சாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்!

இளநீர் ஒன்று எடுத்து வையும். வந்துவிடுகிறேன்’’ – போனில் சொல்லி முடித்த சற்று நேரத்திலேயே ஆஜரானார் கழுகார். ‘‘கடந்த ஜூ.வி இதழில் நீங்கள் சொன்னதுபோலவே சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவித்துவிட்டார்கள். ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை கடுமையாக அமல்படுத்தப் போகிறார்களாம். தகவலை முன்கூட்டியே சொன்னதற்கு சபாஷ்’’ என்ற கழுகாரிடம், ‘‘அதன் பின்னணியில் என்ன நடந்தது?” என்றபடி செவ்விளநீரை நீட்டினோம். இளநீரைப் பருகிக்கொண்டே தொடர்ந்தார் கழுகார்.

‘‘ஜூன் 15-ம் தேதி அன்று, மருத்துவக்குழு முதல்வரைச் சந்தித்துப் பேசியது. அதிகாரிகள் மட்டத்தில் வாடஸ்அப் குரூப்பில் பகிரப்பட்டதாக நீங்கள் எழுதிய தகவல்களை அங்கே விரிவாகப் பேசியிருக்கிறார்கள். ‘சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்துக்குச் சென்றுகொண்டிருப்பதால், மீண்டும் ஓர் ஊரடங்கு அதி முக்கியம்’ என்று மருத்துவக்குழு வலியுறுத்தியுள்ளது.”

‘‘ம்!’’

‘‘தவிர மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் `நாடு முழுவதிலும், 50 மாவட்டங்களில் முழு ஊரடங்கைக் கொண்டுவர வேண்டும்’ என்று ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது. அவற்றில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் அடங்கும். ஜூன் 13-ம் தேதி அன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும், ‘ஊரடங்கைக் கடுமையாக்காமல் நோயைக் கட்டுப்படுத்த முடியாது’ என்று தனியாக அறிக்கையும் கொடுத்திருந்தார். இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 17-ம் தேதியிலிருந்தே ஊரடங்கைக் கொண்டுவர எண்ணினார்.’’

‘‘பிறகு ஏன் 19-ம் தேதி என்று முடிவானது?’’

‘‘ஏற்கெனவே செய்த தவற்றைச் செய்யக் கூடாது அல்லவா… ‘ஒரு நாள் இடைவெளியில் ஊரடங்கை அறிவித்தால், பொருள்களை வாங்க மக்கள் குவிந்து விடுவார்கள்’ என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். அதனால், மூன்று நாள்கள் இடைவெளிவிட்டு ஊரடங்கை அறிவித்துள்ளார்கள். டெல்லியிலும் இதே முறை பின்பற்றப்படும் என்கிறார்கள். கடந்த முறையை விட இந்த முறை ஊரடங்கில் காவல்துறை ஏக கெடுபிடிகள் காட்டப்போகிறதாம்.’’

மிஸ்டர் கழுகு: சாலை ஒப்பந்ததாரர்களை மிரட்டும் அமைச்சர்!

‘‘கொரோனா விவகாரத்தை மத்திய அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறதாமே?’’

‘‘கண்காணித்து என்ன செய்ய… கடந்த வாரம் மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை தரப்பிலிருந்து அறிக்கை வந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சியில் இருக்கிறதாம் மத்திய அரசு. ‘அடுத்த 80 நாள்களில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை லட்சம் லட்சமாக எகிறும்’ என்று அறிக்கையில் சொல்லியிருக் கிறார்கள். இறப்பு விகிதமும் அதிகரிக்குமாம். குறிப்பாக, இந்தியாவில் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் வீரியம் இப்போது அதிகரித்துள்ளது என்கிறார்கள். இதே கருத்தைத்தான் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் குறிப்பிட்டிருந்தார்.’’

‘‘தி.மு.க-வில் சில மூத்த தலைவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாமே?’’

‘‘ஆமாம். ‘கட்சியைப் புதிதாகக் கட்டமைக்க வேண்டும். இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் அவரின் மருமகன் சபரீசன் சொன்னதாகத் தகவல் கசிந்துள்ளது. மூத்த தலைவர்கள் தரப்பிலோ, ‘வயதானவர்களால்தான் கருணாநிதி முதல்வரானார். நீங்கள் 2016-ம் ஆண்டு தேர்தலைக் கையிலெடுத்து தோல்விதானே கிடைத்தது’ என்று வருத்தத்தோடு சொன்னார்களாம்.”

‘‘அ.தி.மு.க முகாமில் புது வாரிசு ஒன்று களமிறங்கப் போகிறதாமே?”

‘‘பலே… உங்களுக்கு அந்தத் தகவல் வந்து விட்டதா! ஓ.பி.எஸ்ஸைத்தான் சொல்கிறீர்கள்… புரிகிறது. ஆம், மூத்த மகன் ரவீந்திரநாத் குமாரை தேனி எம்.பி ஆக்கியதைத் தொடர்ந்து, இளைய மகன் ஜெயபிரதீப்புக்கும் கட்சியில் பொறுப்பு கொடுத்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாகியிருக்கிறார் ஓ.பி.எஸ். கட்சிரீதியாக தேனி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றை சையது கானுக்கும் மற்றொன்றை ஜெயபிரதீப்புக்கும் கொடுக்கத் திட்டமிட்டுள் ளாராம். கம்பம், போடி தொகுதிகள் சையது கானுக்கும் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதிகள் ஜெயபிரதீப்புக்கும் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள்.’’

“தமிழக பா.ஜ.க-வில் நிர்வாகிகள் மாற்றம் வரப்போகிறதாமே?’’

‘‘தலைவர் பதவிக்கு ஒருவர் நியமிக்கப் பட்டவுடன் நடைபெறும் வழக்கமான மாற்றம்தான். கடந்த வாரம் டெல்லி சென்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன், தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவிடம் புதிய நிர்வாகி களுக்கான பட்டியலைக் கொடுத்துவிட்டு வந்துள்ளார். பொதுச் செயலாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளில் பாதிப் பேர் மாற்றப்படலாம். தலைமையிட நிர்வாகத்தில் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்புகள் அளிக்கப்படலாம். விரைவில் அறிவிப்பு வெளியாகிறதாம். தேசிய அளவிலும் சில மாற்றங்களுக்கு அந்தக் கட்சி தயாராகிறது. ஹெச்.ராஜாவுக்கு தேசியச் செயலாளர் பதவியையே மீண்டும் அளிப்பதா அல்லது வேறோர் அலங்காரப் பதவியை அளித்துவிட்டு ‘அமைதி’யாக்குவதா என டெல்லி தலைமை தீவிர யோசனையில் இருக்கிறதாம்.’’

‘‘தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்ட கே.பி.ராமலிங்கம் முதல்வர் எடப்பாடியை சந்தித்திருக்கிறாரே?’’ என்ற கேள்வியுடன் ஹாட் பாக்ஸிலிருந்த கொழுக்கட்டையைச் சுடச்சுடத் தட்டில் நிரப்பினோம். “டயட்டில் இருக்கிறேன் என்பது தெரியாதா?” என்று பொய்க் கோபம் காட்டிய கழுகார் கைநிறைய கொழுக்கட்டையை அள்ளிக்கொண்டு, ‘‘விவசாயிகள் பிரச்னை என்று ராமலிங்கம் விளக்கமளித்தாலும், அரசியல் ரீதியாகத்தான் அதிகம் பேசப்பட்டதாம்’’ என்று கொழுக்கட்டைகளைச் சுவைத்தபடியே தொடர்ந்தார்.

“தி.மு.க-வில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு எந்தெந்த நிறுவனங்களிலிருந்து பணம் வசூலித்தார்கள் என்று மாவட்டவாரியாக கே.பி.ராமலிங்கம் லிஸ்ட் எடுத்துள்ளாராம். இதுபோக உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத் துறைகளில் டெண்டர் எடுத்துள்ள தி.மு.க நிர்வாகிகளின் பட்டியலை ராமலிங்கத்திடம் முதல்வர் தரப்பு தந்துள்ளது. இரண்டையும் வைத்துக்கொண்டு தி.மு.க-வைக் கடுமையாகத் தாக்குவதுதான் கே.பி.ராமலிங்கத்தின் திட்டமாம். ‘நாம் நேரடியாகத் தாக்குவதைவிட, அவர்களில் ஒருவராக இருந்தவரே தாக்கினால்தான் எடுபடும்’ என்று ராமலிங்கத்துக்குக் கொம்புசீவி விட்டிருக்கிறது எடப்பாடி தரப்பு.’’

கே.பி.ராமலிங்கம் - சபரீசன் - மு.க.ஸ்டாலின்

கே.பி.ராமலிங்கம் – சபரீசன் – மு.க.ஸ்டாலின்

‘‘டெல்டாவில் அமைச்சர் ஒருவரின் மிரட்டல் விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறதே கவனித்தீரா?”

‘‘தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கியச் சாலைகளை ஐந்து ஆண்டுகள் பராமரிக்கும் பணிகளுக்காக ‘பர்பாமன்ஸ் பேஸ்டு மெயின்டனன்ஸ் கான்ட்ராக்ட்’ (பி.பி.எம்.சி) என்ற புதிய ஆன்லைன் டெண்டர் முறையை தமிழக அரசு கொண்டுவந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 21 முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, ‘பேக்கேஜ் 2’ எனப்படும் கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளின் ஒப்பந்தப்புள்ளியை ஆன்லைனில் அரசு நடத்தி யுள்ளது. வழக்கு இருப்பதை ஒப்பந்ததாரர்கள் சுட்டிக்காட்டியதால், டெண்டர் உத்தரவை அரசால் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையே ‘பேக்கேஜ் 1’ எனப்படும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கான டெண்டர் வரும் ஜூலை 21-ம் தேதி ஆன்லைனில் நடைபெறும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது.’’

“மேற்கொண்டு சொல்லும்!’’

“21 ஒப்பந்ததாரர்களும் வழக்கை வாபஸ் பெற்றால் மட்டுமே அரசு நினைத்தபடி ஒப்பந்தங்களை பி.பி.எம்.சி முறையில் வழங்க முடியும். இதற்காக டெல்டா அமைச்சர் ஒருவர் வழக்கு தொடுத்த ஒப்பந்ததாரர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு மிரட்டிவருகிறாராம். இளவரசன் என்கிற முதல்நிலை ஒப்பந்ததாரரை மணல் திருட்டு வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சமீபத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது. இளவரசன் கைதைக் காண்பித்தே மற்ற ஒப்பந்ததாரர்களையும் மிரட்டுவதாகத் தகவல். இந்த விவகாரம் டெல்டாவில் தீயாகப் பரவுகிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: