இணைப்பு செயல்பாடு எப்படி இருக்குமாம்?”

“”சசிகலாவின் ரிலீசுக்கு முன்பாகவே தங்கள் விசுவாசிகளை மா.செ.க்கள் ஆக்குவதன் மூலம் தங்கள் பலத்தை உயர்த்திக்கணும்னு முடிவெடுத்திருக்காங்களாம். அதன் படி ஒரு மாவட்டத்தில் மாநகர் மா.செ.வா எடப்பாடி விசுவாசி இருந் தால், அங்கே புறநகர் மா.செ.வா ஓ.பி.எஸ். விசுவாசி இருப்பாராம். மாநகரில் ஓ.பி.எஸ். விசுவாசி மா.செ.ன்னா, புறநகரில் எடப்பாடி விசுவாசி மா.செ.வாம். இப்படி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டிருக்குதாம்.”

“”கொரோனா நேரத்திலும் அரசியல்வாதிகள் தெளிவாத்தான் இருக்காங்க. தமிழக மந்திரிகள் பலரும் தங்கள் சொத்துக்களை புதுவகை டெக்னிக்கில் சேஃப் பண்ணிட்டாங்களாமே?”

“”நானும் கேள்விப்பட்டேங்க தலைவரே, எடப்பாடி அரசு கொரோனாவைத் தடுப்பதிலும், நிவாரண உதவிகளைச் செய்வதிலும் தோல்வி அடைந்திருப்பதால். அடுத்து தி.மு.க.வே ஆட்சிக்கு வரும்னு கணக்குப் போட்ட அமைச்சர்கள் பலரும், அப்படி தி.முக. வந்தால், தங் கள்மீது சொத்துக் குவிப்பு வழக்கைப் போட்டு, ஒருவழி பண்ணிவிடுவார் கள்னு பயப்படறாங்களாம். அதனால், தங்கள் பினாமி பெயர்களில் இருந்த சொத்துக்களை, தங்கள் நெருங்கிய வட்டத்துக்கு வெளியே இருப்பவர் களின் பெயரில் பதிவுசெய்ததோட, வெளிநபர் பெயர்களில் உள்ள வெளிநாட்டு முதலீடுகளை எல்லாம் தங்களுக்கு நெருக்கமான பினாமிகளின் பெயர்களில் மாற்றியிருக்காங்களாம். காரணம், இங்கே உள்ள பினாமி சொத்துக்கள் எளிதில் சிக்குமாம். வெளிநாட்டு பினாமி முதலீடு கள் இங்கே அவ்வளவு விரைவில் நடவடிக்கைக்கு ஆளாகாதாம். ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதில் இவங்க டிரான்சாக் ஷன்தான் ஜோரா நடந்திருக்கு.”

“”தி.மு.க. மாதிரியே அ.தி.மு.க.வும் ஆலோசகர் நியமன ஒப்பந்தம் போட்டிருக்காமே?”

“”ஆமாங்க தலைவரே, நாம ரெண்டு மாசத் துக்கு முன்னாடியே பேசிக்கிட்ட மாதிரி, தி.மு.க. வின் ஓ.எம்.ஜி குழுவில் இருந்த முன்னாள் ஆலோ சகரான சுனில், தற்போது அ.தி.மு.க.வுக்கு வேலை செய்ய அக்கட்சியோடு அக்ரிமெண்ட் போட்டிருக் கிறார். ஆரம்பத்தில் வடநாட்டு கார்பரேட் அரசி யல் இங்கே எடுபடாதுன்னு ஆளுங்கட்சியின் சீனி யர்கள் சொன்னதால், சுனில் பக்கம் எடப்பாடி திரும் பலை. அவரோட மகன் மிதுன் மூலம் சுனில் மூவ் செய்ய, அ.தி.மு.க.வுடனான ஒப்பந்தம் ஓ.கே.வாகி யிருக்கு. தி.மு.க.வில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வியூகப்படிதான் பிரசாந்த் கிஷோர் டீம் வேலை செய்யுது. அதுபோல அ.தி.மு.க.வில் எடப்பாடி மகன் மிதுனின் கீழ்தான் சுனில் வேலை செய்வாராம். சோசி யல் மீடியாக்களில் முதல்வரின் இமேஜை உயர்த்திக் காட்டும் சுனிலின் மூவ் எடப்பாடியை கவர்ந்திருக்கு. சுனிலை ஏகத்துக்கும் அவர் நம்பத் தொடங்கியிருக் கிறார். ஆனால் அமைச்சர்கள் உள்ளிட்ட அ.தி.மு.க. சீனியர்கள், சுனில் குருப்பை எதிர்க்கிறார்களாம்.”

“”ஏன்?”

“”போன தேர்தலில் தி.மு.க.வை ஜெயிக்க வைக்க சுனில் போட்டுக் கொடுத்த வியூகம் வொர்க் அவுட் ஆகலைன்னு சென்ட்டிமென்ட்டா பார்க்குறாங்களாம். அவர் நமக்கு தேவையா? தி.மு.க.வின் ரகசியங்களை அறிந்தவர் என்பதற்காக அவரை நாம் பயன்படுத்தினால், நாளை நமது ரகசியங்களை அவர் தி.மு.க.வுக்குக் கொண்டு போகமாட்டார்ங்கிறதுக்கு என்ன உத்தரவாதம்னு கேட்கிறாங்களாம். இதுதொடர்பாக எடப்பாடி சொன்ன விளக்கங்களிலும் அவர்களுக்குத் திருப்தி இல்லையாம். ஏற்கனவே பல பிரச்சினைகளுடன் தேர்தல் ஆலோசகர் பிரச்சினையிலும் சீனியர்களுக்கு எடப்பாடி மீது மனக் கசப்பாம்.”

“”தி.மு.க.வில் என்ன நிலவரம்?”

“”ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் நடக்கும் நிவாரண பணிகள் குறித்து மா.செ.க்களு டன் காணொலி வழியாக அண்மையில் ஆலோ சனை நடத்தினார் ஸ்டாலின். அப்போது பெரும் பாலான மா.செ.க்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை சரியாகச் செய்வதாகப் புள்ளி விபரங் களோடு சொன்னாங்க. சென்னை மேற்கு மா.செ.வான ஜெ.அன்பழகன் ‘2021-ல் நம்ம தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக் கும். நம் உழைப்பும், மக்களுக்கு நம்மீது இருக்கும் நம்பிக்கையும் இயல்பாகவே நம்மை ஜெயிக்க வைத்து, கட்சித் தலைவரை முதல்வராக்கும். எனவே நமக்கு அரசியல் வியூகம் வகுக்கும் ஐபேக் கம்பெனி எல்லாம் எதுக்கு? வேணும்னா உங்க ஆபீசுக்கு வேலை செய்யட்டும். எங்ககிட்ட வேலை வாங்க வேணாம். நான் அரசியலுக்கு வந்த போது பிறக் காத சின்னச் சின்ன பையன்கள் கூட ஐபேக் கில் இருந்து கொண்டு எங்களிடம் அதிகாரம் செலுத்துறாங்கன்னு கோபத்தை வெளிப்படுத்தியிருக்காரு.”

“”என்ன ரியாக்ஷன்?”

“”நான் சொல்றேன்… தொண்டர்களின் பலத்தால் சோதனைகளையும் நெருக்கடி களையும் எதிர்கொண்ட கட்சி யான தி.மு.க.வில், ஆலோசனை டீம்ங்கிற பெயரில் முகம் தெரி யாத ஆட்கள் நெருக்கடி தரு வதை கட்சி நிர்வாகிகள் விரும் பலை. பல மா.செ.க்களின் மனநிலையும் இதுதான். அதை ஜெ.அன்பழகன் எடுத்துச் சொன்னப்ப, மற்ற மா.செக்கள் எந்த எதிர்ப்புக்குரலும் எழுப்பா மல், அமைதியா ஆமோதிச் சிருக்காங்க. எல்லாத்தையும் கவனமா கேட்ட ஸ்டாலின், ஐபேக் நிறுவனம் என்பது கள நிலவரம் தொடர்பான புள்ளி விவரங்களைத் திரட்டத்தான் பயன்படுத்தப்படும். கட்சி நிர் வாகத்திலோ, வேட்பாளர் தேர் விலோ அதற்கு வேலை இல் லைன்னு விளக்கம் கொடுத் திருக்காரு.”

%d bloggers like this: