வெட்டுக்கிளிகள் பெயரில் ‘கட்டிங்’…

 

கையில் நுங்குடன் வந்தமர்ந்தார் கழுகார். ‘‘என்ன திடீர் சர்ப்ரைஸ்…’’ என்றபடி நுங்கைப் பதம் பார்க்கத் தொடங்கியதும், ‘‘ஓ.பி.எஸ் இதைவிட சர்ப்ரைஸ் அளித்திருக்கிறாரே…’’ என்று புன்முறுவலுடன் செய்திக்குள் தாவினார் கழுகார்.‘‘ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவிடமாக மாற்ற தமிழக அரசு தீவிரம் காட்டுகிறது. `தீபா, தீபக்தான் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்…’ என நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செல்லவிருப்ப தாகவும்

தகவல். இது தொடர்பான ஆலோசனையின்போது பன்னீர் தரப்பில், ‘அம்மா பெயரைச் சொல்லி பல பேரும் பல கோடி ரூபாய் சம்பாதிச்சுட்டுப் போயிட்டாங்க. அம்மா சொத்துக்கு அவர் ரத்த சொந்தங்கள்தானே உரிமை கேக்குறாங்க… எடுத்துக்கிட்டுப் போகட்டுமே… எதுக்கு மேல்முறையீடு’ என்றாராம். பன்னீரின் பெருந்தன்மையைப் பார்த்து, எடப்பாடியே ஆச்சர்யத்தில் அமைதியாகி விட்டதாகத் தகவல். அப்புறம்தான் முதல்வரிடம், ‘யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். சிறுதுரும்பும் நமக்கு எதிர்காலத்தில் உதவலாம்’ என்று பன்னீர் தரப்பில் ஆலோசனையும் கொடுக்கப்பட்டதாம். எனவே, விரைவில் ஜெ. நினைவு இல்லம் தொடர்பாக தீபா, தீபக்கிடம் எடப்பாடி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.’’

 

‘‘தமிழகத்துக்குள் பாலைவன வெட்டுக்கிளிப் படையெடுப்பு நடக்குமா?”

‘‘பெரும்பாலும் வராது என்கிறார்கள். ஆனால், வெட்டுக்கிளியை வைத்து ‘கட்டிங்’ போடும் அரசியல் தொடங்கிவிட்டது. பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் நுழைந்தால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க சம்பந்தப்பட்ட துறையின் மூத்த வாரிசை, மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்.’’

“வாரிசுடன் எதற்கு ஆலோசனை?’’

‘‘என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்… யார் யாருக்கு டெண்டர் விடுவது என்று தீர்மானிக்க வேண்டாமா… பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்தால் அவற்றை அழிக்கத் தேவைப்படும் மருந்து, சிறப்பு உபகரணங்கள் என வெட்டுக்கிளிகள் பட்ஜெட்டே நூறு கோடி ரூபாயை நெருங்குகிறது. இந்த டெண்டர்களை வாரிசின் பினாமி நிறுவனங்களுக்கு எப்படிப் பிரித்தளிப்பது என்று ஆலோசிக்கத்தான் துறையின் மூத்த அதிகாரி டெல்டாவில் மூன்று நாள்கள் மேலிடத்தின் வாரிசுடன் முகாமிட்டாராம்.’’

‘‘அடேங்கப்பா… தமிழகத்துக்குள் ஏற்கெனவே வெட்டுக்கிளிகள் ஊடுருவிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகினவே!’’

“ `அவை உள்ளூர் வெட்டுக்கிளிகள்’ என அரசு தெளிவுபடுத்திவிட்டது. கிருஷ்ணகிரி, நீலகிரி, கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங் களில் இந்த வகை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தெரிந்திருக்கிறது. இவற்றின் இனப்பெருக்கமும் அபரிமிதமாக அதிகரித்திருக்கிறதாம். குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் சூழலில், உள்ளூர் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு உண்டான எந்தத் திட்டமும் அரசிடம் இல்லை என்கிறார்கள்.’’

“அட கொடுமையே!’’

“ ‘இன்று வாழை இலையை உண்ணும் வெட்டுக்கிளிகள், நாளை பிற பயிர்களுக்குத் தாவினால் நம்மால் சமாளிக்க முடியுமா…’ என வேளாண்மைத்துறை அதிகாரிகளே அஞ்சுகிறார்கள். ஆனால், ஆள்பவர்களுக்குத்தான் எந்தப் பதற்றமும் இல்லை. `மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த வேண்டும்’ என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிரமான திட்டம். படைப்புழுவுக்கு மருந்தடிப்பதாக ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் போலி பில் போட்டு, அவர் தரப்புக்கே ‘மருந்து’ அடித்துள்ளது சம்பந்தப்பட்ட துறையின் மேலிட வாரிசு. இப்போது ராஜஸ்தான் வெட்டுக்கிளிகளைக் காட்டி இந்த ‘வாரிசு கிளி’ செமயாக ‘கட்டிங்’ பார்க்கத் திட்ட மிட்டிருப்பதாகக் கொதிக்கி றார்கள் வேளாண்துறை யிலிருக்கும் நேர்மையான அதிகாரிகள்.”

‘‘கொரோனாவைவிடக் கொடுமையாக இருக்கிறதே!’’

“தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறையில் பணியிட மாறுதலுக்கு ஆண்டுதோறும் ஆன்லைன் கவுன்சலிங் நடைபெறும். இந்த ஆண்டில் இடமாறுதல் தேவைப்படும் மருத்துவர்கள் மட்டும் விண்ணப்பிக்கும்படி அரசு அறிவுறுத்தியது. அப்படி விண்ணப்பித்தவர்களிடம் சென்னை நகருக்குள்ளான இடமாறுதலுக்கு எட்டு முதல் பத்து லட்சம் ரூபாயும், சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளுக்கு ஆறு முதல் எட்டு லட்சம் ரூபாயும் விலை நிர்ணயித்து 230 பேரிடம் வசூல் வேட்டையையும் முடிந்துவிட்டார்களாம். துறையின் முக்கியமான உதவியாளர்தான் இந்தப் பேரத்தை கச்சிதமாக முடித்து இடமாறுதல் உத்தரவையும் தயார் செய்திருக்கிறாராம்.’’

மிஸ்டர் கழுகு: வெட்டுக்கிளிகள் பெயரில் ‘கட்டிங்’...

‘‘பெரிய கொள்ளைதான். சரி, தி.மு.க தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்ததாம்?’’

‘‘கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. ‘பிற்படுத்தப்பட்டோர் விஷயத்தில் நடந்ததுபோன்ற சிக்கல் நாளை பட்டியல் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டிலும் வரலாம். அதற்கு முன்னதாகச் சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்’ என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியதை மற்ற தலைவர்களும் ஆமோதித்துள்ளனர். கடந்த முறை நடந்த கூட்டத்தில், ‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் யாரையும் கலந்து ஆலோசிக்காமலேயே தீர்மானங்களை தயார் செய்துவிட்டார்’ என்று கூட்டணித் தலைவர்களிடம் குமுறல் இருந்தது. இந்த முறை கூட்டத்தில் அனைவரும் பேசிய பிறகே தீர்மானங்களை ஸ்டாலின் இறுதி செய்திருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமல்லாமல், `கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும்’ என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஜூன் 6-ம் தேதிக்குப் பிறகு அடுத்த கட்டமாகக் கூட்டம் நடத்தவும் முடிவெடுத்திருக்கிறார்கள்.”

“ம்ம்… தி.மு.க-வுக்கு எதிராக ஆளுங்கட்சி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துவிட்டதே?”

‘‘ `பட்டியலின மக்களை தி.மு.க தொடர்ச்சியாக விமர்சிக்கிறது’ எனக் கண்டனம் தெரிவித்து மாவட்டம்வாரியாக தி.மு.க-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு செய்து களத்தில் இறங்கிவிட்டது அ.தி.மு.க. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க-வின் பட்டியலின வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்று பா.ஜ.க-வும் திட்டமிடுகிறது. அ.தி.மு.க-வும் புது யுக்தி களுடன் தயாராக இருக்கிறது. தயாநிதி மாறன் பேச்சு, ஆர்.எஸ்.பாரதி பேச்சுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, மக்களிடையே தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம்.’’

ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் - ஸ்டாலின்

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் – ஸ்டாலின்

‘‘ஓஹோ!’’

‘‘தி.மு.க தலைவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை தீவிரப்படுத்தவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறாராம். அதனால்தான் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி, கோவை தி.மு.கழக எம்.எல்.ஏ-வான கார்த்திக், கோவை தெற்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் தென்றல் செல்வராஜ் என அடுத்தடுத்து தி.மு.க–வினர்மீது சட்டரீதியான நடவடிக்கை பாய்கின்றன. இது இன்னும் நீளுமாம்.’’

‘‘சரியான போட்டிதான்.’’

‘‘சமீபத்தில் ஸ்டாலினிடம் ஐபேக் நிறுவனத்தினர், ‘தி.மு.க-வில் தற்போது மாவட்டச் செயலாளராக இருக்கும் சிலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை; அவர்களை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்பது ஆபத்து’ என்று ஒரு பட்டியலைக் கொடுத்திருக் கிறார்கள். அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு மாற்றத்துக்குத் தயாராகிவிட்டாராம் ஸ்டாலின். மற்றொருபுறம் மாவட்ட வாரியாக தெலுங்கு பேசும் நிர்வாகி ஒருவரையும் பொறுப் புக்குக் கொண்டுவர தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது என்கிறார்கள்.”

‘‘இதென்ன புதுக்கதை?’’

‘‘தெலுங்கு பேசும் மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகத் தான் இந்தத் திட்டமாம். அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டப் பொறுப்பில் தெலுங்கு பேசும் நபர் ஒருவர் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று பல மாவட்டச் செயலாளர் களுக்கு வாய்மொழி உத்தரவு போயிருக்கிறதாம். இந்தத் திட்டத்தின் பின்னணியில் எ.வ.வேலு இருப்பதாகக் கட்சியினர் நினைக்கிறார்கள்.’’

‘‘மத்திய அமைச்சரவையில் மாற்றம் வரும் என்கிறார்களே?’’

‘‘அப்படியொரு தகவல் டெல்லியில் வட்டமடித்தது. கொரோனாவுக்கு முன்பிருந்தே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதை வைத்து நிதியமைச்சர் மாற்றம் எனத் தனக்கு எதிரானவர்கள் ஊடகங்களில் செய்திகளைக் கசியவிடுவதாக நிர்மலா தரப்பு நினைக்கிறது. ஆனால், இப்போதைக்கு அமைச்சரவையில் எந்த மாற்றமும் நடைபெறாது என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.’’

“பா.ம.க-வுக்குள் புகைச்சலோ?’’

“ஆமாம்… `நாளுக்கொரு அறிக்கைவிடும் மருத்துவர் ராமதாஸ், கொரோனா விவகாரத்தில் அ.தி.மு.க அரசை இதுவரை ஏன் விமர்சிக்கவில்லை?’ என்று அவர் கட்சிக்குள் இருப்பவர் களே வருத்தப்பட ஆரம்பித்து விட்டார்களாம். காடுவெட்டி குரு மகன்மீது நடந்த தாக்குதலும் பா.ம.க-வினரிடம் மனக் கொதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறதாம்.’’

‘‘உளவுத்துறையில் மாற்றம் நிகழ்ந்துள்ளதே…’’

‘‘ஆமாம். உளவுத்துறையில் நடந்த பாலிடிக்ஸால் அங்கேயிருந்து சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட ஈஸ்வரமூர்த்தி, மீண்டும் உளவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுப்பிரிவில் நீண்ட அனுபவம் பெற்றவரான இவர், உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவின் ஐ.ஜி பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்துவந்தார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே எஞ்சியிருக்கும் நிலையில், ஈஸ்வரமூர்த்தி உளவுத்துறையின் தலைமையிடத்துக்கு நியமிக்கப்பட்டது அரசியல் அரங்கில் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.”

‘‘ஜூன் 1-ம் தேதி மாலை, சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக இருந்த நாகராஜனை திடீரென மாற்றிவிட்டார்களே?”

“ஆமாம், `நேர்மையான அதிகாரி’ என்கிறார்கள். தற்போது சுகாதாரத்துறையில் நடக்கும் சில விவகாரங்களை எதிர்த்து கேள்வி கேட்டாராம். `அதனாலேயே அவரது பதவிக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது’ என்கிறார்கள். அவரை தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துக்கு மாற்றிவிட்டு, தமிழ்நாடு சர்க்கரைக் கழக கூடுதல் இயக்குநராக இருந்த அஜய் யாதவ் என்பவரை சுகாதாரத்துறை திட்ட இயக்குநராக நியமித்திருக்கிறார்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: