சசிகலா விரைவில் ரீலீஸ்.. கச்சிதமாக காய் நகர்த்திய டிடிவி.. சீனுக்கு வந்த திவாகரன்..! கலகலக்கும் அதிமுக..!

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா மிக விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவது உறுதியாகியுள்ள நிலையில் மன்னார்குடி திவாகரன் மறுபடியும் தனது அரசியல் தொடர்புகளை புதுப்பிக்க ஆரம்பித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியல் களம் தலை கீழாக மாறியது. சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சரானார். சசிகலா சிறை சென்றார். கைக்கு கிடைத்த அதிமுகவை கை நழுவவிட்டார் தினகரன். அதிமுக ஓபிஎஸ் – ஈபிஎஸ் வசமானது. ஆனாலும் கூட நாடாளுமன்ற தேர்தலில் படு தோல்வி கிடைத்தது. மத்திய அரசின் உதவியுடன் இடைத்தேர்தல்களில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவிற்கு எதிராகவோ, எடப்பாடிக்கு எதிராகவோ தற்போது வரை அவர் எந்த நடவடிக்கையிலும் இறங்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அவரை ஓபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து அகற்றினர். ஆனாலும் அதிமுகவில் இருந்து சசிகலாவை முற்றிலுமாக தற்போது வரை நீக்கவில்லை. இந்த சூழலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை தமிழகம் எதிர்கொள்ள உள்ளது. இதே போல் சசிகலாவின் தண்டனை காலமும் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நிறைவடைய இருந்தது. ஆனால் நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதியாகிவிட்டது.

இதற்கான பணிகளில் கடந்த மூன்று மாதங்களாகவே டிடிவி தினகரன் தீவிரம் காட்டி வந்தார். கொரோனா வேகமாக பரவும் சூழலில் சிறையில் உள்ள கைதிகளை முடிந்த அளவிற்கு ரிலீஸ் செய்ய அனைத்து மாநில அரசுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதனை பயன்படுத்தி சசிகலாவையும் சிறையில் இருந்து ரிலீஸ் செய்வதற்கான அனைத்து பணிகளையும் டிடிவி முடித்துவிட்டதாக கூறுகிறார்கள். கர்நாடக உள்துறையின் தடையில்லா சான்றிதழ் கிடைத்த உடன் சசிகலா ரிலீஸ் ஆவார் என்கிறார்கள். அநேகமாக ஜூலை மாதத்திற்குள் சசிகலா சென்னை வந்துவிடுவார் என்று கூறப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டிற்கு எதிரே சசிகலாவிற்கு புதிதாக வீடு தயாராகி வருகிறது. இப்படி சசிகலா ரிலீஸ் தினகரன் தரப்பை உற்சாகமாக்கியுள்ளது. ஒரு கட்டத்தில் திவாகரனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அவரை ஒதுக்கி வைத்த சசிகலா கடைசி வரை அவரை தன்னுடன் சேர்க்கவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக அதிமுகவில் தனது தொடர்புகளை புதுப்பிக்கும் வேலையில் திவாகரன் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் திருவாரூரில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த திவாகரன் அங்கு வந்த அமைச்சர் காமராஜூடன் தனியாக சென்று சிறிது நேரம் பேசியது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சசிகலா வருகை தமிழக அரசியலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று யூகங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் சசிகலா வசம் இருக்கும் ஜெயலலிதாவின் வீடியோக்கள் தான் அதிமுக பிரமுகர்கள் பலரின் தூக்கத்தை கலைப்பதாக சொல்கிறார்கள். மேலும் தற்போது அதிமுகவில் செல்வாக்குடன் இருக்கும் அனைவரும் ஒரு காலத்தில் சசிகலா சொல்வதை கேட்டு செயல்பட்டு வந்தவர்கள். எனவே ஜெயலலிதாவின் வீடியோ, அதிமுக பிரமுகர்களின் பல்வேறு ரகசியங்கள் என சசிகலா தமிழக அரசியலை ஒரு பரபரப்பான சூழலுக்கு கொண்டு போக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் திவாகரன் – அமைச்சர் காமராஜ் சந்திப்பு நடந்துள்ளது. இதனை தொடர்ந்து சசிகலாவை தொடர்பு கொள்ள திவாகரன் தரப்பு முயற்சிகள் செய்து வருவதாக கூறுகிறார்கள். ஒரு வேளை சசிகலா திவாகரனை சந்தித்தால் தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத அதிரடிகளை மக்கள் பார்க்க முடியும் என்கிறார்கள்.

%d bloggers like this: