அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை…” – எடப்பாடி எடுக்கப் போகும் பிரம்மாஸ்திரம்!

தேர்தல் அரசியலுக்கு எடப்பாடி தயாராகிவிட்டார். இதுவரை அமைச்சர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுவந்தவர் இப்போது ஆர்டர் போட ஆரம்பித்துள்ளார். இனி அமைச்சர்களுக்கும்

கட்சியினருக்கும் ஆட்டம் காட்டப் போகிறார்” என்று பொடி வைத்துப் பேச ஆரம்பித்துள்ளார்கள் அ.தி.மு.க வின் மூத்த நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமி

கொரோனாவின் தாண்டவம் சென்னையில் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், ஐந்து அமைச்சர்களை கொரோனா தடுப்புப் பணிக்காக நியமித்துள்ளார் எடப்பாடி.

வேலுமணி, விஜயபாஸ்கர், காமராஜ், செல்லுார் ராஜீ, உதயகுமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே களப்பணியில் முன்னிலையில் இருக்கிறார்கள். பல அமைச்சர்கள் தொகுதிக்குள் தலைகாட்டுவதோடு சரி, அவர்களது செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அதேபோல் தி.மு.க ஒன்பது ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த போதும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தினைச் சிறப்பாகப் பல மாவட்டங்களில் செயல்படுத்தியுள்ளனர். அதற்கு மக்களிடமும் கணிசமான வரவேற்பும் இருந்துள்ளதை உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது.


எடப்பாடி அமைச்சரவை

ஆனால், அதற்கு நேர்மாறாக ஆளும்கட்சி தரப்பில் பல மாவட்டங்களில் நிவாரணப்பணிகள் சொல்லிக்கொள்ளும்படி நடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. நான்கு ஆண்டுகளாகப் பதவி சுகத்தில் இருந்துகொண்டே கல்லா கட்டியவர்கள், ஒரு கடினமான நேரத்தில், கட்சிக்குக் கைகொடுக்கவில்லை என்கிற வருத்தம் எடப்பாடியிடம் உள்ளது. மேலும் பல மாவட்டச் செயலாளர்கள் “நம்மை யார் மாற்றப்போகிறார்கள்” என்கிற தைரியத்தில் உலா வந்துகொண்டுவந்துள்ளனர். குறிப்பாகக் கீழ்நிலையில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு கமிஷன் தொகையைப் பகிர்ந்தளிப்பதில் கூட மாவட்டச் செயலாளர்கள் அக்கறை காட்டுவதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வியைத் தழுவியதற்கு இதுவும் ஒருகாரணம். மற்றொருபுறம், தென் மாவட்டங்களில் இப்போது உள்ள பல மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால் இவர்கள் போக்கு என்ன என்பதையும் கணிக்க முடியாது.

ஓ.பி.எஸ் அணியிலிருந்து வந்தவர்களில் பலர் டம்மியாக அமரவைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தன்வசப்படுத்தினால் பன்னீரைத் தன் பிடிக்குள் கொண்டு வரலாம் என்றும் கணக்குப் போடுகிறார் எடப்பாடி. இதையெல்லாம் மனதில் வைத்து புதிய கட்டமைப்பைக் கட்சிக்குள் உருவாக்கும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். கொரோனா தாக்கம் குறைந்த பிறகு கொஞ்சம், கொஞ்சமாக இந்த வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. குறிப்பாகக் கட்சியில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றம். அதோடு சில நிர்வாக மாற்றங்களையும் கொண்டுவர இருக்கிறார்கள். குறிப்பாக ஒருவரைப் பதவியிலிருந்து எடுத்தால் அந்தப் பதவிக்கு அடுத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி ஏற்படும். சொன்னதைக் கேட்டுக்கொண்டு போகும் நிலை இப்போது அ.தி.மு.க வில் இல்லை.


சசிகலா, எடப்பாடி பழனிசாமி

இப்போது அ.தி.மு.க வின் மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 56. இந்த எண்ணிக்கையை முதலில் அதிகரிக்கத் திட்டமிடுகிறார்கள். சென்னையைப் பொறுத்தவரை இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற திட்டத்தை இப்போது முன்வைத்துள்ளார்கள். அதே போல் பெரிய மாவட்டங்களிலும், இந்த முறையைக் கொண்டுவர உள்ளனர். சிறிய மாவட்டங்களில் மூன்று தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பட்டியலைத் தயார் செய்ய இருக்கிறார்கள். பல மூத்த அமைச்சர்கள் தங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும் என்றும் சொல்லிவருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள், சமுதாய ரீதியாக வலுவாக இருப்பவர்கள் எனப் பலரும் தேர்தல் நேரத்தில் தனக்குச் சாதகமாகச் செயல்பட வேண்டும் என்று எடப்பாடி எண்ணுகிறார். எனவே அவர்களைக் குளிர்விக்க இந்தத் திட்டம் தனக்குக் கைகொடுக்கும் என்று நினைக்கிறார்.

அதேபோல், எந்தக் கட்சிப் பதவியும் கடந்த நான்கு ஆண்டுகளாக கிடைக்காமல் விரக்தியில் இருப்பவர்கள், தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராகத் திரும்பிவிடக்கூடாது என்பதால், மாவட்டங்களை அதிகப்படுத்தி அதிருப்தியாளர்களுக்கு ஆளுக்கு ஒருபதவி என்று கொடுத்து தி.மு.க பாணியில் கட்சியைத் தன்வசப்படுத்தும் திட்டம் இப்போது எடப்பாடியிடம் இருக்கிறது. சென்னையில் மட்டும் எட்டு மாவட்டச் செயலாளர்களை உருவாக்க நினைக்கிறார். இந்தத் தகவல் லீக்கானதுமே பலரும் தங்களுக்குப் பதவிவேண்டும் என்று எடப்பாடியைச் சுற்ற ஆரம்பித்துள்ளனர். மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்தால் பலருக்கும் மாவட்டச் செயலாளர் வாய்ப்பு கிடைக்கும். இதுவொரு வகையில் நல்லது. மற்றொன்று அதிகாரம் பரவலாக்கப்படும்போது குறிப்பிட்ட நபர்களின் ஆதிக்கம் கட்சிக்குள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


அ.தி.மு.க. தலைமை அலுவலகம்

இதே போல் விரைவில் அமைச்சரவை மாற்றத்தினை செய்ய உள்ளார் முதல்வர் எடப்பாடி. இந்த முடிவு எடப்பாடிக்குக் கடும் சிக்கலை ஏற்படுத்தினாலும் துணிச்சலாக இந்த முடிவை எடுக்கத் துணிந்துள்ளார் அவர். ராஜேந்திர பாலாஜி, கே.சி.கருப்பண்ணன், எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர் உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், விஜயபாஸ்கர் சமீபத்தில் முதல்வருடன் இணக்கமாகப் போனதால் பட்டியலில் அவர் இருக்கப்போவதில்லை. முதலில் கட்சி ரீதியாக மாற்றத்தைச் செய்தபிறகு அமைச்சர்களை மாற்றினால் கட்சிக்குள் கலகம் செய்ய முடியாது என்றும் எடப்பாடி கணக்குப் போடுகிறார்.

சமீபத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் எடப்பாடி வீட்டுக்குச் சென்று “துறையின் அமைச்சர் நான்தான், ஆனால் என்னைக் கேட்டு எந்த விஷயமும் நடக்கவில்லை எல்லாம் உங்கள் வீட்டில்தான் முடிவாகிறது” என்று எகிறி உள்ளார். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் வாரிசுதான் துறையின் அத்தனை டீலிங்கையும் செய்துவருகிறார். அதிகாரிகள் அமைச்சருக்குத் தரும் மரியாதையை விட, அவரின் வாரிசுக்குத் தரும் மரியாதை அதிகம். அதேபோல் டெல்டா மாவட்டத்திலும் அமைச்சரின் வாரிசு குறித்து சர்ச்சை நீடித்துவருகிறது. இதுபோன்ற அமைச்சர்களை வைத்திருப்பது கட்சிக்கும், தனக்கும் ஆபத்து என்று நினைக்கிறார் எடப்பாடி. மற்றொருபுறம் கட்சியின் மூத்த தலைவரான வைத்தியலிங்கம் தொடர்ந்து தன்னை எடப்பாடி புறக்கணித்து வருகிறார் என்று கடுப்பில் இருக்கிறார். எனவே வைத்தியலிங்கத்தின் ஆள்களுக்குப் பதவியைக் கொடுத்து சரி கட்டவும் நினைக்கிறார்.


அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள்

இப்படி கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் சில அதிரடிகளை எடுத்தால் மட்டுமே கட்சியைத் தேர்தலுக்கு முன்பு பலப்படுத்தமுடியும். சசிகலா வந்தாலும் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று எடப்பாடி நினைப்பதால் ஆகஸ்ட் மாதத்துக்கு முன்பாக இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த முடிவெடுத்துவிட்டார். மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு வருபவர்களையே தேர்தல் நேரத்தில் வேட்பாளராகவும் களத்தில் இறக்க வாய்ப்பு இருப்பதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் செல்வாக்கு உள்ளவர்களின் பட்டியலை முதலில் தயார் செய்ய உள்ளனர். கிட்டத்தட்ட ஜெயலலிதா பாலிசியை இந்த முறை எடப்பாடி முழுமையாகக் கையில் எடுப்பார். ஆனால் இதற்கு மூத்த அமைச்சர்களும், ஓ.பன்னீர்செல்வமும் எந்த வகையில் ஒத்துழைப்பு கொடுப்பார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

%d bloggers like this: