லாக்டெளனில் அ.தி.மு.க எப்படி? – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்!

தமிழகத்தில் ஆளுங்கட்சியிலும் அதிருப்திகள் இருக்கின்றனவோ?” என்ற கேள்வியை கழுகாரிடம் முன்வைத்தோம்.

“இல்லாமல் எப்படியிருக்கும்? கொரோனாவால் சொந்த ஊருக்குச் சென்ற அமைச்சர்கள் பலரையும் சென்னைக்கு மீண்டும் திரும்பி வரச் சொல்லியுள்ளார்கள். ‘கொரோனா தாக்கத்தில் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தன?’ என்று உளவுத்துறையிடம் முதல்வர் ரிப்போர்ட் கேட்டிருந்தார். ரிப்போர்ட் முதல்வர் கைக்கும் வந்துவிட்டதாம். அதைப் பார்த்து முதல்வருக்கு ஏகவருத்தம் என்கிறார்கள்.”

“ஏன்?”

“தி.மு.க ‘ஒன்றிணைவோம் வா’ என ஊர் ஊராக நிவாரணப் பணிகளைச் செய்துவரும் நேரத்தில், ஆளுங்கட்சியினர் பல இடங்களில் அமைதியாக இருந்துள்ளனர்.

மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், ‘எனக்குக் கொடுத்த துறையைவைத்து குருவி சேர்க்கிற மாதிரி காசு சேர்த்திருக்கிறேன். அதையும் எடுத்து நிவாரணம் எனக் கொடுத்துட்டு போகச் சொல்கிறீர்களா? அடுத்த முறை கட்சியும் ஆட்சிக்கு வராது, நானும் சீட் கேட்க மாட்டேன்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிய தகவல், மேலிடத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாம். எம்.எல்.ஏ-க்கள் பலரும் இந்த மனநிலையில்தான் இருக்கிறார்களாம்.”

“அடுத்த சட்டமன்றத் தேர்தலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்வதில் பல சிக்கல்கள் இருக்குமோ?”

”இனிதான் அவருக்கு தலைவலி அதிகமாகும் என்கிறார்கள். நிவாரணம் வழங்கும் இடங்களில் கேன்வாஸ் செய்யும் தி.மு.க-வினர், ‘அ.தி.மு.க அமைச்சர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். அதனால்தான் அவர்கள் மக்களுக்கு உதவ முன்வரவில்லை’ எனப் பேசி வருகிறார்கள். திருச்சி மாவட்ட கலெக்டரைச் சந்தித்து மனு கொடுத்த தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ‘கொரோனா நிவாரணம் வழங்குவதில் அரசு செயல்பாடுகள்குறித்துச் சொன்னால் அமைச்சர்களுக்கு சங்கடம். அவர்கள் கொரோனா ஒழிப்புக்காகக் கூட்டம் நடத்துவதோடு சரி’ என்று பேசியிருக்கிறார். இவையெல்லாம் அ.தி.மு.க கூடாரத்தைக் கடுப்பில் தள்ளியிருக்கின்றன.”

%d bloggers like this: