கலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்!

மனித உடலில் நடக்கும் ஒவ்வொரு செயலும் அதிசயமே. உணவு செரித்தல், கரு உருவாதல், நாம் தினமும் உறங்கும் நேரத்துக்கு அலாரம் அடித்ததுபோல் தூக்கம் வருதல் என்று பல அதிசயங்களை

நடத்தும் தலைசிறந்த அதிசயமாக உள்ளது நம் உடல். நம் உடல் பற்றிச் சொல்லப்படும் சில செயல்பாட்டு முறைகள், ஆச்சர்யமானவை. அதில் உள்ள உண்மைத்தன்மை பற்றி பதில்கள் தருகிறார், பொது நல மருத்துவர் டாக்டர் S. சுரேஷ் கண்ணா.

40 வயதுக்கு மேல் ஒவ்வொரு வருடமும் ஒரு சதவிகிதம் நம் உடலில் சக்தி குறையுமா?

30 வயது முதல் 40 வயதுவரை தசைகள் வலுவடையும். ஆனால், 40 வயதுக்கு மேல் தசைகள் வலுவிழக்கும். நரம்புகளில் தளர்வு, ஹார்மோன் மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் புரதத்தை சக்தியாக மாற்றும் தன்மை குறைந்துவிடும். அதனால் தசைகள் வலுவிழக்கும். 40 வயதுக்கு மேல் 5-6 கிலோ எடைகூடும். அப்போது 10 கிலோ கொழுப்பு அதிகரித்து, 3 கிலோ தசை குறையும். இறுதியாக ஐந்திலிருந்து ஆறு கிலோ கூடும். இது புரியாமல் மக்கள் எடையைக் குறைக்க உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்கின்றனர். இதனால் தசைகள் வலுவிழந்து சக்தி குறைகிறது. 40 வயதுக்கு மேல் சத்தான உணவு உட்கொள்வதும் உடற்பயிற்சி செய்வதும் மிக அவசியம்.

வேகமாக நடப்பதைவிட சாதாரணமாக ஓடுவதற்கு குறைந்த சக்திதான் தேவைப்படுமா?

ஆம். சாதாரணமாகவே நாம் எந்தச் செயல் செய்தாலும் சக்தியை சேமிக்க உடல் முயலும். நாம் வேகமாக நடப்பதைவிட சாதாரணமாக ஓடுவதற்குக் குறைந்த சக்தி தேவை. அதனால்தான் நாம் வேகமாக நடக்கும்போது சக்தி விரயமாவதைத் தடுக்க உடல் தன்னிச்சையாக ஓடச் செய்கிறது.

நாம் ஓடும்போது நம் கால்களில் இருக்கும் அழுத்தம், உடல் எடையைவிட அதிகமாகுமா?

நடக்கும்போது உடல் எடையைவிட ஒன்று முதல் ஒன்றரை மடங்கு அழுத்தம் காலில் ஏற்படும். அதுவே ஓடும்போது 2.5 – 3 மடங்கு அழுத்தமும், குதிக்கும்போது 3 – 4 மடங்கு அழுத்தமும் அதிகமாகும்.

காலையைவிட இரவில் குறைவான அளவு கலோரியே எரிக்கப்படுமா?

நாம் ஓய்வாக இருக்கும்போது எரிக்கப்படும் கலோரி அளவு `பேஸல் மெட்டபாலிக் ரேட் (Basal Metabolic Rate)’ என்று கூறப்படும். அதுபோல், உறங்கும்போது எரிக்கப்படும் கலோரி அளவு `ஸ்லீப்பிங் மெட்டபாலிக் ரேட். இது, பேஸல் மெட்டபாலிக் ரேட்டைவிட 15% குறைவு. நாம் காலையில் எரிக்கும் கலோரிகளைவிட இரவில் குறைவான அளவு கலோரிகளை எரிக்கிறோம். நாம் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்லும்போது கலோரி பயன்பாடு மேலும் குறைந்து, காலையில் நாம் எழுவதற்கு முன்பு மிகவும் குறைவான அளவில் கலோரி எரிப்புத்தன்மை இருக்கும்.

நாம் உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு தசைகளில் ஏற்படும் அயர்ச்சி, உடற்பயிற்சியில் ஈடுபடாத தசைகளையும் பாதிக்குமா?

நாம் உடற்பயிற்சி மேற்கொண்ட பிறகு 12 முதல் 24 மணி நேரம் கழித்து தசைகளில் அயர்ச்சி ஏற்பட்டு, ஒன்று முதல் மூன்று நாள்கள்வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. நாம் உடற்பயிற்சி மேற்கொள்ளும் குறிப்பிட்ட தசைப்பகுதியும், அதைச் சுற்றியுள்ள இணைப்புகளுமே இதனால் பாதிக்கப்படும். உடற்பயிற்சியில் ஈடுபடாத உடற் பகுதியில் அயர்ச்சி ஏற்படுவதாக நாம் உணர்ந்தாலும், அவ்வாறு ஆவதில்லை.

உடலில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் தனிப்பயிற்சி செய்வதற்கும், முழு உடலுக்குமான உடற்பயிற்சி மேற்கொள்வதற்குமான வித்தியாசம் என்ன?

சிலர் ஜிம்மில், தொடை, வயிறு, கை என குறிப்பிட்ட தசைப்பகுதிக்கான பிரத்யேகப் பயிற்சிகளைச் செய்வார்கள். இப்படிப் பிரத்யேக பயிற்சி செய்தாலும், நடைப்பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்ற மொத்த உடலுக்கான பயிற்சிகளைச் செய்தாலும், அதை எந்தளவுக்குத் தொடர்ந்து செய்கிறோம் என்பதே முக்கியம். அதுவே பலனைத் தரும்.

30 நிமிடங்கள் நடப்பதால் எரிக்கப்படும் கலோரியும், இரண்டு மணி நேரம் நிற்பதால் எரிக்கப்படும் கலோரியும் ஒன்றா?

ஆறு மணி நேரம் நிற்பதால் எரிக்கப்படும் கலோரி, 30 நிமிடங்கள் ஓடுவதில் எரிக்கப்படும். ஆனால் அதிக நேரம் நாம் நிற்பதால், மூட்டு எலும்புகள் பாதிப்படையும். நடப்பதைவிட நான்கு மடங்கு அதிகமாகவும், ஓடுவதைவிட ஏழு மடங்கு அதிகமாகவும் மூட்டுகளில் பாரம் ஏற்படும். கலோரிகளை எரிப்பதற்கு நடப்பதும் ஓடுவதும் சிறந்தது. நிற்பது மூட்டுகளுக்கு உகந்ததல்ல.

%d bloggers like this: