கொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு?

மத்திய அரசின் முடிவுக்குத் தலையசைக்கவே வாய்ப்புகள் அதிகம். தற்போது தமிழகத்தில் சென்னை நீங்கலாக, பிற மாவட்டங்கள் இயல்பு நிலையில் இருக்கின்றன.

‘‘வெயில் பின்னியெடுக்கிறது… சென்னையில் அனல் காற்று வாட்டி வதைக்கிறது. ஸ்ஸ்ஸ்…’’ என்று வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்கு நேரில் ஆஜரானார் கழுகார். அவருக்கு ஜில்லென்ற தர்பூசணி ஜூஸைக் கொடுத்துவிட்டு, பருகி முடிக்கும் வரை காத்திருந்தோம். “தேவாமிர்தம்… தேவாமிர்தம்…” என்று நன்றி சொன்னவரிடம், ‘‘சீனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறதே..?’’ என்று செய்திக்குள் இழுத்தோம்.

‘‘கொரோனா விவகாரத்தில் உலகமே சீனாவைச் சீண்டிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், சத்தமின்றி இந்திய எல்லையில் படைகளைக் குவித்திருக்கிறது சீனா. தகவல் வந்ததும், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் ஏற்கெனவே ஆட்டம் கண்டுவரும் நிலையில், சீனாவின் மோதல் போக்கு ஒட்டுமொத்த தேசத்தையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. அதேசமயம் சீனா, இந்தியாவுடன் போர் புரியாது என்பதை விளக்கி இந்த இதழில் இடம்பெற்றுள்ள தனிக் கட்டுரையையும் படித்தேன். காரணங்கள் பொருத்தமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன.”

கொரோனா விடாது போலிருக்கிறதே!”

“ஆமாம்… ‘பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் ஊரடங்கைத் தளர்த்தியதே கொரோனா தொற்று வெகுவாகப் பரவியதற்கான காரணம்’ என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்திருக் கிறது. இதனால், மே 29-ம் தேதிக்குப் பிறகு என்ன செய்யலாம் என்று மீண்டும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறாராம் பிரதமர்.’’

‘‘தமிழ்நாட்டின் நிலைப்பாடு?’’

‘‘மத்திய அரசின் முடிவுக்குத் தலையசைக்கவே வாய்ப்புகள் அதிகம். தற்போது தமிழகத்தில் சென்னை நீங்கலாக, பிற மாவட்டங்கள் இயல்பு நிலையில் இருக்கின்றன. கொங்கு மண்டலம், பச்சை மண்டலமா என்பதில் சர்ச்சை நீடிப்பது தனி அரசியல். இந்த நிலையில் சென்னையில் தளர்வு கொண்டுவந்தால் நிலைமை மேலும் சிக்கலாகும் என்று அரசு அஞ்சுகிறது.’’

‘‘பரிசோதனைகளைக் குறைத்து வருவதாக சுகாதாரத்துறைமீது மீண்டும் புகார் கிளம்புகிறதே?’’

‘‘ஆமாம். சமீபத்தில் கீழ்ப்பாக்கத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரின் வீட்டில் இரண்டு பேர் அடுத்தடுத்து மரணமடைந்தார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகமடைந்த குடும்பத்தினர், தங்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறைக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், மூன்று நாள்களாகியும் அதிகாரிகளிட மிருந்து தகவல் வரவில்லை. அச்சமடைந்த அந்த ஓய்வுபெற்ற அதிகாரி, தனது டெல்லி தொடர்பில் தகவலை பாஸ் செய்திருக்கிறார். அங்கிருந்து முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் சென்று, அதன் பிறகே அந்த வீட்டுக்கு அதிகாரிகள் வந்து ஆய்வு செய்துள்ளனர். அதில் ஆறு பேருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. `இறந்த இருவரும் கொரோனாவில் இறந்தார்கள்’ என்று சொல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம். இதுபோல இன்னும் எத்தனை குடும்பங்கள் பரிசோதனை செய்யப்படாமல் இருக்கின்றனவோ?’’

‘‘கொடுமை… கொடுமை… கொரோனா மரணங்களை மறைத்து என்னதான் சாதிக்கப்போகிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி?’’

‘‘தற்போது அவரது ஒரே கவலை சசிகலாவின் விடுதலைதான். அவர் வெளியே வந்த பிறகு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற பதற்றத்தில்தான் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததை எடப்பாடி அரசு ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லை. தவிர, போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு வருமான வரித் துறையின் பட்டியலிலும் இந்த வீடு இடம்பெற்றுள்ளது. நாளை வருமான வரித்துறை தரப்பிலிருந்தும் சிக்கல்கள் வரலாம். இதையெல்லாம் கவனிக்காமல் அவசரகதியில் அரசாணை வெளியிட்டுவிட்டதாகச் சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள்!’’

என்.ஆர்.இளங்கோ ஆகியோர் டி.ஜி.பி-யான திரிபாதியைப் பார்த்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘தி.மு.க-வினர்மீது தேவையில்லாமல் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை முடித்துக்கொள்ளும்படி அந்தந்தக் காவல்நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.’’

“தலைமைச் செயலாளருக்கு பணி நீட்டிப்பு உண்டா?’’

‘‘ஜூலை மாதத்துடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. அவருடைய பதவியை நீட்டிக்க எடப்பாடி தரப்பில் விரும்பினாலும், அதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவை. இதற்காக, தமிழக அரசும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி யுள்ளதாம். அங்கிருந்து வரும் பதிலைப் பொறுத்தே அவரது பதவி நீட்டிப்பு இருக்கும் என்கிறார்கள்.’’

‘‘கொரோனா ஊரடங்கிலும் தமிழக அரசு 17 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறதே?’’

‘‘ஏற்கெனவே தொழில் முதலீட்டு மாநாட்டிலும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள் தொழிற்சாலை களை ஆரம்பித்தால் மட்டுமே அது எடப்பாடி அரசின் சாதனையாகப் பார்க்கப்படும். ஆனால், பல ஒப்பந்தங்கள் வெறும் பேப்பருடன் நின்று விட்டதாக முணுமுணுக்கிறார்கள் தமிழக தொழில்துறை அதிகாரிகள்.’’

“தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் மூடப்போவதாக ஒரு தகவல் வலம்வருகிறதே… உண்மையா?”

“எனக்கும் அப்படி ஒரு தகவல் வந்தது. டாஸ்மாக்கில் மேலிடம் தொடங்கி கீழிடம்வரை சோர்ஸ்களிடம் விசாரித்தபோது ‘நிச்சயம் அப்படி எதுவும் இல்லை’ என்றே சொல்கிறார்கள். ஆனால், அரசியலில் கடைசி நிமிடத்தில் எதுவும் நடக்கலாம் அல்லவா…” என்றபடி சிறகுகளை விரித்துப் பறந்தார் கழுகார்.

%d bloggers like this: