கொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி?

கொரோனாவால் பல தொழில்கள் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் சைபர் மோசடி கும்பல் செம ஆக்ட்டிவ்வாக இருக்கிறது. இரண்டு காரணங்கள்… ஒன்று எப்போதையும்விட இப்போதுதான் நாம் அதிகம் இணையத்தைப்

பயன்படுத்துகிறோம். இன்னொரு காரணம், உலகமெங்கும் வேலையிழப்பு அதிகரித்திருக்கிறது. பலரும் வருமானத்துக்கான மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அப்படி தொழில்நுட்பம் தெரிந்த சிலருக்கு மாற்றுவழி என்பது இது போன்ற `சைபர் வழி’களாகதான் இருக்கின்றன.

ஹேக்கர் Hacker இப்படியான சைபர் கொள்ளையர்கள் கொரோனாவின் பெயரைச் சொல்லியே எப்படியான பொறிகளை நமக்கு வைக்கின்றனர், அதில் சிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?விரிவாக அலசுவோம்.நில், கவனி, கிளிக் செய்போலி இணையதளங்கள்!

கொரோனா மீது இருந்த பயம் காலப்போக்கில் மக்களிடையே குறைந்துவிட்டாலும், அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் இன்னும் ஆர்வம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். தினமும் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றனர், இறப்பு சதவிகிதம் என்ன, உலக நாடுகளின் நிலை என்ன என அவ்வப்போது பார்த்துக்கொள்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். மக்களின் இந்த ஆர்வத்தை மட்டும் நம்பி பல போலி இணையதளங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.


இணையதளங்கள்

கொரோனாவின் பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த இணையதளங்கள் உங்களிடமிருந்து முக்கிய தகவல்களைத் திருடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். coronavirusstatus.space, coronavirus-map.com, blogcoronacl.canalcero.digital, coronavirus.zone என இப்படிப் பல மோசடி இணையதளங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், தினமும் இது போன்ற இணையதளங்கள் நூற்றுக்கணக்கில் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இது ஒருவகை என்றால் மாஸ்க், கிருமி நாசினி விற்பதுபோல சில போலி இணையதளங்கள் இருக்கின்றன. இதுபோன்ற இணையதளங்களில் சிலர் பணமும் இழந்துள்ளனர். இது இல்லாமல் கொரோனா நிதி, அரசு இணையதளங்கள் போன்ற வேடங்கள் அணிந்தும் இருக்கும் மோசடி இணையதளங்கள்.

என்ன செய்வது?

இணையதள முகவரியைப் பாருங்கள்!

மோசடி இணையதளங்கள் முடிந்தவரை அதிகாரபூர்வ பக்கங்கள் போல இருக்க வேண்டும் என முயற்சி செய்யும். அப்போதுதான் அதிக அளவில் மக்களை வர வைக்க முடியும். இணையதள முகவரியிலேயே (URL) இது பிரதிபலிக்கும். .com, .org போன்ற டொமைன்கள் இல்லாமல் com.co, .ma, .co போன்ற டொமைன்களில் முடியும் இணையதளங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் இந்திய அரசு இணையதளங்கள் ____.gov.in என்றே இருக்கும். இது இல்லாமல் ___gov.com என இணையதள பெயரிலேயே gov என்று வைத்து ஏமாற்றப் பார்ப்பார்கள்.

அடிச்சு கேட்டாலும் சொல்லிறாதீங்க!Vhising அழைப்புகள்

இதை Vhising மோசடிகள் என்று அழைப்பர். இது இந்த நேரத்தில் 50% வரை உயர்ந்துள்ளதாகத் தொழில் நிறுவனங்களுக்கு மோசடி மொபைல் அழைப்புகளை ட்ராக் செய்யும் அமெரிக்க நிறுவனமான NextCaller தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் மட்டுமல்ல வங்கிகளுக்கே அழைத்து மோசடி செய்யப் பார்க்கின்றன சில கும்பல்கள். அமெரிக்காவில் ஒரு முக்கிய வங்கிக்கு மட்டும் ஒரு மணிநேரத்தில் சுமார் 6,000 மோசடி அழைப்புகள் வருகிறதாம்.


Vhising scams

இதுபோன்ற மோசடிகள் ஏற்கெனவே இந்தியாவில் அதிகம். வங்கி உங்களுக்குச் சிறப்புப் பரிசு ஒன்று தருகிறது. உங்கள் கார்டு எக்ஸ்பயர் ஆகிவிட்டது என வங்கியிலிருந்து அழைப்பது போலவே பேசி உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் கார்டு விவரங்களைக் கேட்டறிந்து பணம் பறிப்பதற்கென்றே சில குழுக்கள், ஏன் சில கிராமங்களே வட இந்தியாவில் உண்டு. இப்போது பொது முடக்கம் என்பதால் இது இன்னும் அதிகம் நடக்கிறதாம். EMI-யை ரத்து செய்ய வேண்டுமா, கொரோனா கால சிறப்பு கடன் வேண்டுமா என இப்போது புது புது காரணங்கள் சொல்லி அதையே செய்கின்றனர்.

என்ன செய்வது?

முக்கிய தகவல்களைப் பகிர வேண்டாம்.

வங்கிக் கணக்கு விவரங்கள், கார்டு நம்பர், பின் நம்பர் போன்ற முக்கியமான தகவல்களை நீங்களாகச் சொல்லாமல் இருந்தாலே இதுபோன்ற மோசடிகளிலிருந்து தப்பித்துவிட முடியும்.

சந்தேகத்திற்குரிய அழைப்புகளை ரிப்போர்ட் செய்யுங்கள்!

இதுபோன்ற தகவல்களைக் கேட்கும் சந்தேகத்திற்குரிய அழைப்புகளை அந்த அந்த வங்கிகளிடம் ரிப்போர்ட் செய்யலாம். இதன் மூலம் மேலும் மோசடிகள் நடக்காமல் தடுக்க முடியும்.

கண்டதை ஓபன் செய்யாதீர்கள்!மெயில் & எஸ்.எம்.எஸ்

`மெயில் எல்லாம் இப்போ ஆபீஸ்க்கு மட்டும்தான்’ என்ற மனநிலை பலருக்கும் வந்துவிட்டாலும் மிக அதிகமான மோசடிகள் மெயில்களில்தான் நடக்கிறதாம். வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வரும் விஷயங்களைவிட மெயிலில் வருவதை மக்கள் எளிதில் நம்பிவிடுகின்றன எனச் சொல்கிறது ஒரு சர்வே. இது அதிகாரபூர்வ பயன்பாட்டுக்கு மட்டுமே மெயிலை பயன்படுத்திப் பழகிவிட்டதால்கூட இருக்கலாம்.


மெயில்

இதனால் உலக சுகாதார அமைப்பின் விழிப்புணர்வு மெயில் போலவோ, கொரோனா நிதி கேட்டோ பல மெயில்களும் எஸ்.எம்.எஸ்களும் மக்களுக்கு அனுப்பப்படுகின்றன. தகவல் மற்றும் பணம் திருடப்படுகின்றன.

CBI சமீபத்தில் மாநில காவல்துறைகளுக்கு, Cerberus என்னும் ட்ரோஜன் வைரஸ் மூலம் மக்களுக்கு COVID-19 தொடர்புடைய லிங்க்குகள் உதவியுடன் எஸ்.எம்.எஸ்கள் அனுப்பப்படுவதாக எச்சரிக்கை விடுத்தது. இந்த வைரஸ் OTP மற்றும் பிற முக்கிய வங்கி தகவல்களையும்கூட திருட வாய்ப்புள்ளதாம்.

என்ன செய்வது?

அனுப்பியவரின் மெயில் ஐடியைத் தெளிவாகப் பாருங்கள்!

இணையதள முகவரியைப் போன்று இது போன்ற மெயில்கள் அனுப்பப்படும் மெயில் ஐடிகளையும் செக் செய்ய வேண்டும். தோற்றத்தில் அப்படியே அமேசானிலிருந்து வருவதுபோல, உலக சுகாதார அமைப்பிடமிருந்து வருவதுபோல இருக்கும். அதனால் லுக்கில் விழுந்துவிட வேண்டாம்.

எஸ்.எம்.எஸ் லிங்க்குகளை கிளிக் செய்யாதீர்கள்!

இதுபோன்ற மெயில்களை ஓப்பன் செய்வதில்கூட பெரிய சிக்கல்கள் இல்லை. ஆனால், அதில் இணைக்கப்பட்டிருக்கும் அட்டாச்மென்ட்களையும் லிங்க்குகளையும் எக்காரணத்துக்காகவும் ஓப்பன் செய்ய வேண்டாம். இவற்றிலிருந்துதான் மால்வேர்கள் இன்ஸ்டால் ஆகின்றன.

கூடுதல் கவனம் வேணும் பாஸ்!வொர்க் ஃப்ரம் ஹோம்

இந்தப் பொது முடக்க நேரத்தில் பெரும்பாலான நிறுவனங்களில் `வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில்தான் ஊழியர்கள் வேலை பார்த்துவருகின்றனர். ஊழியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலிருந்து வேலைபார்க்கும் சூழலுக்கு திடீரென மாறிவிட்டதால் போதிய பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றன நிறுவனங்கள். இதனால் இந்த நேரத்தில் அந்த நிறுவனங்களும் இந்த சைபர் மோசடி கும்பல்களால் குறிவைக்கப்படுகின்றன. இதனால் நீங்கள் `வொர்க் ஃப்ரம் ஹோம்’ ஊழியர் என்றால் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. உங்கள் தகவல் மட்டுமல்லாமல் நிறுவனத்தின் தகவல்களும் பறிபோக வாய்ப்புள்ளது.


வொர்க் ஃப்ரம் ஹோம்

என்ன செய்வது?

மேலே குறிப்பிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும்!

மெயில், இணையதள மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருங்கள். முடிந்த வரை அலுவலக கணினியைப் பாதுகாப்பாக அலுவலகப் பணி மட்டும் பார்ப்பதற்குப் பயன்படுத்துங்கள். பொழுதுபோக்கிற்கும் அதே கணினியைப் பயன்படுத்துவது சிக்கலாக முடியலாம்.

நிறுவனம் கூறும் நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்!

ஒவ்வொரு நிறுவனமும் (குறிப்பாக ஐடி நிறுவனங்கள்) என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என `வொர்க் ஃப்ரம் ஹோம்’ பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டிருக்கும். அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். இதுபோன்ற நேரங்களில் நிறுவனத்தின் தகவல் கசிவுக்கு நீங்கள் காரணம் என்று தெரிந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

கொரோனா காலத்தில் என்றில்லை எப்போதுமே இணையத்தைப் பொறுத்தவரையில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். வள்ளுவர் அன்றே சொன்னதுதான்,

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.”

இந்தக் குறள் இன்றைய டெக்னாலஜி யுகத்துக்கும் பொருந்தும்.

%d bloggers like this: