இந்திய மக்களிடையே அதிகரித்துவரும் இதயச்செயலிழப்பு… காரணம் என்ன? – மருத்துவர் விளக்கம்

கடந்த 90 நாள்களில் இதய நோய் மற்றும் இதயச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் விகிதம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்னென்ன?

கொரோனா வைரஸ் அதிதீவிரமாகப் பரவிவரும் இந்நேரத்தில், என்.ஹெச்.எஃப்.ஆர் (National Heart Failure Registry) இந்தியாவிலுள்ள இதய நோயாளிகளிடையே ஓர் ஆய்வை மேற்கொண்டது. 6,437 இதய நோயாளிகள் 90 நாள்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்களின் இறப்பு விகிதம் கணக்கிடப்பட்டது. இவர்களில், 7 நாள் இறப்பு விகிதம் 6.4%, 30 நாள் இறப்பு விகிதம் 12.2% மற்றும் 90 நாள் இறப்பு விகிதம் 17.1% என்று நிகழ்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.

அதாவது, 6,437 இதய நோயாளிகளில் 6.4% பேர் அவர்களைக் கண்காணிக்கத் தொடங்கிய 7 நாள்களுக்குள் இறந்துள்ளனர். 6.4% பேர் ஒரு மாதத்திற்குள் இறந்துள்ளனர். 12.2% நோயாளிகள் மூன்று மாதங்களுக்குள் இறந்துள்ளனர். இந்த இறப்பு விகிதங்கள், சென்ற ஆண்டுகளை ஒப்பிடும்போது அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த லாக்டௌனில் இதயச்செயலிழப்பு மரணங்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவில் அதிகரித்துவரும் இதயச் செயலிழப்பு நோயாளிகள் பற்றியும், இதயநோய் உள்ளவர்கள் கொரோனா காலத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதயநோய் மருத்துவர் செல்வராணியிடம் பேசினோம்.

“ஒரு நோயால் ஏற்படும் இறப்பு விகிதம் 10 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், அந்த நோய் ‘கொடிய நோய்’ என வரையறுக்கப்படுகிறது. இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய் ஆகிய மூன்றும் ஒவ்வோர் ஆண்டும் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தக்கூடியவை. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் இதய நோய்களாலேயே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், அவர்களின் வாழ்க்கை முறை.

ஒருவருக்கு இதய நோய் ஏற்பட பின்வரும் 9 விஷயங்கள் காரணமாகலாம்…

இதயநோய் ஏற்பட காரணங்கள்

1) உயர் ரத்த அழுத்தம் (Hypertension)

2) நீரிழிவு நோய்

3) உடலில் தங்கும் கெட்ட கொழுப்பு

4) உடல் பருமன்

5) அதிக உடலியக்கம் இல்லாத வாழ்க்கை முறை

6) உணவு முறை

7) புகைபிடித்தல்

8) மதுப்பழக்கம்

9) மனஅழுத்தம்

ஒருவருக்கு உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்தால், அது இதயத்தைப் பாதிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது காரணம், நீரிழிவு நோய். ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துக்கொண்டே செல்லும்போது, அது அவரின் இதயம், சிறுநீரகம் போன்ற மற்ற உறுப்புகளை வெகுவாகப் பாதித்து செயலிழக்கவைக்கும்.

உடலில் தங்கும் அதிகப்படியான கொழுப்பும், உடல் பருமனும்கூட மாரடைப்பையும், இதயத் தசைகளில் பலவீனத்தையும் ஏற்படுத்தி இதயத்தின் செயல் வேகத்தைக் குறைத்துவிடும். பெரிதாக எந்த உடலியக்கமும் இல்லாமல், எப்போதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைசெய்தாலும் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, இதய நோய்கள் ஏற்படலாம்.

இதயச்செயலிழப்பு ஏற்பட மற்றொரு முக்கியக் காரணம், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள். அதிக கொழுப்புள்ள, எளிதில் செரிமானமாகாத உணவுகளும், ரசாயனப் பொருள்கள் அதிகமுள்ள நொறுக்குத் தீனிகளும் இதயச் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். புகைபிடித்தலும், மதுப்பழக்கமும் இதயத்திற்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கே கேடு என்பது நாம் அறிந்ததே.

மனஅழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றாலும் இதயம் பாதிக்கப்பட்டு பலவீனமான இதயம், மாரடைப்பு உள்ளிட்டவை ஏற்படலாம். நாம் இந்த விஷயங்களில் கவனம் செலுத்தினால் இதயநோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளலாம். இதன்மூலம் இதயநோயினால் ஏற்படும் இறப்பு விகிதமும் குறையும்.

லாக்டௌனில் இதயச்செயலிழப்பு மரணங்கள் அதிகரித்தது ஏன்?

லாக்டௌனில் இதயச்செயலிழப்பு மரணங்கள் அதிகரிக்க முக்கியக் காரணம், சரியான சிகிச்சை முறையைப் பின்பற்றாமல் இருப்பதுதான். கொரோனா பரவலுக்கு முன்புவரை வழக்கமாக மருத்துவமனைக்குச் சென்று ரெகுலர் செக்அப் செய்துவந்த இதய நோயாளிகளில் பெரும்பாலானோர், தற்போது கொரோனா அச்சத்தால் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சரிவர எடுத்துக்கொள்ளாததும் இதயச்செயலிழப்பு மரணங்களுக்குக் காரணமாகலாம். சிலருக்கு லாக்டௌனில் ஏற்பட்டிருக்கும் அதீத மன அழுத்தமும் இதய பலவீனத்தை உருவாக்கலாம். ஏற்கெனவே இதயநோய் இருந்து, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும்பட்சத்தில் அவர்களைத் தொற்றிலிருந்து குணப்படுத்துவது கொஞ்சம் சவாலான காரியமே.

கொரோனா காலம்… இதய நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய விஷயங்கள்!

Corona Treatment

இதயநோய், நீரிழிவு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும். இதனால் கொரோனா போன்ற வீரியமிக்க வைரஸால் தொற்று ஏற்பட நிறைய வாய்ப்பிருக்கிறது. இதயநோய் உள்ளவர்கள், இந்நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வெளியில் சென்றால் மாஸ்க் அணியாமல் செல்லக்கூடாது.

இவர்கள் தனிமனித இடைவெளியையும், தன் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

தங்களின் இதயக் கோளாறுக்கு மருத்துவர் பரிந்துரைத்துள்ள மாத்திரைகளை தினமும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஆனால், மருத்துவமனைக்குச் செல்ல பயமாக இருக்கிறது’ என்று நீங்கள் நினைத்தால் மொபைல் வீடியோ, ஆடியோ கால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெறக்கூடிய ‘டெலிமெடிசின்‘ முறையைப் பயன்படுத்தலாம்.

மார்புவலி, மாரடைப்பு போன்றவை ஏற்படும்பட்சத்தில், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியது அவசியம்.

உடனடியாகச் செய்தே ஆகவேண்டிய இதய அறுவைசிகிச்சை பற்றி மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் முடிவெடுக்கலாம். அவசரம் இல்லையென்றால், கொரோனா காலம் முடியும்வரை அறுவைசிகிச்சைகளைத் தள்ளிப்போடுவது நல்லது” என்றார் இதயநோய் மருத்துவர் செல்வராணி.

%d bloggers like this: