பா.ஜ.க.,வுடன் இணைகிறதா தி.மு.க..? டோட்டலாக சரண்டரான மு.க.ஸ்டாலின்..!

பாராமுகம் காட்டி வந்த திமுக இப்போது கூட்டணிக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளது என்றே கூறப்படுகிறது.

காஷ்மீர் விவகாரம், குடியுரிமை சட்டம் என பல விவகாரங்களில் பாஜகவை எதிர்த்து வந்த திமுகவின் நடவடிக்கை பல்வேறு ஆச்சர்யங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மத்திய அரசு எடுத்த சில நடவடிக்கைகளில் காங்கிரஸை விட எதிர்ப்பு காட்டிய திமுக தலைவர், இப்போது சீனாவுடனான விவகாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிக்கள் தாம்தூம் எனக் குதிக்க, பவ்யம் காட்டி பாஜகவுக்கு ஆதரவு கொடுத்து வரும் திமுகவின் நிலைப்பாடு பல்வேறு வியூகங்களுக்கு வித்திட்டுள்ளது. சீன விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் உரையை பிரதமர் மோடியே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படியொரு பணிவு… எதிர்பாராத ஆதரவு. அட, இப்படி பேசுவது மு.க.ஸ்டாலின் தானா என திமுகவினருக்கே சந்தேகம் வந்திருக்கும். எப்போதும் எதிர்ப்பவர் திடீரென இசைப்பாட்டு பாடினால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது. இவருக்குள் இப்படி ஒரு நாட்டு பற்றா என்று ஆச்சரியமூட்டும் வகையில் , திமுக தலைவர் ஆற்றிய உரையில், ‘’மாண்புமிகு பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், “உயிரிழந்த இராணுவ வீரர்களின் தியாகம் ஒரு போதும் வீண் போகாது”. அந்தத் தியாகங்கள் இந்த நாட்டை மேலும் மேலும் ஒருமைப்படுத்தி- நாட்டு மக்களுக்கு வலிமையை ஊட்டும். இன்று நாம் மிக கடினமான தருணத்தில் இருக்கிறோம். ஒருபக்கம் கோவிட்-19 பேரிடருடனான போராட்டம்; இன்னொரு பக்கம் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சி.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை, இதுபோன்ற காலங்களில் நாட்டின் நலன் சார்ந்து நிற்கும் இயக்கம். இங்கே பல்வேறு அரசியல் இயக்கங்கள், வெவ்வேறு கருத்தியலுடன் இருக்கலாம். நாட்டுப் பற்று என வந்தால் நமது குடிமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஒரு தாய் பிள்ளைகளாக ஒற்றுமையுடன் இணைவோம். இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்; அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. திமுகவை தோற்றுவித்த அண்ணா அவர்கள் “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்”என்றார். எனவே, நமது வீடான இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க; நாட்டிற்கே முன்னுரிமை.
Image

தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு. திமுகவை பொருத்தவரை, 1962 இந்தியா – சீனப் போராக இருந்தாலும், 1971 இந்தியா – பாகிஸ்தான் போராக இருந்தாலும், 1999-ல் கார்கில் போராக இருந்தாலும், நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம்.

நேரு அவர்களாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தி அவர்களாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம். இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் பிரதமர் மோடியை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நாட்டைப் பாதுகாக்கத் திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழக மக்களும் முதலில் வருவார்கள்.
Image

“அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்” என்ற பிரதமர் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன். “இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்றும் பிரதமர் அவர்கள் கூறியிருப்பதை திமுக சார்பில் நான் வரவேற்கிறேன்.

எனவே, இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, மாண்புமிகு பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம்.ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்’’ என நாட்டுப்பற்றை வெளிக்காட்டி நங்கூரம் பாய்ச்சிவிட்டார் ஸ்டாலின்.
Image

அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது பாஜகவுடனான கூட்டணிக்கு தொடக்கப்புள்ளிதான் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். இத்தனைக்கும் தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை திமுக. திடீரென மோடிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு ஸ்டாலின் எதிர்ப்புத் தெரிவிக்கும் அமைந்து விட்டது ஸ்டாலினின் பேச்சு. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ’’ லடாக் விவகாரத்தில் உளவுத்துறையின் தோல்வியா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு பாஜக அரசை தொலைத்தெடுத்தார் சோனியா காந்தி. ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் சொல்லப்போனால் காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கே எதிர்ப்பு தெரிவித்து அட்வைஸ் செய்யும் வகையில் அமைந்திருந்தது மு.க.ஸ்டாலினின் உரை.
Image

கைகட்டி, பணிவுகாட்டி, ஆதரவு தெரிவித்த மு.க.ஸ்டாலினின் பாங்கை பார்த்த பிறர் மு.க.ஸ்டாலின் மொத்தமாக மோடியிடம் சரண்டராகி விட்டார். இது கூட்டணிக்கான அச்சாரம். பாஜகவுடன் திமுக கூட்டணிக்காக காய் நகர்த்துகிறது என்கிறார்கள். அதிமுகவுடன் பாஜக இணக்கமாக இருந்தாலும் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கூட்டணிக்கு திமுகவைதான் விரும்புகிறது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவரை நலம் விசாரிக்க பிரதமர் மோடி கடைசிவரை வரவில்லை. ஜெயலலிதா இறந்த பிறகு, அஞ்சலி செலுத்துவதற்கு மட்டும் ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்தார். ஆனால், கலைஞர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது, கோபாலபுரம் வீட்டிற்கே வந்து பார்த்தார். டெல்லியில் தன் வீட்டில் வந்து தங்கி ஓய்வு எடுக்குமாறு கலைஞரிடம் கோரிக்கை ஒன்றைக்கூட முன் வைத்தார். அதுபோல, கலைஞர் இறந்தபிறகு, ராஜாஜி ஹாலுக்கு நேரில் வந்து, கலைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார் பிரதமர் மோடி.
Image

நாடாளுமன்றத்தில் எந்தப் பொறுப்பும் வகிக்காத கலைஞருக்காக, பி.ஜே.பி மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் நாள் முழுதும் ஒத்திவைத்தது. நாடாளுமன்றத்தில் எந்தப் பொறுப்பும் வகிக்காத ஒருவருக்காக, இரண்டு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது, அதுவே முதல்முறை. ஆக அப்போது முதலே திமுக கூட்டணியை விரும்பியது பாஜக. ஆனால், பாராமுகம் காட்டி வந்த திமுக இப்போது கூட்டணிக்கு இசைவு தெரிவிக்கும் வகையில் தனது போக்கை மாற்றிக் கொண்டுள்ளது என்றே கூறப்படுகிறது. திமுகவின் தேர்தல் பிரச்சார வியூகர் பிரஷாந்த் கிஷோர் மூலம் பாஜக கூட்டணிக்கு பேசி வருவதாகவும், பி.கே., ஸ்டாலினின் மனதை மெல்ல கரைத்து விட்டார். ஆகவே பாஜக- திமுக கூட்டணி உறுதி என்றும் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

%d bloggers like this: