சூரிய கிரகணம் – என்ன செய்ய வேண்டும்?

ஜூன் 21 சூரிய கிரகணம்

சூரிய கிரகணம், நம் முன்னோரை வழிபட கிடைத்த அரிய வாய்ப்பு. கடவுளை மனத்தில் இருத்தி, ‘தியானம்’ செய்யக் கிடைத்த இடைவேளை.

‘இந்தக் குறுகிய கால தவம், நல்ல பலன் அளிக்கும்!’ என்று தர்ம சாஸ்திரம் கூறும்.

வெளி உலகத்திலிருந்து விலகிக் கொஞ்ச நேரமாவது நிம்மதி பெறும் வேளையைத் தருகிறது

கிரகணம். ஆதவனின் மறைவுக்குக் காரணம் சந்திரனா, ராகுவா என்ற சச்சரவு நமக்குப் பயனில்லாதது. மறைவு, நமக்கும் உலகத்துக்கும் நல்லதல்ல. அந்த வேளையில் உணவுக் கட்டுப்பாடும், உள்ளக் கட்டுப்பாடும் அவசியம். மக்கள் குழாம் வினையில் இருந்து விடுபட்டால், உலகமும் தானாகவே விடுபட்டுவிடும்.

சூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும்?

`சுவர்பானு என்னும் அரக்கன் இருளால் சூரியனை மறைத்தான். உயிரினங்களை விழிப்படையச் செய்து இயக்குபவன் சூரியன். அவனுடைய கிரணங்களுக்கு ஏற்பட்ட செயற்கைத் தடை, உயிரினங்களின் வளர்ச்சியைப் பாதிக்கும். எனவே, ஆதவனை மறைக்கும் இருளை அகற்ற, வேதத்தின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினர் தேவர்கள். அவர்கள் தவம் பயனளிக்க ஆரம்பித்தது. சூரிய பிம்பத்தில் கரு வட்டம் களையிழந்து சிவப்பு நிறம் தோன்ற ஆரம்பித்தது. தேவர்களின் நம்பிக்கை வலுப்பெற்றது.

சிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, தூய வெண்மை தென்பட்டது. மறைவில் இருந்து வெளிவந்தான் ஆதவன். உயிரினங்களின் செயல்பாடு தொடர ஆரம்பித்தது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு (சுவர்பானு ராஸீர: சூர்யம் தமஸா… வித்யத்… கிருஷ்ணா விரபவத் யத்விதீயம் ஸபல்குளி யத்திருதீயம் ஸாபலஷி).

கிரகணத்தின் விளக்கம்போல் அமைந்திருக்கிறது இந்தப் பகுதி. விலங்கினங்களில் கிரகண கால மாறுதல் நன்றாகவே தென்படும். சூரிய கிரகணக் காலத்தில் இருட்டிவிட்டதாக எண்ணி, பறவைகள் கூட்டுக்குத் திரும்புவதும் உண்டு.

சூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும்?

விலங்கினங்களில் மன மாற்றம் தென்படும். புழு பூச்சிகளிலும் தெம்பு வலுக்கும். அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) போன்ற மனோ வியாதிகளில் சில நொடிகள் உடல் இயக்கம் ஸ்தம்பித்து விடுகிறது. பாதிக்கப்பட்டவரை அந்த இடையூறு எப்பேர்ப்பட்ட துயரத்தில் ஆழ்த்துகிறது என்பது நமக்குத் தெரியும். இயற்கைக்கு மாறாக, இயக்கம் தடைப்பட்டுத் திரும்பவும் தொடரும். தற்காலச் சூழலில் மின்சாரம் தடைப்பட்டால், குழாயில் தண்ணீர் தடைப்பட்டால் எவ்வளவு படபடப்பு… நினைத்துப் பாருங்கள்.

காற்று தடைப்பட்டால் என்னவாகும் என்பதை வாயு பகவான் நமக்கு உணர்த்தியிருக்கிறார். இந்திரனது வஜ்ராயுதத்தால் அடிபட்டு நினைவிழந்து பூமியில் சாய்ந்தான் வாயு புத்திரனான ஆஞ்சநேயன். இதைக் கண்டு வாயு பகவான், வெகுண்டு குழந்தையைக் கையில் ஏந்தி குகைக்குள் ஒளிந்துகொண்டான். காற்றின் பரவல் நின்றுவிட்டது. உயிரினங்கள் தவித்தன. மும்மூர்த்திகள் ஓடி வந்தனர். வாயு பகவானைச் சமாதானப்படுத்தி இயங்க வைத்தனர்.

சூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும்?

ஒரு காலத்தில் வறட்சி தோன்றியது. தவித்தன உயிரினங்கள். காட்டிலிருந்து ரிஷ்ய சிருங்க முனிவர் வரவழைக்கப்பட்டார். அவரது வருகை, மழையை வரவழைத்தது. பற்றாக்குறை பறந்தது. ஆகவே, காற்று, நீர், ஒளி… இந்த மூன்றும் வாழ்க்கைக்குத் தேவை.

கிரகணத்தில் ஒளி தடைப்படுகிறது. அதன் விளைவிலிருந்து விடுபட வேண்டும். தேவர்கள், ஒரு தடவை கிரகண கால துயரிலிருந்து விடுபட வேண்டி தவம் இயற்றினார்கள். அதைத் தொடர வேண்டியது நமது பொறுப்பு. பாதிக்கப்படுபவர் நாம். நாம்தான் செயல்பட வேண்டும். கிரகணம் ஆரம்பிக்கும் வேளையில் நீராட வேண்டும். மாற்றுடை அணிந்து திலகமிட்டு, தியானத்தில் ஈடுபட வேண்டும். தியானம் செய்ய இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு கொடை வழங்கி வழிபடலாம். முன்னோரை ஆராதனம் செய்ய வேண்டும். இயலாதவர்கள் முன்னோரை எண்ணி கொடை வழங்கலாம். ஒன்றும் இயலாதவர்கள், கடவுள் நாமத்தை ஜபிக்கலாம்.

திரும்பவும் சிறப்பு நீராடி உணவு உட்கொள்ள லாம். தர்ம சாஸ்திரம் நமது மெய்க்காப்பாளன். பட்டினி போட்டுத் துன்புறுத்துபவன் அல்ல. கிரகண வேளையில் ஆதவனது கிரணம் பரவாததால், வயிற்றிலிருக்கும் உண்ட உணவு செரிக்கத் தாமதமாகும். கிரணத்தின் தாக்கம் தடைப்பட்டதால், வயிற்றிலிருக்கும் சூடு (பித்த நீர்) வலுவிழந்து விடும். அந்த வேளையில் மந்தமான செயல்பாடு பல பிணிகளைப் பிற்பாடு தோற்றிவைக்கும். பவர் ஹவுஸில் மின்சார ஓட்டம் தடைப்பட்டால், நமது வீட்டு மின்சார விளக்குகள் பாதிக்கப்படும். அட்டகாசமாக எரியும் விளக்குகள் மின்மினிகளாகத் தோற்றமளிக்கும்.

சூரிய கிரகணம் - என்ன செய்ய வேண்டும்?

மேகங்களை உருவாக்கியவன் ஆதவன். நீருண்ட மேகங்கள் ஆதவனை மறைத்து விடும். மப்பும் மந்தாரமும் தென்படும் வேளையில் உண்ட உணவு ஜீரணமாகத் தாமதமாவது கண் கூடு. ஜீரணமாகாத உணவு, வயிற்றில் தங்கி விட்டால், பிணிகள் தானாகவே தேடி வரும்.

‘உலகத்தின் ஆன்மா ஆதவன்!’ என்று சொல்லும் வேதம் (சூரிய ஆத்மா ஜகதஸ்…) உலகத்தை இயக்குபவன் அவன். அவன் இயக்கத்துக்கு வெளியிலிருந்து தடை தோன்றினால், வெளியே இருக்கும் நாம்தான் தடையை அகற்ற வேண்டும்.

‘கிரகண வேளை – கருவில் இருக்கும் சிசுவுக்கு பாதுகாப்புக் குறைவு’ என்று விஞ்ஞானமும் சொல்ல ஆரம்பித்து விட்டது. குறைப் பிரசவத்தைச் சந்திக்கும் குழந்தையை அதிகமான ஒளி பாது காக்கிறது. கண்ணுக்குப் பார்க்கும் திறன் இருக்கிறது. ஆனால், சூரிய ஒளியின் உதவியால்தான் பார்க்க இயலும். உலகத்தின் கண், ஆதவன்.

சூரியனை உலகின் ஒளிவிளக் காகப் பார்க்கிறார் வராஹமிஹிரர் (த்ரை லோக்ய தீபோரவி:). மற்ற பொருள்கள் அத்தனையும் அவனிடமிருந்து ஒளி பெற்றுச் செயல்படுகின்றன. மழைக்கும் வெப்பத்துக்கும் காரணமான அவனை தைப் பொங்கலில் வழிபடுகிறோம். அவனைக் கண்ணுக்குப் புலப்படும் கடவுள் என்று போற்றும் புராணம்.

அவன் உலகத் தலைவன், தொண்டனும்கூட. தனது வெப்பத்தால் உலகத்தில் தோன்றும் அத்தனை நச்சுப் பொருள்களையும் களைந்து விடுகிறான். அவனின்றி மழை இல்லை; குளிர் இல்லை. பனிக்கட்டிகளை அவன்தான் தண்ணீராக்க வேண்டும். ஆறு பருவங்களும் அவன் படைப்பு.

சூரிய கிரகணம் பிடித்த உடன் நம் முன்னோருக்கு ஆராதனம் ஆரம்பிக்கலாம். தாங்க முடியாத வெப்பத்தோடு இருக்கும் ஆதவனை ராகு மெள்ள மெள்ளத்தான் விழுங்க இயலும். சூட்டை இதமாக்கி… இதமாக்கி விழுங்க வேண்டும். கால அவகாசம் அதிகமாக இருக்கும் அந்த வேளையில் பதற்றமில்லாமல் முன்னோரை வழிபடலாம். கிரகணம் விடும்போது சீக்கிரமாகச் செயல்படுவான். சூடு தாங்காததால், சீக்கிரமாக விடத் தோன்றும்.

சூரிய கிரகணத்தில் கிரகணம் பிடித்த உடனும், சந்திர கிரகணத்தில் பிடித்து விட ஆரம்பித்தவுடனும் தேய்பிறை தென்படுவதால், அது சிறந்ததாகக் கருதப்படுகிறது. கிரகணங்கள் அடிக்கடி நிகழாது, எப்போதாவது ஒரு முறை ஏற்படுவதால், அந்த வேளையை அலட்சியம் செய்யாமல் நல்ல காரியங்களை நிகழ்த்தி நிறைவு செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் எண்ணுகிறது.

%d bloggers like this: